May 1, 2024

Seithi Saral

Tamil News Channel

மானசீக மகள்-6 தொடர் கதை, எழுதியவர் கண்ணம்பி ஆ.ரத்தினம்

1 min read

Maanaseega Magal-5 By kannambi AA.Rathinam

(செல்வன்-ரோசி காதல்கள். ஆனால் அந்தக் காதலில் விரிசல் ஏற்பட்டது. இதனால் ரோசிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர்..)

ரோசி கல்யாணப் பத்திரிகை கொண்டுவந்தாள். அவன் இதயம் இடிந்து நொறுங்கியது. இவர்களெல்லாம் ஏதோ ஒரு நியாயத்தை வரவழைத்துக்கொண்டு வளர்த்த அன்பையெல்லாம் குப்பையில் கொட்டிவிடுகிறார்கள். ரோசி எப்படித் துணிந்து விட்டாள். உயிருக்கு உயிராய்ப் பழகியவனுக்கு, காதலித்தவனுக்கு கல்யாணப் பத்திரிகை கொடுப்பது ஒரு நாகரிகமா? என்ற கேள்வி அவனைச் சம்மட்டி அடி அடித்தது, கடப்பாரைபோல் தாக்கியது. பத்திரிகையை வாங்கிக்கொண்டான். கொடுத்துவிட்டுத் திரும்பும்போது ரோசியின் கண்களில் கண்ணீர் பெருகியிருந்தது. செல்வனின் கண்கள் நிறைந்திருந்தன.
அடுத்து அச்சக உரிமையாளர் அறைக்குச் சென்றாள். “என்னம்மா… ரோசி… செல்வன் மனசு ஒடிஞ்சி போனாம்மா… நீயில்லாம ஆபீசும் மந்தமாகிப்போச்சு. ஆழமா யோசிக்காம அவசரப்பட்டு எடுத்த முடிவுபோலத் தெரியுது. எதாயிருந்தாலும் இனி எதுவும் செய்ய முடியாது. கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்த இடத்துல பழைய கதையைக் கிளறிப் பயனில்ல. பத்திரிகையைக் கொடு” என்று சொல்லிவிட்டு கையில் வாங்கிக்கொண்டார். அலுவலகப் பணியாளர்களுக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுத்தாள். யாரும் முகம் மலர்ந்து வாங்கும் சூழ்நிலை நிலவவில்லை. ரோசி கலையிழந்த முகத்துடன் அழைப்புகளைக் கொடுத்துவிட்டு மௌன விடை பெற்றாள்.
ரோசி சென்றதும் அச்சக உரிமையாளர் முத்துமாணிக்கம் செல்வன் அறைக்கு வந்தார். “என்ன செல்வம்… எல்லாம் எதிர்பாராத திருப்பமாக இருக்கு. என்ன செய்றது. இன்னாருக்கு இன்னார் என்கிற விதி இருக்கே… அதுபடிதான் நடக்கும். இன்னைக்கு வேலை முடிஞ்சதும் நீ உங்க வீட்டுக்குப் போகக்கூடாது. எங்க வீட்டுக்கு வந்திடு. எல்லாம் சரியாகிப் போயிடும்” என்றார்.
“வேண்டாம் ஸார். என்றைக்கு அவளுக்கு வேற இடத்துல கல்யாணம் நிச்சயமாச்சோ, அன்னைக்கே என் மனச எப்படி மாத்திக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இன்னைக்கே நம்ம பத்திரிகையில ஒரு விளம்பரம் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். “கணவனால் கைவிடப்பட்ட பெண், அல்லது கணவனை இழந்த பெண் தேவை என்று ஒரு விளம்பரம் கொடுக்கப்போறேன்” என்றான் செல்வன்.
“என்னப்பா சொல்றே”, உணர்ச்சி வசப்பட்டு கேட்டார் முத்துமாணிக்கம்.
“உண்மைதான் ஸார்… காதலிச்சவ கைவிட்டுட்டான்னு என்னை நான் பாதிக்கச் செய்யத் தயாரா இல்ல. தனிமை ஒரு மனிசன பாடாய்ப்படுத்தும். அந்தப் பாடுகளெல்லாம் பட்டுத் தொலைக்க நான் விரும்பல்ல. என் நிலையை எடுத்துச் சொல்லி, அம்மாவுக்கு உதவியாக இருக்க ஒரு பெண் தேவை – என்கிறதைச் தெரிவிக்கப்போறேன்.”
விளம்பரம் வெளியானது. ஸெல்போன் மூலம் பலர் தொடர்பு கொண்டனர். சிலர் ஒளிப்படங்களை அனுப்பிவைத்தனர். செல்வனைப் பொறுத்தவரையில் பெண்களிடம் பருவச் செழிப்பையோ, கவர்ச்சி அழகையோ ஆடம்பரத்தையோ எதிர் பார்க்கவில்லை. கனிந்த மனம் கொண்ட நல்ல தன்மையுள்ள, பிற பெண்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்காத, தலைக்கனம் இல்லாத நல்ல குணமுள்ள பெண்தான் தேவை.
