November 14, 2026

Seithi Saral

Tamil News Channel

விலைவாசி உயர்வில் முதலிடம் பிடித்த தமிழகம்

1 min read


Tamil Nadu tops the list for price increases

14.11.2026
இந்தியாவில் விலைவாசி உயர்வில் 7.29 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தெலுங்கானா – 7.26 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.

இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதத்துக்கான நுகர்வோர் விலை பற்றிய அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

இதில் நாட்டின் ஒட்டுமொத்த சில்லறைப் பணவீக்கம் (விலைவாசி) கடந்த அக்டோபர் மாதம் 6.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது செப்டம்பரில் 5.54 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களுக்கான விலைவாசி 7.74 சதவீதத்தில் இருந்து 8.94 சதவீதமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மாதத்தில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, எலுமிச்சை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அதேநேரத்தில் உருளைக்கிழங்கு, காலிபிளவர், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.

கடந்த மாதத்தில் விலைவாசி உயர்ந்த பொருட்களின் பட்டியலில் வெங்காயம் முதலிடத்தில் உள்ளது. இதன் விலை 116.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இது 108.13 சதவீதமாக இருந்தது. அதாவது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது வெங்காயத்தின் விலை 2 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அதற்கடுத்தபடியாக 2-வது இடத்தில் பூண்டு உள்ளது. இது செப்டம்பரில் 54.62 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில் 60.74 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்திய சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் இந்த 2 பொருட்களின் விலை உயர்வு குடும்பங்களின் சமையல் செலவினங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேபோல் வெள்ளி நகைகள் 52.39 சதவீதமாக இருந்து 3-வது இடத்தில் உள்ளது. அதுவே கடந்த செப்டம்பரில் இதன் விலை 87.82 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது அக்டோபரில் உயர்வு விகிதம் குறைந்துள்ளது.

4-வது இடத்தில் இஞ்சி 48.32 சதவீதத்துடனும், எலுமிச்சை 47.30 சதவீதத்துடன் 5-வது இடத்திலும் இருந்துள்ளன. இஞ்சியின் விலை செப்டம்பரில் 62.85 சதவீதமாகவும், எலுமிச்சை 36.41 சதவீதமாகவும் இருந்தன. இதன்படி, இஞ்சியின் விலை உயர்வு வேகம் குறைந்துள்ள நிலையில், எலுமிச்சையின் விலை உயர்வு வேகம் அதிகரித்துள்ளது.

மறுபுறம், அக்டோபரில் குறைந்த விலையை பதிவு செய்த பொருட்களின் பட்டியலில் உருளைக்கிழங்கு முதலிடத்தில் உள்ளது. இதன் விலை மைனஸ் 14.24 சதவீதமாக உள்ளது. செப்டம்பரில் இது மைனஸ் 11.52 சதவீதமாக இருந்தது. அதாவது, கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது உருளைக்கிழங்கின் விலை 14.24 சதவீதம் குறைந்துள்ளது. காலிபிளவர் மைனஸ் 10.57 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், தேங்காய் மைனஸ் 5.60 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் இருந்தன. கத்தரிக்காய் மைனஸ் 3.34 சதவீதத்தையும், முட்டைக்கோஸ் மைனஸ் 1.92 சதவீதத்தையும் பதிவு செய்துள்ளன.

இந்தியாவில் விலைவாசி உயர்வில் 7.29 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தெலுங்கானா – 7.26 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், ஆந்திரா – 7.25 சதவீதத்துடன் 3-வது இடத்திலும், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் மத்தியபிரதேசம் – 7.19 சதவீதத்துடனும், ஒடிசா – 7.17 சதவீதத்துடனும் உள்ளன.

அதேபோல் கடந்த மாதம் நாட்டின் கிராமப்புறங்களின் ஒட்டுமொத்த சில்லறை விலை 6.63 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 5.41 சதவீதமாகவும் இருந்தது. உணவுப் பொருட்களுக்கான விலைவாசி கிராமப்புறங்களில் 9.09 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.68 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களின் குடும்பச் செலவினங்களை அதிகரிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களின் விலை உயர்வு சாமானிய மக்களை அதிகம் பாதிக்கக்கூடும். அதேநேரத்தில் சில காய்கறிகளின் விலை சரிவு ஓரளவுக்கு நுகர்வோருக்கு ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும், உணவுப் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பது குடும்பங்களின் வாங்கும் திறனுக்கும் நாட்டின் பொருளாதார நிலைக்கும் முக்கியமான சவாலாக உள்ளது என்பதை அறியலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *