November 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜம்பு நதி பாசன விவசாயிகள் சார்பில் தமிழக முதல்வருக்கு சமூக ஆர்வலர் கோரிக்கை

1 min read

Social activist makes a request to the Chief Minister on behalf of farmers dependent on the Jambu River

6.11.2026
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஜம்புநதி பாசன விவசாயிகளின் சார்பில் சமூக ஆர்வலரும்,இராம நதி ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்டத்தின் அமைப்பாளருமான இராம.உதயசூரியன் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்தக் கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் கடையம் கீழப்பாவூர் வட்டார பகுதியில் உள்ள
இராமநதி அணையில் இருந்து கிடைக்கும் உபரி நீரை அதன் அருகில் உள்ள ஜம்புநதிக்கு கொண்டு வந்து அதன்கீழ் உள்ள 25-குளங்களை நிரப்ப 2015-ஆண்டுதிட்டம் உருவாக்கப்பட்டு நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தில் மலைப்பகுதியில் கால்வாய் வெட்டும் பணி முக்கிய பணியாகும்.சுமார் நான்கு கி.மீ.தூரத்திற்கு பாறைகளை உடைத்தும் aqueduct என்று சொல்லப்படும் தொட்டிபாலம் மூலமும் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.இதில் சுமார் 70 சதவிகித பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.
ஆனால் மலைகளில் கால்வாய் வரும் பகுதி மிகவும் ஆழமானதாக உள்ளது.இதனால் எதிர்காலத்தில் மண்சரிவுகள் பாறைகள் உருண்டுவிழுதல் போன்றவற்றால் நீர்வரத்து தடைபட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.இதனால்தான் இத்திட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் கால்வாயின் மேல்பகுதியில் சிமெண்ட் கான்கிரீட் கொண்டு மூடி தண்ணீர் கொண்டுவர திட்டம் தயாரிக்கப்பட்டது.ஆனால் திட்டம் நடைமுறைக்கு வந்த போது திறந்தவெளி கால்வாயாக செயல்படுத்த அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணி நடந்து வந்தது.

திட்ட உருவாக்கதுறை முன்பு திட்டமிட்டதை போல் கால்வாய் மூடிய நிலையில் வருவதுதான் பாதுகாப்பு என தற்போது பொதுப் பணித்துறை கருதுகிறது.அதன் காரணமாக திருத்திய மதிப்பீடாக ரூ101-கோடிக்கான மதிப்பீடு தயாரித்து அதில் ஏற்கனவே வழங்கிய நிதி 62-கோடி போக மீதமுள்ள தொகை 39-கோடி கூடுதல் நிதிகேட்டு அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டு தொழில்நுட்ப அனுமதி அளிக்கப்பட்டு TAC-குழு (Tender award committee) அனுமதிக்காக தற்போது நிலுவையில் உள்ளது.நிதிதுறை அனுமதி வழங்காததால் திட்டத்தை நிறைவேற்ற தேவையில்லாத காலதாமதம் ஏற்படுகிறது. ஏற்கனவே வறண்ட பகுதியாக உள்ள எங்கள் பகுதி தற்போது கோடைகால பாதிப்பால் மிகுந்த வறட்சியை சந்திப்பதோடு மிகுந்த தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. குடிநீருக்காக மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.

எனவே தமிழக முதல்வர் நிதித்துறை அனுமதிவேண்டி நிலுவையில் உள்ள இந்த கோப்பின்மீது தாங்கள் தனிக்கவனம் செலுத்தி கூடுதல் நிதியை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுத்து திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாக ஒப்புதல்வழங்க உத்தரவிட ஜம்புநதி பாசன விவசாயிகள் சார்பில் தங்களை அன்புடன் வேண்டுகிறேன். காலதாமதம் ஏற்பட்டால் விவசாயிகள் பொதுமக்கள் ஆகியோர் திரண்டு நடத்தும் மறியல் போருக்கு வழிவகுக்கும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு ராம நதி ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்டத்தின் அமைப்பாளர் இராம.உதயசூரியன் அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *