புளியரையில் போலி பதிவெண்ணுடன் கேரளாவுக்கு எம்-சாண்ட் கடத்திய லாரி பிடிபட்டது
1 min read
A lorry transporting M-sand to Kerala with a fake registration number was intercepted at Puliyarai
30.10.2026
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் அரிசி, காய்கறி, பால் , பூ , சிமெண்ட் போன்ற பொருட்களை கேரளாவுக்கு விற்பனைக்கு லாரிகளில் கொண்டு செல்கின்றனர்,
இதனால் இந்த சாலை எப்போதும்வாகனங்கள் போக்குவரத்து மிகுந்த நிலையில் பரபரப்பாக இயங்கி வருகிறது ,
கடந்த ஆண்டு தென்காசி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி ,கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் பல்லாயிரம் டன் கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது,
இதனால் சாலைகள் பெரும் சேதம், குடிநீர் குழாய் உடைப்பு, சாலையோர தடுப்புகள் உடைப்பு, நூற்றுக்கணக்கான விபத்துக்கள், உயிரிழப்புகள் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன,
இதற்கு தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து புளியரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் அய்யாத்துரைப்பாண்டியன் பேரவை சார்பாக உண்ணா விரதபோராட்டம் நடத்தினர், இதைத் தொடர்ந்து தமிழக அரசு மூன்று மாதம் கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றி செல்ல தடை விதித்தது, கடந்த 26 ஆம் தேதி இந்த தடை உத்தரவு முடிந்த நிலையில் மீண்டும் மூன்று மாத காலத்திற்கு தடை விதித்தது,
தமிழக அரசு தடை விதித்திருந்த போதிலும், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையின் கண்காணிப்பை மீறி அவ்வப்போது சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து காவல்துறை யினருக்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும்
உதவி ஆய்வாளர் அந்தோணி பால்ராஜ் தலைமையில் , தனிப்பிரிவு ஏட்டு ஸ்ரீதர்,பால்ராஜ் காவல் வேலி அமைப்பைச் சேர்ந்த முருகன், சதீஷ்பாரத், காளி, தர்மராஜ் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு ராம்கோ சிமெண்ட் ஸ்டிக்கர் ஒட்டி தார்ப்பாய் மூடிய நிலையில் வந்த ஒரு லாரியை போலீசார் மடக்கி விசாரித்த போது டிரைவர் லாரியின் பதிவு எண் னை லாரி டிரைவர் முன்னுக்குப் பின் முரணாக கூறினார்,
அதனைத் தொடர்ந்து லாரியின் தார்பாயை அவிழ்த்து பார்த்த போது முழுவதும் எம்சாண்ட் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது மேலும்லாரியில் முன்பிறமும் பின்புறமும் போலியான வாகன பதிவு எண்ணும் லாரியின் ஓரத்தில் உள்ள பாடியில் உண்மையான பதிவெண் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது, லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கன்னியாகுமரிமாவட்டம் விலவன்கோடு பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு கல் உடைக்கும் ஆலையிலிருந்து (கிரஷர்) எம்-சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து கனிம வளம்கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்,
தமிழக அரசின் தடை உத்தரவை மீறி சட்டவிரோத செயலுக்கு துணைபோகும் கிரஷருக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும் என்றும், கிரஷர் உரிமையாளர், லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அனைவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் இதுபோன்று தினமும் தீவிர தொடர் சோதனைகளை மேற்கொண்டு கனிம வளக் கொள்ளையை முழுமையாகத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தென்காசி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.