கோபிசெட்டிபாளையம்: சேற்றில் சிக்கிய யானை-மீட்க சென்ற ஜே.சி.பி-யும் சிக்கியது
1 min read
Gobichettipalayam: Elephant stuck in the mud; JCB sent to rescue it also gets stuck
11/10/2026
கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி குண்டேரிபள்ளம் அணை பகுதிக்கு தொடர்ந்து படையெடுத்து வருகின்றன.இந்த நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை ஒன்று, அணைப்பகுதியில் நீர் வடிந்த தரைப்பகுதியில் இருந்த சேற்றில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது. விடிய விடிய சேற்றில் இருந்து வெளியேற முடியாமல் அந்த யானை தவித்தபடி பிளிறியுள்ளது.
இன்று காலை அணை பகுதிக்கு வந்த பொதுமக்கள், யானை சேற்றில் சிக்கி தவிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர்கள், வனப் பணியாளர்கள் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.சேற்றில் புதைந்து பலவீனமடைந்திருந்த யானையை கயிறுகள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அணை பகுதியின் நீர் வடிந்த தரைப்பகுதி சேரும் சகதியுமாக இருந்ததால் யானையை மீட்க முயன்ற ஜே.சி.பி எந்திரமும் திடீரென சேற்றில் சிக்கிக் கொண்டது.
தற்போது சேற்றில் சிக்கிய பெண் யானையை பத்திரமாக மீட்பதற்கான மாற்று ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வனத்துறையினர் யானைக்கு முதலுதவி வழங்கவும் அதை சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளவும் சத்தியமங்கலத்தில் இருந்து மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.