திருச்சி அருகே மரத்தில் கார் மோதி 8 பேர் பலி
1 min read
8 people killed as car crashes into a tree near Trichy
22.11.2026
திருச்சி அருகே மரத்தில் கார் மோதிய கோர விபத்தில், மாணிக்கம், 42, உட்பட, எட்டு செங்கல் சூளை தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றிய, 10 பேர், இன்று (நவ.,22) காலை, நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியில் நடந்த நண்பர் வீட்டு காதுகுத்து விழாவுக்கு, காரில் சென்றுள்ளனர்.
அதன்பின், விழாவை முடித்து விட்டு, ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது, திருச்சி மாவட்டம், துறையூர் – முசிறி சாலையில், ஜெம்புநாதபுரம், போதுர்பட்டி நால்ரோடு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதியது. இதில், காரின் முன்பக்கம் இரண்டாக பிளந்து பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில், தஞ்சை, மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், சங்கிலி, 44, முருகன், 42, ராஜேஷ், 43, சக்திவேல், 42, சுப்பிரமணி, 45, மற்றும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாவாடை, 50, சீதாராமன் ஆகிய, எட்டு பேர் உயிரிழந்தனர். இதில், காயமடைந்த ராமலிங்கம், ராமர் ஆகியோர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெம்புநாதபுரம் போலீசார், வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
‘காரின் அதிவேகமே, விபத்துக்கு காரணம்’ என, விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.