விளையாடும்போது சிறுமியின் மார்பில் பாய்ந்த கத்தரிக்கோல்
1 min read
Scissors pierce a young girl’s chest while she is playing
4.11.2026
விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மார்பில் கத்தரிக்கோல் பாய்ந்து உயிருக்குப் போராடிய 3 வயது சிறுமியை, அகமதாபாத் சிவில் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டு வெற்றிகரமான அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றியுள்ளனர்.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதியின் 3 வயது மகள், கடந்த மாதம் 29-ம் தேதி காலை 11 மணியளவில் தனது 5 வயது மூத்த சகோதரனுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கூர்மையான கத்தரிக்கோல் சிறுமியின் மார்பில் ஆழமாகப் பாய்ந்தது.
இதனால் சிறுமி வலியால் அலறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை உடனடியாக கட்ச் காந்திதாம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதில், கத்தரிக்கோல் மார்பின் உள்பகுதியில் மிக ஆபத்தான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.
சிறுமியின் நிலைமை மிகவும் மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக உடனடியாக அகமதாபாத் சிவில் ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். அன்று இரவு 10 மணியளவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ராகேஷ் ஜோஷி, மருத்துவர்கள் காஷ்வி மற்றும் மிருணாளினி ஆகியோர் அடங்கிய குழுவினர் உடனடியாக அவசர அறுவை சிகிச்சையைத் தொடங்கினர்.
இதுகுறித்து டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், “கத்தரிக்கோல் இருந்த இடத்தில் இருந்து ஒரு அங்குலம் நகர்ந்திருந்தாலும் மூச்சுக்குழாய், நுரையீரல் அல்லது விலா எலும்புகளுக்கு இடையே உள்ள முக்கிய ரத்த நாளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிறுமியின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்தவொரு முக்கிய உள் உறுப்புகளும் சேதமடையாமல் கத்தரிக்கோல் பத்திரமாக அகற்றப்பட்டது” என்றார்.
அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுமி அபாயக் கட்டத்தைத் தாண்டி, தீவிரக் கண்காணிப்பில் குணமாகி வருகிறார். தங்களது மகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு சிறுமியின் பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து எச்சரித்துள்ள மருத்துவர்கள், குழந்தைகள் விளையாடும் இடங்களில் கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை வைக்கக் கூடாது என்று பெற்றோர்களை அறிவுறுத்தியுள்ளனர். மேலும், எதிர்பாராதவிதமாக இது போன்ற பொருட்கள் உடலில் குத்திவிட்டால், அதை வீட்டிலேயே வலுக்கட்டாயமாக வெளியே எடுக்க முயற்சிக்கக் கூடாது என்றும், அது உள் உறுப்புகளில் அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.