ஸெல்போனில் பேசிய பல பெண்களில் இனிமையான சொல் நயமுள்ள ஒரு பெண்ணின் குரலில் இருந்த ஈரக்குழைவு செல்வனைக் கவர்ந்தது. ஒரு மனிதனின் மனதைக் கவர்வதற்கு குரல் இனிமையும் அவசியப்படுகிறது. அந்தப் பெண்ணை நேரில் சென்று பார்த்துப் பேசலாம் என்று நினைத்தான். எங்கே எப்போது சந்திக்கலாம் என்று கேட்டான். “கடற்கரையில் உள்ள வள்ளுவர்சிலை அருகில் அல்லது நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் சந்திக்கலாம்” என்று பதில் வந்தது.
ஏன் வள்ளுவர் சிலை அல்லது வள்ளுவர் கோட்டத்தில் சந்திக்கவேண்டும், எதாவது ஒரு கோயிலில் சந்திக்கலாமே. என்று செல்வன் பதில் கேள்வி போட்டான்.
“வேண்டாம்… என் கல்யாணம் ஒரு கோயிலில் வைத்துதான் நடந்தது. ஆனால் எங்கள் கல்யாணம் முடிந்து இரண்டு வருடத்தில் நாங்கள் ஒரு புது வீடு கட்டினோம். புதுமனைப் புகுவிழா நடத்துவதற்கு அழைப்பிதழ் அச்சிட்டோம். புது வீட்டுக்கு மின்சார இணைப்பு கொடுக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில் பழைய வீட்டிலிருந்து மின் இணைப்புக் கொடுத்து இணைப்பு லைன் சரியாக இருக்கிறதான்னு பரிசோதனை செய்யும்போது சுற்றி வைத்திருந்த வயரில் மின்சாரம் பாய்ந்து பக்கத்தில் சாய்ந்து நின்ற என் கணவரைப் பறிகொடுக்கும் நிலைமை ஏற்பட்டது. எனக்குக் குழந்தை இல்லை. குழந்தை பெறும் உடல்கூறும் எனக்கு இல்லை. நீங்கள் உங்கள் நிலைமையைத் தெளிவாக ஒளிவு மறைவு இல்லாமல் பத்திரிகையில் தெரிவிச்சிருந்தீங்க. எனக்குத் ஒரு துணை வேணும், இந்த வாய்ப்பை வரப் பிரசாதமா நினைக்கிறேன். ஆனால் கோயிலுன்னா எனக்கு அலர்ஜி. வள்ளுவர் வாழ்க்கை நெறி சொன்னவர், இல்லறநெறி சொன்னவர். நான் ஒரு எழுத்தாளர். அதனாலத்தான் விளம்பரம் பார்த்ததும் தொடர்புகொண்டேன்” என்று எதிர் முனையிலிருந்து குரல் ஒலித்தது.
“எல்லாமே சொல்லி முடிச்சிட்டீங்க, இனி நேரில்தான் சந்திக்கணும். மெரினா பீச்ல நம்ம சந்திச்சா தப்பான ஜோடின்னுகூட நினைப்பாங்க. அந்த அளவுக்கு அங்கே ஆணும் பெண்ணும் ஜோடி சேருறாங்க. அங்கே வேண்டாம். மாலை ஆறுமணிக்கு வள்ளுவர் கோட்டம் வந்திருங்க சந்திக்கலாம்” என்று பேசி முடித்து போனை வைத்தான்.
முன்பின் தெரியாத பெண்ணை வள்ளுவர் கோட்டம் வரச்சொல்லிவிட்டேன். முகம் தெரியாது. அவளை எப்படி நான் அடையாளம் கண்டுபிடிப்பது? என்னை அவள் எப்படி அடையாளம் கண்டுகொள்வாள்? எந்த இடத்தில் சந்திக்க வேண்டும்? எதுவும் பேசவில்லையே… என்று நினைத்தான்.
அவள் எண்ணுக்கு போன் போட்டான். லைன் கிடைக்கவில்லை. சலித்துக்கொள்ளவில்லை. சரி எப்படியாது கண்டுபிடித்துவிடலாம் என்று தேற்றிக்கொண்டான்.
மாலை ஐந்தரை மணிக்கு வள்ளுவர் கோட்டம் வந்துவிட்டான். ‘வாழ்க்கைத் துணை’ குறள் பதித்த தூண் அருகில் வந்து நின்றான். குறள்களைப் படித்துக்கொண்டிருந்தான். ஐம்பத்தேழாம் குறள் ‘சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பேதலை” என்ற குறளைப் படித்துவிட்டு அதன் உட்பொருளை உணர்ந்துகொண்டிருந்தான். பெண்களை வெளியில் விடாமல் சிறகொடிந்து போகும் நிலை பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சிந்தித்திருக்கிறார். பெண்களின் கற்பை வேறு யாராலும் காக்க முடியாது, ஏனென்றால் கற்பு என்பது உடலில் இல்லை. மனதில் இருக்கும் கற்பை அவரவரேதான் காத்துக்கொள்ள வேண்டும் என்பதை எவ்வளவு நுட்பமாகச் சொல்லியிருக்கிறார்.
