May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

ரங்கநாதர் மீது காதல் கொண்ட துலுக்க நாச்சியார்; ஸ்ரீரங்கம் வரலாறு

1 min read
Thulukka Nachiyar loves Ranganathar; History of SriRangam

மகாவிஷ்ணு அருள்பாலிக்கும் 108 திவ்ய தேசங்களில் பெரும்பான்மையான கோவில்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. சில கோவில்கள் வட நாட்டில் சில கோவில்கள் இமயமலை அடிவாரத்திலும் உள்ளது. இந்த கோவில்கள் ஆழ்வார்களால் பாடல்பெற்ற தலமாக போற்றப்படுகிறது.
இந்த 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படுவது ஸ்ரீரங்கம். திருச்சி நகரின் அடையாளங்களில் ஒன்றாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் விளங்குகிறது. இது தென் இந்தியாவியே மிக உயரமான கோபுரம் ஆகும். இதன் உயரம் 72 மீட்டர் (236 அடி). 17-ம் நூற்றாண்டில் இந்த கோபுரத்தை கட்ட தொடங்கினாலும் இடையில் நின்று போனது. பின்னர் 1987-ம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோவில் 600 ஏக்கர் பரப்பளவில் ஏழு சுற்று மதில்களை கொண்டது. இந்த மதில்களில் 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் புராணகால கோவில் மட்டுமல்லாது வரலாறு மாறுதல்களிலும் தொடர்புடையது.

தல வரலாறு

ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் பாற்கடலில் இருந்து சுயம்புவாக வந்ததாக புராணம் கூறுகிறது. அந்த ரங்கநாதரை பிரம்மா பெற்று அதற்கு நித்திய பூஜை செய்யும்படி சூரியனை பணித்தார். அவர் அதற்கு பூஜை செய்து வந்த நிலையில் பின்னர் சூரிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் பூஜை செய்து வந்தனர். சூரிய வம்சத்தில் வந்த ராமபிரானின் தந்தை தசரதரும் அதற்கு பூஜை செய்து வந்தார்.

இந்த நிலையில்தான் கைகேயின் சூழ்ச்சியால் ராமர் காட்டுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. காட்டில் ராமபிரானின் மனைவி சீதை, இலங்கை வேந்தன் ராவணனால் கடத்தப்பட்டாள். ராவணனுடன் ராமர் போரிட்டு சீதையை மீட்டு வந்தார். ராவணனின் நடவடிக்கையை அவனது தம்பியருள் ஒருவனான வீபீஷணன் விரும்பவில்லை. ராமனிடம் சரண் அடைந்தான். அவனை இலங்கையின் அரசாக்கினார் ராமர். பின்னர் ராமபிராணுடன் விபீஷணன் அயோத்தி வந்தான். அவனுக்கு தன் நினைவாக ராமபிரான் சூரிய வம்சத்தினர் வணங்கி வந்த ரங்கநாதரை பரிசாக வழங்கினார். அந்த சிலையை கீழே வைக்காமல் இலங்கைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரி ஆற்றின் கரையை அடைந்தான். அங்கு காலைக் கடன்களை முடிக்க நினைத்த அவன் சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

