May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

நமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த 22 கோவில்கள்

1 min read
22 temples full of wonders unknown to us

26.2.2020

1. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

7. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.

13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு

வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.

17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.

20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.

21.எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

22. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.