சொத்து குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு
1 min read
Disproportionate assets case: Anita Radhakrishnan acquitted
3.11.2026
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார் அனிதா ராதாகிருஷ்ணன்
அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் புகார் எழுந்தது. 2006ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கருணாநிதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அப்போது அதிமுக ஆட்சிக்காலத்தில் 4 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயந்தி அனிதா ராதாகிருஷ்ணன், மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், ராதாகிருஷ்ணனின் சகோதரர்களான சண்முகானந்தன், சிவானந்தன் ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சாட்சிகளிடம் விசாரணை குறுக்கு விசாரணை நிறைவடைந்தது. இந்த நிலையில் நவம்பர் 3ஆம் தேதியான இன்று சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற வழக்கு பட்டியல் விபரத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுபா தேவி இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பை வாசித்தார். அதில்
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன்கள், சகோதரர்கள் என 7 பேரும் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
சுமார் 20 வருடங்களாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டதை அறிந்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.