விநாயகர்

அப்போது விநாயகர் ஆடு மேய்க்கும் சிறுவனாக அங்கு வந்தார். அச்சிறுவனிடம் ரங்கநாதர் சிலையை கீழே வைக்க கூடாது என்று சொல்லி கொடுத்தான். ஆனால் சிறுவனாக வந்த விநாயகரோ அந்த சிலையை கீழே வைத்துவிட்டார். விபீஷணன் வந்து கீழே வைத்திருந்த சிலையை மீண்டும் எடுக்க முயன்றபோது முடியவில்லை.
இதனால் விபீஷணன் வருத்தமடைந்தான். அப்போது சிறுவனாக வந்த விநாயக பெருமான் தான் யார் என்பதை அடையாளம் காட்டினார். அவர் விபீஷணனிடம் இந்த சிலை இங்கேயே இருக்கட்டும் என்று கூறினார். அதற்கு விபீஷணன் இந்த சிலை இலங்கையை நோக்கி இருந்து எங்களுக்கு அருளை தரவேண்டும் என்று வேண்டினார். அதன்படி அப்போது அந்தப் பகுதியை ஆண்ட தர்மவர்ம சோழன் இந்த சிலை தெற்கு நோக்கி அமைத்து கோவில் எழுப்பினான். அதுதான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
சிறுவனாக வந்த விநாயகர் அருகே உள்ள மலையில் போய் மறைந்தார். அந்த இடம்தான் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் மணலால் மூடப்பட்டது.
பின்னாளில் ஆட்சிக்கு வந்த சோழ மன்னன் ஒருவன், ரங்கநாதரின் கோவில் எங்கிருக்கிறது என்பதை அறிய தினந்தோறும் ஆற்றுப்பகுதிக்கு வந்து தேடினான். அப்படி ஒரு நாள் இங்கு வந்து தேடிய போது ரங்கநாதர் கோவில் மணலில் புதைந்து போவதற்கு முன்பு ரங்கநாதருக்கு செய்யப்படும் பூஜையின் போது வேதியர்கள் ஓதிய மந்திரங்களை கிளி ஒன்று ஓதியது. அந்தக் கிளியானது பழைய கோவில் வளாகத்தில் இருந்த மரத்தில் வசித்ததாகும். கிளியின் மந்திர ஒலியை கேட்ட மன்னன் அதனிடம் மறைந்த கோவில் பற்றி கேட்டான். கோவில் மண்ணில் புதையுண்டு போன இடத்தைக் கிளி காட்டியது. அதன்பின் அந்த மன்னன் புதைந்த கோவிலை மீட்டு புணரமைத்தான். கிளி சொன்னதன் அடிப்படையில் கோவிலை மீட்டு மீண்டும் சீரமைத்து கட்டியதால் அந்த மன்னன் “கிளிச்சோழன்” என அழைக்கப்பட்டான்.

தற்போதுள்ள ரங்கநாதர் கோவில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகும். சோழர்கள் மட்டுமின்றி பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள் என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு 14-ம் நூற்றாண்டில் சோதனை ஏற்பட்டது. டெல்லி சுல்தான்களால் இக்கோவில் சூறையாடப்பட்டது.

அதன்பின் மீண்டும் கோவில் புணரமைக்கப்பட்டது, தற்போது சிறப்புற்று விளங்குகிறது.

இக்கோதவில் மூலவர் ரங்கநாதர் என்றும் உற்சவர் நம்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். மூலவராக இருக்கும் தாயாரின் பெயர் ரங்கநாயகி.
உற்சவர் தாயாரும் ரங்கநாயகி என்றே போற்றப்படுகிறார்.இந்தக் கோவிலின் தல விருட்சம் புன்னை மரம்.
கோவிலில் சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள்
இங்கு உள்ளன.

இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் வைகுண்ட ஏகாதேசி பிரசித்தியானது.
இத்தலத்தின்பெருமைகளை பெரியாழ்வார்,
ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,
நம்மாழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர்.

=======

சுக்கு படையல்

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தினமும் நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். பெருமாளுக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.

====

ஆண்டாள் ஐக்கியமான ஆலயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பூமி பிராட்டியின் அம்சமாக அவதரித்தவர்தான் ஆண்டாள். பெரியாழ்வாரால் துளசி மாடம் அருகே கண்டெடுக்கப்பட்ட ஆண்டாளை அவர் பிள்ளையாக வளர்த்தார். ஆண்டாள் கண்ணனை காதலித்தாள். அவனையே திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இறுதியில் பெரியாழ்வார் கனவில் மகாவிஷ்ணு தோன்றி ஆண்டாளை ஸ்ரீரங்கம் அழைத்துவரும்படி கூறினார். அதன்படி அங்கு சென்றதும் ரங்கநாதருடன் ஆண்டாள் ஐக்கியமானாள். அங்கு ஆண்டாள் ரங்கநாதருடன் திருமணக் கோலத்தில் காட்சி அளித்தார்.

