போக்குவரத்து விதிகளை மீறினால் ஆட்டோக்கள் பறிமுதல் – டிஎஸ்பி நமச்சிவாயம் எச்சரிக்கை
1 min read
Auto-rickshaws will be impounded if traffic rules are violated – DSP Namachivayam warns
19.11.2026
தென்காசி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின், மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, கடையநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட சொக்கம்பட்டி, குமந்தாபுரம், கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், ரஹ்மானியாபுரம், பேட்டை, மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், இக்பால் நகர், கடையநல்லூர் மணிக்கூண்டு கிழக்குப் பகுதி, சேந்தமரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தங்களைச் சேர்ந்த ஓட்டுநர்களுடன் காவல்துறையினர் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் புளியங்குடி டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது .கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்தக் கூட்டத்தில் புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது, ஆட்டோக்களால் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், சாலை விதிகளை மீறுதல், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆட்டோக்களைப் பயன்படுத்துதல், அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் இல்லாமல் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை காவல்துறையினரிடம் தெரிவித்தனர். அவர்களின் கேள்விகளுக்கு டிஎஸ்பி நமச்சிவாயம், கடையநல்லூர் காவல் ஆய்வாளர்கள் கிறிஸ்டி, சண்முகவடிவு ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
கடையநல்லூர் நகருக்குள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 3 மணி முதல் 7:00 மணி வரை கனரக வாகனங்கள் நுழைவதற்குத் தடை விதிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் என புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ராஜசேகர், மாவட்டச் செயலாளர் வன்னிய பெருமாள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.