November 2, 2026

Seithi Saral

Tamil News Channel

தேர்வு எழுதச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

1 min read

Young man dies while on his way to take an exam!

1.11.2026
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளும், பிக்கப் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வனக்காப்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார். குரூப் 2 தேர்வு எழுதுவதற்காகச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அய்யம்பாளையம் அருகே உள்ள வடிவுள்ள மங்கலம், குன்னிக்காட்டுப் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் நவீன் (27). இவர் தட்டக்கரை வனச்சரகத்தில் வனக்காப்பாளராகப் பணியாற்றி வந்தார்.

நவீன் இன்று காலை 7 மணியளவில் குரூப் 2 தேர்வு எழுதுவதற்காக பர்கூரில் இருந்து அந்தியூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தாமரைக்கரை – அந்தியூர் சாலையில் உள்ள நெய்க்கரை வளைவு அருகே சென்றபோது, எதிரே அந்தியூரில் இருந்து பர்கூர் நோக்கி வந்த பிக்கப் வேன் எதிர்பாராதவிதமாக நவீனின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அவரது நெஞ்சின் மீது வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பிக்கப் வேன் ஓட்டுநர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *