அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் அமைச்சர்கள் தலையிட கூடாது: முதல்வர் விஜய் எச்சரிக்கை
1 min read
Ministers must not interfere in the transfer of officials: Chief Minister Vijay’s warning
29.10.2026
அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் அமைச்சர்கள் தலையிட கூடாது. மீறினால் இலாகா மாற்றம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்துள்ளது. த.வெ.க. அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. அதில் துறைவாரியாக 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது அமைச்சரவை கூட்டம் ஜூலை 16-ம் தேதி நடைபெற்றது.
இதில் பட்ஜெட் தாக்கல், அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதையடுத்து, சட்டசபையில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டு, துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன. மேலும், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தனித்தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் த.வெ.க. வெற்றி பெற்றது.
இந்நிலையில் தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (அக். 29) நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மின்தடை, கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சர்களிடம் ஆலோசிக்க இருப்பதாக கூறப்பட்டது.
அதேபோல், மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒவ்வொரு துறையும் எட்ட வேண்டிய இலக்குகள், எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய தொலை நோக்குத் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரிகள், ஊழியர்களின் பணியிட மாறுதல் உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர்கள் தலையிடக்கூடாது என முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
இதன்படி அமைச்சர்கள், உதவியாளர்கள், நண்பர்கள், துறை அதிகாரிகள் கண்காணிக்கப்படுவதாக கூறிய முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் பெயரை சொல்லி லஞ்சம் லாவண்யத்தில் ஈடுபட கூடாது. அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் அமைச்சர்கள் தலையிட கூடாது. மீறினால் இலாகா மாற்றம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.