செங்கோட்டையனுடன் வேலுமணி நீண்ட நேரம் ஆலோசனை
1 min read
Velumani held a long consultation with Sengottaiyan
14.11.2026
கோவையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் சந்தித்து நீண்ட நேரம் உரையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை கைப்பற்றியது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் அந்த அரசியல் பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதிமுகவின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தவெக எம்எல்ஏவாக பதவியேற்றுவிட்டனர்.
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அதிமுகவின் பல மூத்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணையவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இப்போதுவரை அவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணையாமல் தனியாக இருந்து வருகின்றனர். சத்தமில்லாமல் அவர்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் பயணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விழாவில், எஸ்.பி. வேலுமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினர். இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்பட்டது.
இந்தநிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமண விழாவில், வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டனர். அப்போது இருவரும் நேரம் வெகு நேரமாக பேசிக்கொண்டு இருந்தனர்.
அதிமுகவில் இருந்தபோது செங்கோட்டையனும் எடப்பாடியை தீவிரமாக எதிர்த்தார். இதனால் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் எம்பியும், தவெக மாவட்ட செயலாளருமான மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் இணைந்து நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். இதனால் வரும் நாட்களில் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் சூழல் நிகழலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.