April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

அவள் யாருக்கு? (பாலன் எழுதிய தொடர் கதை 3)

1 min read

Aval Yarukku===3 / Story by Kadayam Balan

(முன்கதையை இதே இணைய தளத்தில் படித்து தெரிந்து கொள்ளவும்)
தெய்வா ஹாஸ்டலுக்கு சென்று பெயரைச் சொல்லி தனக்கு என்ற ஒதுக்கபட்ட அறைக்குச் சென்றாள். அந்த அறை இருவருக்கு என்று வார்டன் சொல்லி அனுப்பி இருந்தார். அந்த இன்னொருவர் வெளியே சென்றிருக்க… அவரின் உடமைகள் மட்டும் இருந்தன.
இதுவரை கல்லூரியில் கூட ஹாஸ்டலில் தங்காத தெய்வாவுக்கு இந்த வாழ்க்கை வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கும். கல்லூரியில் படிக்கும்போது சக தோழிகளின் ஹாஸ்டல் அறைக்கு சென்றிருக்கிறாள். அங்கு அவர்களின் ஆடைகளும் உடமைகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும். ஆனால் இங்கே அறை தூய்மையாக இருந்தன. துணிமணிகள் மற்றும் பொருட்கள் எல்லாம் அதுஅதற்குரிய இடத்தில் இருந்தன. இவளது அறைகள் மட்டுமல்ல பெரும்பாலான அறைகள் நேர்த்தியாகவே இருந்தன. கல்லூரியில் மாணவிகள் பல்துலக்கும்போதும், குளிக்கும்போதும் கூட கேலியும் கிண்டலுமாக அமர்க்களப்படும். ஆனால் இங்கே தண்ணீர் விழும் சத்தத்தை தவிர மற்ற சத்தம் அதிகம் எழவே இல்லை. காலையில் எழுந்தது, ஒருவரை ஒருவர் சந்தித்தாலும் புன்னகையை மட்டுமே பரிமாரிக்கொள்கிறார்கள். சிலர் மட்டும் குட்மார்னிங் என்று அவர்களுக்கே கேட்காதபடி சொல்லிக் கொள்கிறார்கள். தெய்வா யாரிடமும் பேசாமல் குளிக்கச் சென்றாள். இவளிடம் பேசுவது கவுரக்குறைச்சல் என்று நினைத்தார்களோ என்னவோ யாருமே இவளிடம் பேசவில்லை. இது என்ன நாகரிகமோ தெரியவில்லை.
தெய்வா குளித்துவிட்டு ஒரு சாதாரண உடைக்கு மாறினாள். அந்த ஆடை ஆடம்பரமாகவும் இல்லாமல், தரம்குறைந்ததாகவும் இல்லாமல் இருந்தது. எளிமையாகவும் ஏற்றம் நிறைந்ததாகவும் இருந்தது.
ஹாஸ்டலில் இருந்து அலுவலகம் நடந்தே செல்லும் தொலைவில் இருந்தது. அதனால் நடந்தே சென்றாள். போகும்போதே வார்டனிடம் வழிப்பாதையதை கேட்டு அறிந்து கொண்டதால் அதிக குழப்பம் இன்றி நடந்தாள். ஒரு சில இடங்களில் கடைக்காரர்களிடம் வழியை கேட்டு அறிந்து கொண்டாள். சென்னை மாநகரில் யாரும் யாரையும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று சொல்வார்கள். அப்படித்தான் சென்னை பற்றி தெய்வாவும் நினைத்திருந்தாள். ஆனால் சில கடைக்காரர்கள் வழியை காட்டும் விளக்கம் தெய்வாவுக்கு அந்த பழைய நம்பிக்கையை பொய்யாக்கியது.
