திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு எதிர்ப்பு
1 min read
Tamil Nadu government opposes lighting of lamp on the *deepa thoon* (lamp pillar) at Tirupparankundram
17.11.2026
இந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த, ராம.ரவிக்குமார் மனு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ” திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திற்கு பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான தீபத் துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்” என கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி, உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே கடந்தாண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தமிழக அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் மனுதாரர்கள் 10 பேருடன் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு வாதம் வருமாறு:-
திருப்பரங்குன்றம் கோவில் மண்டபத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது.150 ஆண்டு கால நடைமுறையை மாற்றக்கூடாது.
கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கக்கூடாது.
சட்டம் ஒழுங்கை மாநில அரசு பார்த்து கொள்ளும் என்றாலும் நீதிமன்ற உத்தரவால் எவ்வித சலசலப்பும் ஏற்படக்கூடாது. அமைதி சீர்குலையக்கூடாது. ஐகோர்ட் தீர்ப்புக்கு பிறகு இரு தரப்பும் சில விவகாரங்களை எழுப்பின. அதனால், சில பிரச்னைகள் ஏற்பட்டன என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு வாரத்தில் கார்த்திகை தீபம் என்பதால் இடைக்கால உத்தரவு தேவை. வழக்கமான நடைமுறையால் மத ரீதியிலான மோதல்கள் இல்லை. நடைமுறையை மாற்றினால் சர்ச்சை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு வாதம் வைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட் நாளைக்கு ஒத்திவைத்தது.