கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
1 min read
Anti-Corruption Bureau raid at Periyar Arivulagam in Coimbatore
10.11.2026
கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தில் நூல் கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சுமார் 4 மணி நேரச் சோதனை நிறைவடைந்துள்ளது.
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு சமீபத்தில் பெரியார் அறிவுலக நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகத்தின் தமிழ் பிரிவில், போலியான ஆசிரியர் பெயர்களிலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலமாகவும் உருவாக்கப்பட்ட தரமற்ற புத்தகங்கள் மிக அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலக அலமாரிகளில் இருந்து அகற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நூல் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் திமுக சட்டத்துறை சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் தனித்தனியாகப் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் நேற்று (திங்கட்கிழமை) சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் ஏடிஎஸ்பி இமானுவேல் சேகரன் தலைமையிலான 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணியளவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நூலகத்தின் 3-வது தளத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய ‘அகல்விளக்கு’ மற்றும் ‘பீனிக்ஸ்’ உள்ளிட்ட பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைகள், நிதிப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் பில்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை பிற்பகல் 2:30 மணியளவில் நிறைவடைந்தது. சோதனையின்போது வாசகர்களின் பயன்பாட்டிற்கு எந்தவித இடையூறும் இன்றி நூலகம் வழக்கம்போல் செயல்பட்டது.