செக்கானூரணி போலீசில் புகார் அளிக்க வந்தவர் தற்கொலை- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
1 min read
Man who came to file a complaint at Chekkanurani police station dies by suicide; Inspector suspended
14.11.2026
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வந்த ஓட்டுநர பாலகிருஷ்ணன் காவல் நிலையத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, அக்காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, காவல்துறையினரின் அலட்சியமே இம்மரணத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டி உயிரிழந்தவரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர், தனது புகார் தொடர்பாகச் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், நேற்று இரவு காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. காவல் நிலையத்திற்குள் நடந்த இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உயர் காவல்துறை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
பணியில் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டதாகக் கூறி, செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் என மொத்தம் இரண்டு பேரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செக்கானூரணி காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
புகாரளிக்க வந்த நபரை விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தியதாகவும், காவல்துறையினரின் கடுமையான அலட்சியப் போக்கே பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்குக் காரணம் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
உரிய நீதி வழங்கக் கோரியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.