பெரியார் அறிவுலக விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. மனு
1 min read
Periyar-related intellectual discourse: DMK files petition in Madras High Court
10/11/2026
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி தி.மு.க. சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு சமீபத்தில் பெரியார் அறிவுலக நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகத்தின் தமிழ் பிரிவில், போலியான ஆசிரியர் பெயர்களிலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலமாகவும் உருவாக்கப்பட்ட தரமற்ற புத்தகங்கள் மிக அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலக அலமாரிகளில் இருந்து அகற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நூல் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் திமுக சட்டத்துறை சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் தனித்தனியாகப் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் நேற்று (திங்கட்கிழமை) சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் ஏடிஎஸ்பி இமானுவேல் சேகரன் தலைமையிலான 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணியளவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நூலகத்தின் 3-வது தளத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய அகல்விளக்கு மற்றும் ‘பீனிக்ஸ்’ உள்ளிட்ட பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைகள், நிதிப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் பில்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை பிற்பகல் 2:30 மணியளவில் நிறைவடைந்தது.
இந்நிலையில், கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கோரி தி.மு.க. தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அந்த மனுவில், “பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள விசாரணைக்குழு போதுமானதல்ல. முறையான விசாரணை நடத்தாமலேயே முந்தைய தி.மு.க. அரசு மீது குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த விவகாரத்தில் புத்தக கொள்முதல் தொடர்பான அனைத்து கோப்புகளையும் பறிமுதல் செய்து பத்திரமாக பாதுகாக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். எந்தவொரு முறையான விசாரணையும் நடத்தாமல், முந்தைய அரசின் மீது மட்டும் குற்றம் சாட்டி வருவதால், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும், எனவே இந்த வழக்கில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.