ஒரு காலத்தில் சாதாரணமாக இருந்த இந்த இடங்கள் இன்று நகரப்பகுதியோடு ஐக்கியமாகி விட்டது. நகரம் ஆனாலும் எந்த நெருக்கடியிலும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சீராக செல்வது தெய்வாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. விதிமுறையை மீறி வாகனம் ஓட்டுபவர்களை காண்பது அரிதாகவே இருந்தது. அந்த வகையில் மதுரையை சென்னை வித்தியாசப்படுத்தி காட்டியது.
அலுவலகத்தில் உயர் அதிகாரியை சந்தித்து வேலைக்கான உத்தரவு கடிதத்தை கொடுத்தாள். அவர் இன்டர்காமில், நித்யஸ்ரீ கொஞ்சம் என் கேபினுக்கு வர்றீங்களா? என்று அழைக்க அடுத்த சில நிமிடங்களில்…
“குட் மார்னிங்” என்றபடி இளமையை மேனியில் தாங்கிய நித்யஸ்ரீ வந்தாள். அவளது நடை&உடை பாவனை அவளை மிகுந்த அறிவாளி என்று சொல்லாமல் சொன்னது.
“நித்யஸ்ரீ இவங்க புதுசா வந்திருக்காங்க. உங்க டீம்ல சேர்த்துக்கங்க. தெய்வா இவங்க சொன்னபடி வேலைய செய்யுங்க. ஆபீஸ் நடவடிக்கையை இவங்க சொல்வாங்க.” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
தெய்வாவை தன்னுடன் அழைத்துவந்த நித்யஸ்ரீ, அவளிடம் எந்த ஊர், எங்கே படிச்சீங்க என்பது போன்ற கேள்விகளை கேட்டாள். அதற்கு தெய்வா பவ்யமாக பதில் சொன்றான்.
“தெய்வா இது பள்ளிக்கூடம் அல்ல. ஆபீஸ்தான் பயப்பட வேண்டாம். சாதாரணமா பதில் சொல்லுங்க” என்றாள் நித்யஸ்ரீ
“சரி மேடம்”
“தெய்வா இன்னிக்குத்தான் மதுரையில இருந்து வந்தீங்களா?”
“ஆமா மேடம்”
“உங்க கூட யாரும் வந்திருக்காங்களா?”
“இல்லை மேடம். தனியாத்தான் வந்தேன்.”
“பரவாயில்லை. தனியா வந்தாத்தான் தன்னம்பிக்கை வரும்.”
“மேடம் இங்கே வேலைபார்க்கிற சுரேஷ் சார் என்கூடத்தான் ரெயில்ல வந்தார். அவர்தான் என்னை இங்கே கொண்டு வந்து விட்டார்.” என்றாள் தெய்வா.
சுரேஷ் பெயரை கூறியதும் நித்யஸ்ரீயின் முகம் சற்று மாறியது. அதன்பின் தெய்வாவிடம் அதிகம் பேசமால் வேலை விவரத்தை மட்டும் சொன்னாள்.
அன்றைய தினம் தெய்வா வேலையை பற்றி அறிந்து கொள்வதிலேயே நேரம் கழிந்தது.


அலுவலகம் அருகே சுரேஷ் காத்துக் கொண்டிருந்தான்.
சில மணித்துளிகளில் தெய்வாவும் வந்தாள். மற்றவர்கள் போல் வேலைச்சிறையில் இருந்து விடுதலையானவள்போல் அவர்கள் முகம் இல்லை. ஒரே சிறையில் ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு வருவதுபோன்ற எண்ண அலைகள்தான் அவன் முகத்தில் தெரிந்தது. ஆம் அவளை பொறுத்தவரை அலுவலகமும் புதிது. பெண்கள் விடுதியும் புதிதுதான்.
“-ஹாய் தெய்வா..” &சுரேஷ்
“குட் ஈவினிங் சார்.”
“வேலையெல்லாம் எப்படி?”
“நல்லா இருந்துச்சு… ஆனா நிறைய புரிஞ்சிக்க வேண்டியதிருக்கு…”
“அது போகப்போக சரியாயிடும்.”
“சரி வாங்க இந்த கேண்டீனுக்கு…”
காபியை வரவழைத்து இருவரும் அருந்திக் கொண்டே பேச்சு தொடர்ந்தது.