====

ராமானுஜரின் உடல்

வைணவத்தில் சமய புரட்சியை ஏற்படுத்தியவர் ராமானுஜர். இவர் மகாவிஷ்ணு துயில் கொள்ளும் ஆதிசேடனின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் கோவில் சம்பிரதாயங்களில் பல்வேறு சீர் திருத்தங்களை செய்தார். 1017ம் ஆண்டு பிறந்த ஸ்ரீராமானுஜர், 120 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்தார். இவர் ஸ்ரீரங்கத்தில் தங்கி இருந்து இறைபணியாற்றினார். அவர் முக்கி அடைந்தபின்னர் அவரது உடல் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
ராமானுஜரின் உடல் இன்றும் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. அவர் இறந்ததும் உடலை 5-வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டதாகவும் அனால் சில நாட்களில் தானாகவே அவரது உடல் பூமியில் இருந்து வெளிவந்தது என்றும் கூறப்படுகிறது. அதன்பின்னர்தான் உடலிற்கு வருடத்தில் இரண்டு முறை சந்தனம் மற்றும் கற்பூரம் பூசப்படுகிறது. இந்த வழக்கம் 1000 வருடங்களாக தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது.

======

கம்பராமாயண அரங்கேற்றம்

வால்மிகி முனிவர் வடமொழியில் எழுதிய ராமாயணத்தை தமிழில் எழுதியவர் கம்பர். அவர் சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் இருந்து எழுதியதாக ஒரு வரலாறு கூறுகிறது. அவர் எழுதிய ராமாயணம் ஸ்ரீரங்கம் கோவிலில்தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அந்த மண்டபம் இன்று கம்பராமாயண மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

====

துலுக்க நாச்சியார்

ஸ்ரீரங்கம் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் ஈசான மூலையில் துலுக்கநாச்சியார் சன்னதி ஒன்று உள்ளது. ரங்கநாதர் மீது அன்பு கொண்டு ஒரு இஸ்லாமிய பெண்ணுக்காக அமைக்கப்பட்டதுதான் இந்த சன்னதி. அந்த இஸ்லாமிய பெண்ணின் பெயர் சுரதானி.
டெல்லி பாதுஷா ஸ்ரீரங்கம் மீது படையெடுத்து கொள்ளையடித்த போது, ரங்கநாதர் சிலையையும் கொண்டு சென்று விட்டார்கள். அந்த சிலை மீது பாதுஷாவின் மகளான சுரதானி மனதை பறிகொடுத்தார். அதனை தன்னுடனேயே வைத்துக் கொண்டாள்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் சிலையை டெல்லிக்கு கொண்டு சென்றபோது அதை திருக்கரம்பனூரைச் சேர்ந்த பெண் பார்த்துவிட்டாள். அவள் அவர்களைப் பின் தொடர்ந்தாள். அவள் மூலமாகத்தான் ரங்கநாதர் சிலை டெல்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது. பின்னர் தலைமை பட்டருடன் 60 பேர் டெல்லி சென்றனர். அவர்களுடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவும் சென்றது. அவர்கள் டெல்லி பாதுஷாவை இசையில் மகிழ்வித்து ரங்கநாதர் சிலையை திருப்பித் தரக் கேட்கிறார்கள். பாதுஷாவும் அந்த சிலையை திருப்பிக் கொடுத்துவிடுமாறு தன்
மகளிடம் சொன்னான். ரங்கனின் வடிவழகில் மனம் பறிகொடுத்திருந்த அந்தப் பெண்ணோ மிகுந்த மனவருத்தத்துடன் அதனைத் திருப்பிக் கொடுத்தாள். ஆனால் அவளால் ரங்கநாதர் சிலையை பிரிந்து அங்கு இருக்க மனம் ஒப்பவில்லை. எனவே சிலையை பார்ப்பதற்காக ஸ்ரீரங்கத்திற்கு வந்தாள்.
இங்கே வந்தால் அவள் மானசீகமாக அன்பு செலுத்திய அந்த ரங்கநாதர் சிலை அங்கு இல்லை. இதனால் மனம் கலங்கினாள். அந்தத் தலத்தைவிட்டுப் போக மனமில்லாமல், இங்கேயே வாழ்ந்து இறுதியில் அரங்கன் திருவடி சேர்ந்தாள்.
டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரங்கநாதர் சிலைக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்த சிலர் வில்வ மரத்தடியில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்பட்டதாகவும், பின்னாளில் அந்த சிலை மீட்டு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரங்கநாதர் மீது அன்பு கொண்டு வந்த அவரோடு ஐக்கியமானதாக கூறப்படும் சுரதானியை ரங்கநாதரின் ஏழு மனைவிகளுள் ஒருவராக கருதி வணங்குகிறார்கள்.
சுரதானியின் சன்னதியை துலுக்கநாச்சியார் சன்னதி என்று அழைக்கிறார்கள். அவங்கு உருவச்சிலை கிடையாது. துலுக்க நாச்சியாரின் சித்திரம் சுவரில் வரைப்பட்டு இருக்கும். அதற்குதான் பூஜை நடைபெறும்.
இந்த துலுக்க நாச்சியாருக்காக ஏகாதசி மற்றும் அமாசவாசை நாட்களில் நம்பெருமாளுக்கு லுங்கி இஸ்லாமியர்களின் வழக்கப்படி லுங்கி அணிவித்து ரொட்டி நிவேத்தியம் படைக்கப்படுகிறது.

