October 25, 2026

Seithi Saral

Tamil News Channel

மின்தேவையை முன்பே மத்திய அரசு கணிக்காதது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி

1 min read

Why did the Central government not anticipate the electricity demand in advance? – Minister Nirmalkumar questions

25.10.2026
அதிகரித்து வரும் மின்தேவை மற்றும் மின்சாரத்தின் இருப்பு குறைவு போன்ற காரணங்களால் 1 யூனிட் மின்சாரத்தை ரூ.46.09-க்கு ராஜஸ்தான் அரசு வாங்குவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை மேற்கோள்காட்டி, மின் தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளியை மத்திய அரசு ஏன் முன்கூட்டியே கணிக்கவில்லை என தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-

“இது மத்திய மின்சார அமைச்சகத்தின் ஒரு பெரும் தவறாகும்.
ராஜஸ்தான் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.46.09 செலவிடுவதாக கட்டுரை கூறுகிறது. இது மத்திய அரசின், தேசிய அளவிலான மின் தேவை முன்கணிப்பு மற்றும் இருப்பு குறித்த போதுமான திட்டமிடல் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மத்திய மின்சாரத் துறை நிறுவனங்களைப் போலல்லாமல், மாநில அரசுகளுக்கு நாடு தழுவிய மின் தேவை மற்றும் மின் இருப்பு குறித்த முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ள வரம்புக்குட்பட்ட வாய்ப்புகளே உள்ளன.
எனவே, இத்தகைய தேவை-வழங்கல் இடைவெளியை ஏன் முன்கூட்டியே கணித்து திட்டமிடவில்லை என்பதை மத்திய மின்சார அமைச்சகம் ஆராய வேண்டும்.
குறைந்தபட்சம் இப்போதாவது, மத்திய அரசு தேசிய அளவிலான முன்னறிவிப்பு மற்றும் மாநிலங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு குறித்து திட்டமிட வேண்டும். இது எதிர்காலத்தில் மாநிலங்கள் இதுபோன்ற அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதை தவிர்க்க உதவும்.”
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மின் உற்பத்தி நிறுவனமான ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் அண்ட் ஐடி சர்வீசஸ் லிமிடெட், விநியோக நெருக்கடி காலங்களில் தோல்பூர் எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை சார்ந்துள்ளது.
இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் மட்டும், இந்த மின் நிலையத்தில் ரூ.30 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு யூனிட்டின் உற்பத்திச் செலவு ரூ.41 முதல் ரூ.46 வரை இருந்துள்ளது.
இந்த மின்சாரத்தை வாங்குவதற்கு மின் விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் எதுவும் போடாததால், உற்பத்திக்கு ஆகும் கூடுதல் செலவை அரசே ஏற்க வேண்டியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதத்திலும் இதேபோன்று மின் நெருக்கடி ஏற்பட்ட போது, தொடர்ந்து 5 நாட்களுக்கு அவசரத் தேவையாக இந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. அப்போது ஒரு யூனிட்டின் விலை சுமார் ரூ. 30 முதல் ரூ. 35 என்ற அளவில் இருக்க, அதற்காக ரூ. 13 கோடி செலவிடப்பட்டது.
தமிழ்நாட்டிலும் காற்றாலை மின் உற்பத்தி சரிவு போன்ற காரணங்களால் ஏற்பட்ட 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க, சமீபத்திய உச்சப் பயன்பாட்டு நேரங்களில் (பீக் ஹவர்ஸ்) ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35 முதல் ரூ. 37 வரை கொடுத்து அவசரக் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *