விஜயநாராயணத்தில் மாமனார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தொழிலாளி
1 min read
Petrol bomb hurled at father-in-law’s house in Vijayanarayanam; worker involved
7.11.2026
விஜயநாராயணத்தில் மாமனார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் சிவசம்பு மகன் ஆறுமுகம் (வயது 40). தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த செல்வி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தந்தை ஆவுடையப்பன் வீட்டுக்கு வந்து விட்டார்.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் அடிக்கடி அங்கு சென்று தனது மாமனார் மற்றும் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் ஆறுமுகம் மீண்டும் தனது மாமனார் வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்த ஆவுடையப்பனை வீட்டை விட்டு வெளியே வரச்சொல்லி அவதூறாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி ஆவுடையப்பனை நோக்கி வீசினார்.
ஆனால் அவர் விலகியதால் பெட்ரோல் குண்டு வீட்டின் ஜன்னல் மற்றும் நிலைகளில் பட்டு வெடித்தது. இதில் ஜன்னல் நிலைகள் தீப்பிடித்து எரிந்தது.
இதைப்பார்த்த ஆறுமுகம்உடனே அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் நிலைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இதுகுறித்து ஆவுடையப்பன் வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ஆறுமுகம் மீது வடக்கு விஜயநாராயணம் காவல் ஆய்வாளர் பிரேமா ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்.
ஆறுமுகம் மீது போலீஸ் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினையில் மாமனார் வீட்டின் மீது தொழிலாளி பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வடக்கு விஜயநாராயணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.