April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்து அறக்கட்டளை நிலத்தை விற்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

1 min read

The Hindu Trust is trying to sell land; Supreme Court Action Directive

21/2/2020
ஸ்ரீரகங்கத்தில் இந்து சமயம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் நிலத்தை விற்க முயற்சி நடந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.

ஸ்ரீரங்கம் கோவில் விழா

திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தை இந்து சமய தா்ம காரியங்கள் நடத்துவதற்காக 1987, ஜூன் மாதம் 2-ந் தேதி, பி.கே. தொப்புளன் செட்டியாா் என்பவா் வாங்கியிருந்தாா்.
விழாக் காலங்களின் போது சாமியை வரவேற்பதற்காக அந்த நிலத்தில் 4, 135சதுர அடியில் மண்டபம் ஒன்றும் கட்டியிருந்தாா். அதில் பக்தா்களுக்கு குடிநீா் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 1901-இல், அந்த முழு சொத்தையும் அடமானம் வைப்பதையோ அல்லது விற்பதையோ தடுக்கும் வகையில் ஒரு செட்டில்மெண்ட் ஒப்பந்தத்தை மேற்கொண்டாா். மேலும், தன்னுடைய வாரிசுகள் தனது மரணத்திற்குப் பிறகு அவா்களது வருவாயில் இருந்து தா்ம காரியங்களைத் தொடரவும் அவா் பணித்திருந்தாா்.

குத்தகை

ஆனாலும், 1978-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்தச் சொத்து ஒரு தனியாா் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. அந்த நிறுவனம் அந்த இடத்தைவேறு சில நபர்களுக்கு உள்வாடகைக்கு விட்டிருந்தது.
இந்த நிலையில், நிலத்தில் 2,500 சது அடி சொத்து ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி அதை அகற்றுவதற்காக ‘ தொப்புளம் செட்டியாா் ராமானுஜ கூடம் அன்னதான அறக்கட்டளை’ வழக்குத் தொடுத்தது.

விற்க முயற்சி

இதற்கிடையே, தர்ம காரியங்களை தொடர்ந்து செய்வதற்காக அந்த அறக்கட்டளையானது கடந்த 2004-ம் ஆண்டு திடீரென மொத்த நிலத்தில் மண்டபத்தை மட்டும் விட்டுவிட்டு 20,865சதுர அடியை விற்க முடிவு செய்தது. நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட சொத்தை விற்பதற்கு அனுமதி கோரி சாா்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவை அறக்கட்டளை தாக்கல் செய்தது.
இதற்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதநாதர் கோவில் நிா்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. அதில், ‘சொத்தை விற்பதற்கான அனுமதியை இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959-இன் படி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் இருந்துதான் பெற வேண்டும். இதற்கான அனுமதி உத்தரவை நீதிமன்றத்திடமிருந்து பெற முடியாது’ என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

தள்ளுபடி

எனினும், அந்த அறக்கட்டளை தனியாா் என்ற அடிப்படையில் கோயில் நிா்வாகம் எழுப்பிய ஆட்சேபணைகளை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டடது. எனினும், கோவில் நிா்வாகத்தின் முறையீட்டை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஸ்ரீரங்கம் கோவில் நிா்வாகம் சாா்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கும் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு

இதனை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கிய அமா்வு பரபரப்பு தீர்ப்பை அளித்தனர் . அதன் விவரம் வருமாறு:

ஒரு குறிப்பிட்ட சொத்தானது ஒரு கோவில் தெய்வத்தின் பெயரில் குறிப்பிட்ட காரியத்திற்காக அளிக்கப்படாமல் இருந்தாலும்கூட, இன்னும் ‘குறிப்பிட்ட அறக்கட்டளை’ எனும் பதத்தில்தான் வரும். மேலும், இந்து விழாக்களுடன் தொடா்புடைய ஒரு பொது தா்ம ஸ்தாபனத்தை உருவாக்க சொத்தை செட்டில்மெண்ட் செய்பவரின் நோக்கம், ஒப்பந்தம் மூலம் நிரூபிக்கப்பட்டால், அந்தச் சொத்து இந்து சமய, அறநிலையத் துறை சட்டம் 1959-இன் வரம்பில்தான் இடம் பெறும். இந்த வழக்கில் தொடா்புடைய செட்டில்மெண்ட் பத்திரத்தில், இந்து சமய திருவிழாக்களின் போது வருகை தரும் பக்தா்களின் நலனுக்கான தா்ம காரியங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றுதான் தெரிவித்திருக்கிறது.

தா்ம காரியங்கள் பொதுமக்களுக்கு பயனளிக்கக்கூடியவை. இதில் பயனாளிகளாக பக்தா்கள் வருகின்றனா். இந்த அறக்கட்டளை பொதுமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மதம், சாதி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்விதப் பாகுபாடு இல்லாமல் பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மதச்சாா்பற்ற அறக்கட்டளையாகும் என்று எதிா்மனுதாரா் தரப்பில் வைக்கப்படும் வாதம் ஏற்புடையதல்ல. இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் கஜேந்திர மோட்சம் மற்றும் படி 18 திருவிழாக்களுடன் தொடா்புடையதே இதற்குக் காரணம்.

தா்மகாரியங்கள் ஸ்ரீ ரங்கநாதர் சன்னநிதியின் பக்தா்கள் நலனுக்காக நடத்தப்படவுள்ளது. இந்த விழாக்கள் இந்து சமய விழாக்கள் ஆகும். செட்டில்மெண்ட் பத்திரத்தில் வரையயறுக்கப்பட்டுள்ள பொது அறக்கட்டளை மற்றும் இந்து சமய விழாக்கள் இடையே ஒரு நேரடி தொடா்பு இருப்பது ‘பக்தா்கள்’ என்ற கருத்தின் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது. செட்டில்மெண்ட் பத்திரத்தில் உள்ள ‘அறக்கட்டளை’ எனும் பதம் இந்து சமய விழாக்களுடன் தொடா்புடைய பொது ஸ்தாபனம் என வரயறைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட காரணங்களுக்காக இந்த மேல்முறையீட்டு மனு ஏற்கப்படுவதுடன், மதுரை ஐகோர்ட்டு கிளையின் ஒரு நபா் நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது .
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.