“எங்க குரூப் லீடர் நித்யஸ்ரீ மேடம் நல்ல ஹெல்ப் பண்ணினாங்க…”
“ஓ… நல்ல திறமைசாலி. அவங்ககிட்ட நிறைய கத்துக்கிடாலாம்.”
“உங்க பேரை சொன்னதும் அவங்க முகம் மாறிட்டு சார். அது ஏன்?”
“என் பேரை எதுக்கு சொன்னீங்க?”
“ஏன் சார் உங்களுக்கு அவங்களுக்கு ஆகாதா?”
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. பொதுவா ஒரே ஆபீசில வேலையில போட்டி, பொறாமை இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் சகஜம்தான்.”
“ஓ இங்கே இதெல்லாம் இருக்குமா?”
“இங்கன்னு இல்ல.. எல்லா கம்பெனியிலேயும் இருக்கத்தான் செய்யும். ஏன் கவர்மென்ட் வேலையிலயும் போட்டி&பொறாமை இருக்கத்தான் செய்யும்.”
அந்த நேரத்தில் சுரேஷின் நண்பன் வேது வந்தான்.
“வாடா வேது உனக்காகத்தான் வெயிட் பண்றேன்.”
இன்னொரு காபியை வரவழைத்தார்கள்.
“இவங்க எங்க கம்பெனிக்கு புதுசா வந்திருக்காங்க, பேரு தெய்வா… தெய்வா இவன் என் நண்பன். ஆடிட்டர். இன்னொரு கம்பெனியில வேலை பார்க்கிறான். நாங்க ரெண்டுபேரும்தான் ஒரே வீடு எடுத்து தங்கி இருக்கோம்.”
“வீடா…”
“ஆமா.. அடிக்கடி எங்க அம்மா அவங்க அம்மா வந்து எங்களுக்கு சமைச்சி போடுவாங்க…”
“பரவாயில்லயே கொடுத்து வச்சவங்க… சார் உங்க பேரு என்ன சொன்னீங்க..-”
“வேது”
“அது என்னசார் வேது?”
“அது ஒரு பெரிய கதை. பெத்தவங்களுக்கு அவங்க நினைச்சத முடிக்கணும்ன்னு நினைக்கிறாங்க.. பிள்ளைங்க எதிர்காலத்தை பற்றி கொஞ்சம் கூட நினைச்சி பாக்கிறது கிடையாது.”
“ஏன் சார் உங்கள நல்லாத்தானே படிக்க வச்சிருக்காங்க.. நீங்களும் நல்ல வேலையிலதானே இருக்கீங்க.”
“வேலைய சொல்லல்ல… பேரைத்தான் சொன்னேன். இருபது வருஷத்துக்கு பின்னாடி இந்த பேரு எப்படி இருக்கும், நாகரிகமா இருக்குமான்னு நினைச்சி பிள்ளைங்களுக்கு பேரு வைக்கணும். ஆனால் என்ன பெத்தவங்க…”
“என்னசார் வேதுங்கிறது புதுமையான பேராத்தானே இருக்கு.”
“இது எனக்கு நானே வச்சிகிட்ட பேரு.. -நான் பொறக்கும்போது, எங்கப்பா அவங்க அப்பா பேரு வேலாயுதம்ன்னு வைக்கணும்ன்னு சொன்னாரு. எங்க அம்மா அவங்க அப்பா துரைச்சாமி பேரை வைக்க சொன்னாங்க. ஒரே சொற்போர்களம்.. கடைசியிலே ரெண்டு பேரையும் சேர்த்து வேலாயுதம் துரைச்சாமின்னு வைச்சிட்டாங்க. அதை நான் வேது ன்னு வைச்சிகிட்டேன்.”
இவ்வளவு நேரமும் காதை பொத்திக்கொண்டிருந்த சுரேஷ், “என்னப்பா உன் பேரு கதையெல்லாம் முடிஞ்சுதா?”
