தென்காசி- செங்கோட்டை ரயில் பாதையில் வனவிலங்குகள் உயிரிழப்பதைத் தடுக்க வனத்துறை ஆலோசனை
1 min read
Forest Department proposes measures to prevent wildlife fatalities on the Tenkasi–Sengottai railway line
19.11.2026
புலி உயிரிழந்த பகுதியில் ஆய்வு – ஏ.ஐ. தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள், வனவிலங்குகளுக்கான சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டம்!.
தென்காசி மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளங்களைக் கடக்கும்போது வனவிலங்குகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், வனத்துறை மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தெற்கு ரயில்வேயின் செங்கோட்டை மற்றும் தென்காசி பிரிவு பொறியாளர்கள், உதவி கோட்டப் பொறியாளர்கள், நிலைய மேலாளர், பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த நவம்பர் 4-ஆம் தேதி செங்கோட்டை – பகவதிபுரம் ரயில் பாதையில் பூலாங்குடியிருப்பு – பகவதிபுரம் இடையே ஆண் புலி ஒன்று ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இப்பகுதியில் ரயில்கள் மணிக்கு சுமார் 60 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, பகவதிபுரம் முதல் ஆரியங்காவு வரையிலான ரயில் பாதையில் யானைகள், புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் வரைபடம் மூலம் அடையாளம் காணப்பட்டன. குறிப்பாக பகவதிபுரம், முக்கோணம், ரயில்வே சுரங்கப்பாதை முதல் பகவதிபுரம் வரையிலான பகுதி, சிறுமூலப்பேரி அணை அருகே உள்ள பகுதி மற்றும் எஸ்-வளைவு பகுதிகள் வனவிலங்குகள் ரயில் பாதையைக் கடக்கும் முக்கிய இடங்களாகக் கண்டறியப்பட்டன.
மேலும், தென்காசி ரயில்வே நகர் பகுதியில் ரயில்வே கிலோமீட்டர் 671 முதல் 679 வரையிலான பகுதிகளில் புள்ளிமான்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, ரயில் தண்டவாளங்களின் இருபுறங்களிலும் உள்ள புதர்கள் மற்றும் அடர்ந்த செடிகளை அகற்றுதல், வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை இரு துறைகளும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளுதல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வனவிலங்குகள் பாதுகாப்பாக ரயில் பாதையைக் கடந்து செல்லும் வகையில், தேவையான இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆய்வு செய்யப்பட உள்ளன.
கோவை மதுக்கரை வனப்பகுதி வழியாகச் செல்லும் ரயில் பாதையில் செயல்படுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வனவிலங்கு கண்காணிப்புத் திட்டத்தைப் போன்று, செங்கோட்டை – ஆரியங்காவு ரயில் வழித்தடத்திலும் ரயில்வே துறையின் நிதியுதவியுடன் திட்டத்தைச் செயல்படுத்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கொல்லம் எக்ஸ்பிரஸ் மற்றும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் நேரங்களில் வனவிலங்குகள் அதிகம் கடந்து செல்லும் பகுதிகளைக் கண்டறிய, வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் இணைந்து ரயில்களில் பயணம் செய்து நேரடி கள ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் இணைந்து சம்பந்தப்பட்ட ரயில் தண்டவாளப் பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வனவிலங்குகளின் கால்தடங்கள், நடமாட்டம் மற்றும் அவை ரயில் பாதையைக் கடக்கும் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
வனவிலங்குகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் இரு துறைகளும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்பும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.