சிவகாசியல் சமூக வலைதள செயல்பாட்டாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை
1 min read
Minister holds consultation with social media activists in Sivakasi.
13.10.2026
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் சமூக வலைதள செயல்பாட்டாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில்தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசியதாவது:-
சிவகாசியை சிறந்த ஒரு நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு அரசு அலுவலர்கள் மற்றும் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
சமூக வலைத்தள செயல்பாடுகள் தற்போது கருத்துக்களை மிகவும் வெளிப்படைத்தன்மையோடு எடுத்துரைத்தீர்கள். ஜனநாயக நாட்டில் அனைவரும் தங்களது கருத்துக்களை கூறலாம் என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு கடைபிடிக்கிறது.
இந்த கருத்து சுதந்திரத்தை நல்ல வழியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளத்தில் பொய்யாக பரப்பப்படும் சிறிய தகவல்கள் கூட மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றது. சமூக வலைத்தள செயல்பாட்டாளர்கள் தவறான தகவல்களை ஆராய்ந்து மக்கள் பயன்பாட்டிற்கான உண்மையான செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.
மேலும் தற்போது இணையதள உலகமாக இருப்பதால் மக்கள் தங்கள் கோரிக்கைகளை இணையதளம் வாயிலாகவே பதிவு செய்கின்றனர். உண்மையான குறைகளை பதிவு செய்யும்போது அது பணி புரியும் அரசு அலுவலர்களுக்கும் அதனை சரி செய்வதற்கான பணிகள் எளிதாகின்றன. எனவே பொதுமக்கள் சமூக வலைத்தள செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நகரின் குறைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முடியும்.
இதுபோன்று வரும் காலங்களிலும் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தி நிவர்த்தி செய்து கொடுக்கப்படும்.
சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் திறந்த வெளி மற்றும் வாறுகால்களில் குப்பை கொட்டுதலை தவிர்ப்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தங்களுடைய பகுதிகளிலே இதனை ஒவ்வொருவரும் கடைப்பிடித்து அதனை பகிர்வதன் மூலம் மற்றவர்களையும் திடக்கழிவு மேலாண்மையில் ஊக்குவிக்க முடியும். திடக்கழிவு மேலாண்மையை பொறுத்தவரை ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்து செயல்பட்டால் தான் அது சாத்தியமாகும்.
சிவகாசி மாநகரில் உள்ள சாட்சியாபுரம் பாலத்திற்கு கீழ் பூங்கா அமைப்பதற்கும், பெரியகுளம் கண்மாய் சுற்றி ஒரு பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதற்கும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற எண்ணற்ற முன்னெடுப்புகள் நகரின் வளர்ச்சிக்காக எடுக்கப்படவுள்ளன. இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான், சிவகாசி ஆணையாளர் கண்ணன், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.காளிராஜ், மாவட்ட சுகாதார அலுவலர்(சிவகாசி) மரு.இந்திரா, துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அனில்குமார், திட்ட இயக்குநர்(ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள்) ஷீலா சுந்தரி, அரசு அலுவலர்கள், சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.