“அதற்காகவா காதை பொத்திக்கிட்டு இருந்தீங்க…”
“இந்த கதையை நூறுவாட்டி கேட்டாச்சி.”
“என் சோகம் உனக்கு எங்கே புரிய போகுது.”
“சரி தெய்வா நீங்க உங்க ஹாஸ்டலுக்கு போங்க-. எங்க அம்மாவோ அவங்க அம்மாவோ வர்றப்போ நீங்க எங்க வீட்டுக்கு வாங்க.”
“ஓகே. நாளைக்கு ஆபீஸ்ல சந்திக்கலாம்.”


விடுதி அறைக்கு சென்றாள்..
“என்னம்மா இந்த ரூமுக்கு புதுசா வந்திருக்கியா?”
“ஆமா”
“பேரு”
“தெய்வா”
“உங்க பேரு”
“என்னம்மா உனக்கு எத்தனை வயசு இருக்கும்? என் வயசு என்ன தெரியுமா? என்கிட்ட நீ கேள்வி கேட்றீயா?”
“இல்ல… தெரி–ஞ்சிக்கத்தான்.”
“பயந்திட்டியா?”
“……”
“என்னைக்கண்டு பயப்பட வேண்டாம். அதே நேரத்தில கொஞ்சம் பயமும் வேணும். என் பேரு தெய்வநாயகி.”
-&நடிகை கே.ஆர்.விஜயாவின் உண்மையான பெயர். அந்த கால கே.ஆர்.விஜயா மாதிரி அழகான முகம். ஆனால் புன்னகையைத்தான் தொலைத்துவிட்டாள். கழுத்தில் கிடந்த தாலியை அழகு ஆபரணமாக மராப்பு சேலைக்கு மேலே மிளிரவிட்டு இருந்தாள்.
“இந்த பாரும்மா இந்த ரூம்ல உனக்குன்னு ஒரு சாவி தந்திருப்பாங்க.. அதனால எந்த நேரத்திலேயும் வரலாம்ன்னு நினைக்காதே. பொதுவா 10 மணிக்குள்ளே ஹாஸ்டலுக்கு வரணும். ஆனா இந்த ரூமுக்கு நீ ஒன்பது மணிக்கே வந்திரணும். லேட்டா ஆகும்ன்னு தெரிஞ்சா எனக்கு போன் பண்ணி தகவலை சொல்லிடணும். அப்புறம்… காதல் அது இதுன்னு ஏதாவது பிரச்சினையில மாட்டக்கூடாது. நீ பிரச்சினையில மாட்டி என்னை விசாரணை அது&இதுன்னு பாடாப் படுத்திடுவாங்க… இன்னொரு விஷயம் காலையிலே எந்திருச்சி இந்த அறையை சுத்தம் செய்துடு. அழுக்கு துணியெல்லாம் அதிகமாக சேர்த்து வச்சிடாதே. அப்பப்போ துவைச்சி சுத்தமா வச்சிரு. அப்பதான் இந்த இடம் சுத்தமா இருக்கும்.”
&ஹாஸ்டல் நிபந்தனையை விட இவளுடைய கண்டிசன் அதிமாக இருக்குதே. என்ற நினைப்போடு தலையை ஆட்டினாள் தெய்வா.
அந்த நேரத்தில் தெய்வாவின் போன் அவளை அழைத்தது.
அவளின் ஆர்வத்தைவிட அந்த தெய்வநாயகி காது செல்போனில் ஆர்வம் காட்டியது.
(தெய்வாவை வறுத்தெடுக்கும் தெய்வநாயகி யார்? தெய்வாயை அறியும் முன் தெய்வநாயகியை அறிந்து கொள்ளலாம்… ஒரு வாரம் காத்திருங்கள். கதையை உனடியாக படிக்க… ஷ்ஷ்ஷ்.ணீனீணீக்ஷ்ஷீஸீ.வீஸீ இணைய தளத்தில் பணம் கட்டி படிக்கவும்.)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.