இந்தக் காலத்தில்கூட மனைவியை வீட்டுக்குள் அடைத்துப் போட்டுவிட்டு வெளியில் பூட்டுப்போட்டுப் பூட்டிவிட்டு சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு வேலைக்குப் போகின்ற பத்தாம் பசலிகள் கிராமங்களில் கூட இருக்கிறார்கள். குழந்தை யாருக்குப் பிறந்தது என்று சொல்லமுடியாத நிலையிலும் பெண்கள் கணவனுக்குத் துரோகம் செய்துகொண்டு கண்டவருடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள். இதற்கிடையில் குடும்பக் கட்டுப்பாட்டு உறைகளைக் கையில் வைத்துக்கொண்டு அலுவலகம் போவது போல் லாட்ஜ் அறைகளில் லீலைகள் செய்கின்றவர்களும் இருக்கிறார்கள். மனைவியோடு மட்டும்தான் லாட்ஜ்களுக்கு வரவேண்டும் என்று ஒரு அறிவிப்பு வைப்பதாக இருந்தால் லாட்ஜ் அறைகளெல்லாம் காலியாகத்தான் கிடக்கும் என்ற அளவில்தான் நாடு போய்க்கொண்டிருக்கிறது. உடல் உறவுக்கு நாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மனரீதியான அன்பு உறவு குறைந்துகொண்டேபோகிறது.
கிளுகிளுப்பான சினிமாக்கள், முக்கால் நிர்வாண முக்கல் முனகல் குதியாட்டக் காட்சிகள் இளைஞர்களை இழிந்த செயல்களில் ஈடுபடுத்துகிறது. இதற்கிடையில் டாஸ்மாக் பார்களில் இளைஞர்கள் கூடிக் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பலர் கூடிக் குலவும் நிலை கேவலமானதாக இருக்கிறது. இப்போது வெளிவருகின்ற சில படங்களின் காதல் பாட்டுக் காட்சிகளைப் பார்க்கும்போது மிகவும் சபலமாக இருக்கிறது. பாடல்கள் கேட்காமல் வெறும் காட்சிகளை மட்டும் பார்த்தால் நீலப்படம்போல், படுக்கையறைக் காட்சிபோல் அப்பட்டமாக இருக்கிறது. குடிபோதைக் காட்சிகளெல்லாம் சர்வசாதாரண மாகிவிட்டது. தணிக்கைக்குழு என்று ஒன்று இருக்கிறதா? என்று யோசிக்கும் நிலையில் சினிமா உலகம் போய்க்கொண்டிருக்கிறது. இளைஞர்களை நரக வாழ்க்கைக்கு இழுத்துக்கொண்டிருக்கிறது.
எழுத்தாளர்கள் எதார்த்தம் எதார்த்தம் என்று எதை எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பச்சைத்தனமாகவும், கொச்சைத்தனமாகவும் பாலுணர்வைத் தூண்டும் அளவில் எழுதுகிறார்கள். பெண் எழுத்தாளர்களும் அருவருப்பாக
உடல் வர்ணனைகள் செய்கிறார்கள். அப்படிப்பட்டவற்றைப் படிக்கும்போது, கிளுகிளுப்பான படக்காட்சிகளைப் பார்க்கும்போது உடல் பாலுணர்வால் தூண்டப்படுகிறது. உடனே தனது உணர்வுக்கு வடிகால் தேடுகிறது அதனால்தான் மனம் அத்துமீறிப் போய் கண்டபடி வாழும் நிலை ஏற்படுகிறது. கீழ்நிலையான போக்குகளில் ஈடுபடுகிறது. இவற்றுக்கெல்லாம் மூலவேர் படைப்பாளர்களிடம்தான் இருக்கிறது. பணம் பண்ணும் நோக்கத்தில் எதைச் செய்தாலும் அது பண்பு கெட்டத் தனமாகத்தான் இருக்கும். அப்படித்தான் நாடு அலங்கோலப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. பெரும்பாலான அரசியல்வாதிகள் எப்போதும் எதிலும் முறைகேடுகள் செய்வதிலேயே