மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கி கடன் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்
1 min read
Rs. 3,000 crore bank loan scheme for women’s self-help groups: Chief Minister launches the initiative
3.11.2026
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற மாநில அளவிலான விழாவில், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைத்து, கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மகளிர் திட்ட அலுவலர்கள் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களைத் தொழில் முனைவோராக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விழாவில் பல மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
கருமாண்டிசெல்லிபாளையம் பாலம் அருகே உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா மஹாலில் விழா நடைபெற்றது. மண்டபத்துக்குள் நுழைந்த முதல்வருக்கு போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
விழா அரங்கில் 300-க்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழு நிர்வாகிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர். மேலும், 38 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரித்த பொருள்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியைப் பார்வையிட்ட முதல்வர், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருள்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
விழாவில் பல மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் சு. கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார்,
விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய் பாலாஜி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.கே. அனந்த் மோகன், டி. சண்முகம், தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு அரசுத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வரின் வருகையையொட்டி, செங்கப்பள்ளி, பள்ளக்கவுண்டம்பாளையம், விஜயமங்கலம், சிப்காட், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை என ஏழு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த இடங்கள் வழியாக முதல்வர் சாலை வலம் வந்தபோது, வழிநெடுகிலும் பொதுமக்களும் கட்சியினரும் திரண்டு வரவேற்றனர்.முதலில் கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விழா, பின்னர் பெருந்துறை காஞ்சிக்கோவில் சாலையில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா மஹாலுக்கு மாற்றப்பட்டது.முதல்வரின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 4,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல்வர் சென்ற வழித்தடங்களில் முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். முதல்வர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக பெருந்துறைக்கு வந்தார்.