November 7, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை: போலீஸ் வேனில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ. கைது

1 min read

Nellai: SSI arrested for sexually harassing a female police officer in a police van

6/11/2026
தமிழக முதல்வர் விழா பாதுகாப்புப் பணி முடிந்து வேனில் திரும்பிய போது பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு எஸ்ஐயை பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். அவரை சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 49). இவர் நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ-யாக உள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாதுகாப்புப் பணிக்காக, நெல்லை மாநகரப் பகுதியிலிருந்து தனிப்படையினர் காவல் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் எஸ்.எஸ்.ஐ. குமாரும் சென்றார். அங்கு பாதுகாப்புப் பணிகளை முடித்துவிட்டு, காவலர்கள் அனைவரும் அன்றிரவு வேனில் நெல்லைக்கு திரும்பினர். இரவு நேர பயணத்தின்போது, பெண் காவலர் ஒருவர் வேனில் தனது இருக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த எஸ்.எஸ்.ஐ. குமார், பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதால் அதிர்ச்சியடைந்து விழித்த பெண் காவலர், ஆத்திரமடைந்து வேனிலேயே அவரை எச்சரித்தார். நெல்லைக்கு வந்து சேர்ந்ததும், பாதிக்கப்பட்ட பெண் காவலர் நேரடியாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் சென்று கண்ணீருடன் முறையிட்டார். அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலர் புகார் அளித்தார். மகளிர் போலீசார், 5 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிந்து, சிறப்பு எஸ்ஐ குமாரை கைது செய்து நெல்லை ஜேஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சத்யா விசாரித்து எஸ்எஸ்ஐ குமாரை ஜாமீனில் விடுவித்தார். எனினும் அவரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டு உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *