Body of financial institution employee in Sengottai dam area
8.1.2024
செங்கோட்டையில் காணாமல் போன தனியார் நிதி நிறுவன ஊழியர் மோட்டை அணைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வல்லம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் என்பவரது மகன் மாரியப்பன் (வயது 30) . இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தென்காசியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற இவர் வீட்டிற்கு திரும்ப வில்லை என அவரது பெற்றோர் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை இவர் கண்ணு புளி மெட்டு அருகே உள்ள மோட்டை அணையில் இறந்து கிடந்துள்ளார். இவர் இறந்து சுமார் 3 நாட்கள் இருக்கும் நிலையில் இவரது உடல் நேற்று காலை தண்ணீரில் மேலே மிதந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து செங்கோட்டை காவல்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர் .இறந்தவர் உடல் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ் கன்னன் வழக்கு பதிவு செய்து இறந்த மாரியப்பன் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மாரியப்பன் சென்னையில் இருந்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இங்கு வந்ததாகவும், அவர் செங்கோட்டையில் புதியதாக வீடு கட்டியதில் அவருக்கு கடன் நெருக்கடி இருந்ததாகவும், மேலும் சென்னையைச் சேர்ந்த அவரது நண்பர் ஒருவருக்கு மாரியப்பன் பெயரில் தவணை முறை கடனாக பைக் வாங்கி கொடுத்ததாகவும் அவரது நண்பர் பணத்தை மாதா மாதம் கட்டாததால் இவரை செலுத்த சொல்லி அந்த பைனான்ஸ் நிறுவனம் இவருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது ,இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.