========

போர்வை போர்த்தும் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று இரவு நம்பெருமாளுக்கு 365 போர்வை போர்த்தும் நிகழ்ச்சி நடக்கிறது. பெருமாளுக்கு ஒவ்வொரு போர்வையாக போர்த்துப்படுவதால் இந்த நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும். நித்ய பூஜையில் அணிவிக்கப்படும் வஸ்திரத்தில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்காக இந்த போர்வை அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், கார்த்திகைக்குப்பிறகு குளிர் காலம் தொடங்குவதால் இப்படி போர்வை அணிவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஜேஷ்டாபிஷேகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று அகில் மற்றும் சந்தன கலவையை சாத்தி ஜேஷ்டாபிஷேகம் செய்யப்படும். இக்கோவிலில் உள்ள உற்சவர் நம்பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருக்கும். அந்த கவசத்தோடுதான் தினமும் அபிஷேகம் நடைபெறும். ஆனால் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளில் மட்டும் தங்க கவசம் களையப்பட்டு 22 குடங்களில் காவிரி தண்ணீர் எடுத்துவந்து அபிஷேகம் செய்கிறார்கள்.

====

கம்பரை ஆமோதித்த நரசிம்மர்

கம்பர் தாம் எழுதிய ராமாயணத்தை ஸ்ரீரங்கம் கோவிலில்தான் அரங்கேற்றம் செய்தார். அப்போது அவரது ராமாயணத்தில் நரசிம்மரை பற்றி வந்ததை சிலர் குறிப்பிட்டு ராமாயணத்தில் நரசிம்மரைப் பற்றி குறிப்பிடக்கூடாது என்றனர். அதற்கு அந்த நரசிம்மர் சொன்னால் நீக்கிவிடுகிறேன் என்று கம்பர் சொன்னார். அப்போது தூணில் இருந்து நரசிம்மர் வெளிப்பட்டு கம்பரின் பாடலை ஆமோதித்து தலையை ஆட்டினார். அந்த நரசிம்மருக்கு மேட்டழகிய சிங்கர் என்ற பெயரில் தனி சன்னதி தயார் சன்னதி அருகே உள்ளது. இந்த நரசிம்மரின் கையில் சங்கு உண்டு. ஆனால் சக்கரம் கிடையாது. இந்த சன்னதிக்கு எதிரேதான் கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்த மண்டபம் உள்ளது.

=== ===

துஷ்ட சக்திகளை துரத்தும் தலம்

முக்கிய கோவில்கள் ஒவ்வொன்றும் நவக்கிரங்களின் பரிகாரத் தலமாக விளங்குகிறது. அந்த வகையில் ஸ்ரீரங்கம் நவகிரகங்களில் சுக்கிரனின் அம்சம் பொருந்தியவராக இவர் கருதப்படுவதால் சுக்கிரன் பரிகார தலமாக இக்கோவில் விளங்குகிறது.
இங்கிருக்கும் “சக்ரத்தாழ்வார்” சந்நிதியில் வழிபட்டால் நம்மை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள், துரதிர்ஷ்டங்கள் மற்றும் நோய் நொடிகள் நீங்குவதாக நம்பப்படுகிறது. இங்கு வழிபடுவதால் ஒருவருக்கு வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது பலரின் அனுபவ நம்பிக்கை.