மும்முரமாகச் சிந்திக்கிறார்கள். முறையாக அரசியல் செய்யவோ, ஆட்சி செய்யவோ யாரும் கருதவில்லை. அவர்களின் மனம் எப்போதும் சீரழிவுகளில் சிதைந்து கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு வரம்புகட்ட வேண்டு மென்றால் இளைஞர் உலகம் விழிப்புணர்வு பெறவேண்டும். எல்லா இன்பமும் பெண்களிடம்தான் இருக்கிறது என்ற போதமற்ற எண்ண ஓட்டங்கள் மாறவேண்டும். நாட்டுக்காக ஏதாவது ஒரு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஊட்டப்படவேண்டும். அதற்கு ஊடகங்கள் வழியாக நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும்.
வீட்டில் டி. வி. இருந்தும், ஊரில் சினிமா தியேட்டர்கள் எத்தனை இருந்தும் வேகாத வெயிலில் கிரிக்கெட் மட்டையைத் எடுத்துக்கொண்டு சாலை ஓரங்களில், ரயில்பாதை ஓரங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்க்கிறோம். அவர்களுக்கு அந்த கிரிக்கெட் மட்டை பெரிதாகத் தெரிகிறது. வேறு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. அதனால்தான் டி. வி. பெட்டியின் முன் சரணாகதி அடையாமல், சினிமா தியேட்டர் வாசல் முன் நிற்காமல் வெயிலில் விளையாடுகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு நாட்டுப்பற்று ஊட்டப்பட வேண்டும். நாட்டில் நன்மைகள் விளையச் செய்யும். நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். அற்பத்தனமான பாலுணர்வுகளிலிருந்து அவர்களை விடுபடச் செய்யவேண்டும். அந்தக் காலத்து நாட்டு விடுதலைப் போராட்டத் தியாகிகளின் மனம் வீரக்களமாக இருந்தது. அதைப் போல் வீர உணர்ச்சிகள் பெறச் செய்யவேண்டுமே தவிர தீய செயல்களில் கவனம் செலுத்தும் நிலை இல்லாமல் செய்யவேண்டும். அதற்குக் கல்விமுறை நன்றாக அமையவேண்டும். நல்ல நல்ல கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனத்தில் நல்லவை வேரூன்றச் செய்யவேண்டும். அதற்கு ஆட்சியாளர்கள் நல்ல திட்டமிட வேண்டும். பணத்தைச் சுருட்டும் திட்டங்களில் கவனம் செலுத்தாமல் பயனுள்ள வாழ்க்கை, பயன் செய்யும் வாழ்க்கை வாழ ஒவ்வொருவரும் உயர்ந்த கோட்பாடு கொண்டவர்களாக உருவாக வேண்டும்.
இந்த நாடு விளங்காது, உருப்படாது என்று சலித்துக்கொள்ளும் நிலையிலிருந்து மக்களை விடுவித்து நம்பிக்கை ஊட்டவேண்டும். அப்படி ஒரு நிலை இந்த நாட்டில் தோன்றுமா? தோன்ற வேண்டும்.
இப்படியெல்லாம் செல்வனின் சிந்தனையோட்டம் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தது. அப்போது அங்கே இளமஞ்சள் நிறத்தில் புடவைகட்டி மங்களகரமான முகத்துடன் ஒரு இளம் பெண் வந்துகொண்டிருந்ததைக் கண்டான். நடிகை நதியாவின் முகச்சாயல் அந்தப் பெண்ணிடம் இருந்தது. இந்தப் பெண்ணாகத்தான் இருக்கும் என்று அவன் மனம் உந்திச் சென்றுகொண்டிருந்தது. ஏதோ ஒரு ஈர்ப்பு அவன் மனதைச் சுண்டி இழுத்தது. சற்று முன் வந்து “நீங்கதானே… நித்யா….” என்று தயக்கத்துடன் கேட்டான். செல்வனின் தோற்றப் பொலிவு அவள் மனதில் ஒரு செழிப்பை ஏற்படுத்தியது. “ஆமாம்… நான்தான்” என்ற தலை அசைவுடன் புன்னகை பூத்தாள். அவனுடைய கட்டமைப்பு அவள் கண்களில் ஒரு நாணக் குழைவை ஏற்படுத்தியது.

(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.