டெல்லியில் தடையை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி; அபிஜித் தீப்கே கைது
1 min read
‘Cockroach Janata Party’ holds rally in Delhi in defiance of a ban; Abhijit Dipke arrested
16/10/2026
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, டெல்லி கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு தேசியக் கொடியை உயர்த்திப் பிடிப்போம் என்ற பெயரில் பேரணி நடத்த அக்கட்சி அழைப்பு விடுத்தது.
இந்தப் பேரணியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறிய டெல்லி போலீசார், பேரணியை ரத்து செய்யுமாறு அபிஜீத் தீப்கேவுக்கு அறிவுறுத்தினர். மேலும், கனாட் பிளேஸ் பகுதியில் பிஎன்.எஸ் சட்டம் 163-வது பிரிவின்கீழ் தடை உத்தரவுகள் அமலில் இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, டெல்லியில் அபிஜீத் தீப்கே தங்கியிருந்த பகுதிக்கு பெண் காவலர்கள் உள்பட 15 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்றனர். போலீஸ் அனுமதி அளிக்காததால், போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று அபிஜீத் தீப்கேவுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
போராட்டத்திற்கு செல்லக் கூடாது என அபிஜீத் தீப்கேவிற்கு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் போராட்டத்திற்கு செல்ல முயன்றதால் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டார்.
டெல்லி கனோட் பிளேஸ் பகுதியில் கட்டுப்பாடுகள் போடப்பட்டு இருந்தாலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பலரும் மூவர்ண கொடியுடன் அங்கு திரண்டுள்ளனர்.மாணவர் அமைப்புத் தலைவர் நேஹாரா போராவும் போராட்டக் களத்திலேயே தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.