அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா.. உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
1 min read
Resignation of 6 AIADMK MLAs: High Court Verdict
13/10/2026
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களைச் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டார். சபாநாயகரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
கடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்கள் நிலுவையில் இருந்தபோது, சபாநாயகர் அவசர அவசரமாக ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. எஸ். ஜெயக்குமார், கே. மரகதம் குமரவேல், பி. சத்தியபாமா, டாக்டர் இசக்கி சுப்பையா, சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் ராஜினாமாக்களை ஏற்றது சட்டவிரோதம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த வழக்கில், தலைமை நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அதேவேளையில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கை குறித்து அடுத்த 2 மாதங்களுக்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க கூடாது என்று விதியில்லை என்று -உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.