========

மூலவருக்கு அபிஷேகம் கிடையாது

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், ‘பூலோக வைகுண்டம்’ என்று அழைக்கப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், ‘மங்களாசாசனம்’ பெற்று பாடிய திருத்தலமாகும்.
இந்தக் கோவிலில், ‘நாழிக்கேட்டான் வாயில்’ வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் என்ற துவார பாலகர்கள் உள்ளனர்.
கோவிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக சங்கு, தாமரை வடிவங்களில், ‘சங்க நிதி’, ‘பதும நிதி’ உருவங்களுடன் இருக்கின்றனர்.
விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.

மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

மூலவர் சுதையினால் இருப்பதால் அபிஷேகம் (திருமஞ்சனம்) செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோவில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்டதைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது.


தங்க விமானம்

ஸ்ரீரங்கம் கோவில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.
வருடத்துகொருமுறை,பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் போய்விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது.

====

தெற்கு ராஜகோபுரம்

ஸ்ரீரங்கம் கோவிலில் தெற்கு கோபுரம்தான் ராஜகோபுரமாக விளங்குகிறது. இந்தக் கோபுரம் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத நிலையில் நின்றுபோனது. அகோபில மடத்தின் 44- வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் 1979-ம் ஆண்டு இந்த கோபுரம் மீண்டும் கட்டத் தொடங்கப்பட்டது. 8 ஆண்டுகள் தொடர்ந்து பணி நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இந்த கோபுரம் கட்ட 1 கோடியே 70 லட்சம் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் 20 ஆயிரம் டன் மணல், 1,000 டன் கருங்கல், 12 ஆயிரம் டன் சிமெண்ட், 130 டன் இரும்பு கம்பிகள், 8 ஆயிரம் டன் வர்ண பூச்சு பயன்படுத்தப்பட்டது.

=========

ஏழு உலகங்கங்களை குறிக்கும் சுற்றுகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஏழு மதில் சுற்றுக்கள் இருக்கின்றன. இந்த ஏழு சுற்றுகளும் ஏழு உலங்களை குறிப்பதாக கூறப்படுகிறது.
மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று பூலோகம் என்றும்,
திரிவிக்ரம சோழன் திருச்சுற்று புவர்லோகம் என்றும்,
அகலங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று சுவர்லோகம் என்றும், திருமங்கை மன்னன் திருச்சுற்று மகர்லோகம் என்றும், குலசேகரன் திருச்சுற்று ஜநோலோகம் என்றும், ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று தபோலோகம் என்றும், தர்ம வர்ம சோழன் திருச்சுற்று சத்யலோகம் என்றும் கூறப்படுகிறது.

==========

யுனெஸ்கோ விருது

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு கலாசார பாரம்பரியம் போன்றவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான யுனெஸ்கோ விருதை கடந்த 2017-ம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இக்கோவிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாண்டிய மன்னன் அளித்த கிரீடம்

பாண்டிய மன்னர்களில் ஒருவரான சுந்தர பாண்டியன் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு காணிக்கையாக ஒரு கிரீடம் அளித்தார். அந்த கொண்டை கிரீடம் இன்றும் நம்பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

அன்னபெருமாள் சன்னதி

ஸ்ரீரங்கம் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் சன்னதி உள்ளது. இவரது கைகளில் கலசம், தண்டம், அன்ன உருண்டை இருக்கும். இவரிடம் வேண்டிக்கொள்ள சாப்பாட்டுக்கு தட்டுப்பாடு வராது என்பது ஐதீகம்.

====

கருடாழ்வார்

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் காட்சி தருகிறார். அவர் எட்டுவிதமான நாகாபரணம் அணிந்துள்ளார். இந்த சிலை இறகுகளை விரித்து பறக்க தயாராக உள்ளது போன்ற நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கருடாழ்வாருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது.

====

உடல்நலம் குணமாக விளக்கெண்ணை தீபம்

மகாவிஷ்ணுவின் அம்சம்தான் தன்வந்திரி. பாற்கடலை கடைந்தபோது வெளிவந்த இவர் மருத்துவ கடவுளாக போற்றப்படுகிறார். இவருக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் தனி சன்னதி உள்ளது. இவர் மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.