November 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் வந்தது

1 min read

Gold price per sovereign has fallen below Rs 1 lakh

17.11.2026
தமிழகத்தில், இன்று (நவ.,17) தங்கம் விலை சவரனுக்கு, 560 ரூபாய் குறைந்த நிலையில், சவரன் விலை, 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் வந்தது. கடந்த 10 மாதங்களில் மட்டும் சவரனுக்கு, 34,640 ரூபாய் சரிவடைந்துள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து, தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டில் அதிக வரி விதித்தார். பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்தனர்.

இதனால், இந்தாண்டின் தொடக்கத்தில் நம் நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மிகவும் அதிகரித்தன. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு ஜன., 29ல், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 16,800 ரூபாய்க்கும், சவரன், 1,34,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 425 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

பின், தங்கம், வெள்ளி விலை சற்று ஏறி இறங்கினாலும் புதிய உச்சத்தை எட்டவில்லை. இம்மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று (நவ.,16) தங்கம் கிராம், 12,540 ரூபாய்க்கும், சவரன், 1,00,320 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 190 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் குறைந்து, 12,470 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் சரிவடைந்து, 99,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, 10 மாதங்களுக்கு பின் தங்கம் சவரன் விலை, 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது. இந்த காலத்தில் மட்டும் சவரனுக்கு, 34,640 ரூபாய் சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகைகள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:

தங்கம் விலை, இந்த மாதத்தில் குறைவாகவே இருக்கும். அமெரிக்காவில் உள்ள வங்கிகளின் மத்திய வங்கியான, ‘பெடரல்’ வங்கியின் கூட்டம், இம்மாதத்தின் கடைசி வாரத்தில் நடக்கிறது. அதில், வைப்பு நிதிக்கான வட்டி நிர்ணயம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுக்கு பின், முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை செய்வர்.

அதற்காக தற்போது, முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்யாமல் உள்ளனர். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை குறைந்து வருகிறது. தங்கம் விலை குறைவால், மக்கள் பலரும் ஆர்வமுடன் நகைகளை வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *