கவர்னர் அர்லேகருடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு
1 min read
Chief Minister Vijay meets Governor Arlekar
15/10/2026
தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படவில்லை. மாறாக கேரள மாநில கவர்னர் ஆர்.வி.அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இவர்தான் முதல்-அமைச்சர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முழுநேர கவர்னர் நியமிக்கப்படவில்லை.
இதற்கிடையே கடந்த ஆகஸ்டு மாதம் ஆந்திர மாநில முன்னாள் முதல்- மந்திரி கிரண் ரெட்டி தமிழகத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக பேசப்பட்டது. அப்போது பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் இருந்தார். அவர் வந்த பிறகு இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி நேற்று முன் தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவின் படி தமிழ்நாட்டுக்கு கேரள கவர்னர் ஆர்.வி.அர்லேகரே புதிய கவர்னராக, அதாவது முழு நேர கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் ஒருநாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். அதன்பின்னர் இந்த அதிரடி மாற்றம் நடந்திருந்தது.
கவர்னர் அர்லேகருக்கு முதல்-அமைச்சர் விஜய் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதனிடையே, தமிழகத்தின் முழு நேர கவர்னராக அர்லேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், தமிழகத்தின் முழுநேர கவர்னராக பொறுப்பேற்றுள்ள அர்லேகரை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்துள்ளார். இதற்காக கிண்டி மக்கள் பவனுக்கு வந்த அவர், கவர்னர் அர்லேகரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.