குமரி: மூதாட்டி நகைக்காக கொலை
1 min read
Kanyakumari: Elderly woman murdered for her jewellery
1.11.2026
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே விரிவிளை பள்ளிக்கல் பகுதியைச்சேர்ந்தவர் விஜயகுமாரி(வயது73). இவருடைய கணவர் இறந்துவிட்டார். இவர்களுடைய மகள் திருமணமாகி கோவையில் வசித்து வருகிறார். இதனால் விஜயகுமாரி மட்டும் இங்குள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் இவருக்கு உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஜயகுமாரியின் தம்பிகள் சதீஷ்குமார், கிருஷ்ணகுமார் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு விஜயகுமாரியின் வீட்டுக்கு நேரில் சென்றனர். அங்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்த நிலையில் அறையில் விளக்கு எரிந்தபடி இருந்தது. மேலும் கட்டிலில் மர்மமான முறையில் விஜயகுமாரி இறந்து கிடந்துள்ளார். கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை, கையில் போட்டிருந்த தலா ஒரு பவுன் தங்க வளையல், கை விரலில் அணிந்திருந்த கால் பவுன் தங்க மோதிரமும் மாயமாகி இருந்தது. மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி அவரை கொன்று நகையை திருடியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதுபற்றி நித்தி ரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.