சாதி ரீதியில் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட நெல்லை வாலிபருக்கு நூதன தண்டனை
1 min read
Unconventional punishment for a Nellai youth who posted caste-based ‘Reels’
18.10.2026
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாதி ரீதியிலான அடையாளங்களுடன் கூடிய வீடியோக்களை எடுத்து, அதைச் சமூக வலைதளங்களில் பரவ விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், அவர்கள் அங்கு அமைத்துள்ள ‘பிறை’ எனப்படும் தங்கும் இடம் (ஷெட்) பறிமுதல் செய்யப்படும் என்றும், அடுத்த ஆண்டு தங்கும் ஷெட் அமைக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் (வயது 20) என்பவர், கடந்த 2025-ம் ஆண்டு தசரா விழாவின்போது சாதி அடையாளத்துடன் எடுத்த வீடியோவைப் பதிவு செய்து, அதைத் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ‘ரீல்ஸ்’ போன்று வெளியிட்டுள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
மேலும் அவருக்குப் போலீசார் நூதன தண்டனை விதித்தனர். அதாவது மாயகிருஷ்ணனை வைத்தே வீடியோ பதிவு செய்தனர். அதில், “இதுபோன்ற சாதி அடையாளத்துடன் ரீல்ஸ் எடுப்பதும், அவற்றை இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டால் போலீசார் கைது நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், எனவே இதுபோன்ற விஷயங்களைப் பகிர வேண்டாம்” என்றும் அவர் மூலமாகவே பேச வைத்து காவல்துறையின் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது பல்வேறு தரப்பினரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.