சீனாவுக்கு அடுத்து இத்தாலியை குறி வைக்கும் கொரோனா
1 min read
Corona strikes Italy next to China
9/3/2020
கொரோனா வைரஸ் உயிரிழப்பு சீனாவுக்கு அடுத்து இத்தாலி உள்ளது. அங்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
கொரோனா
கொரோனா வைரஸ் சீனாவை பாடாய் படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்த நோய்க்கு பலர் கொத்துகொத்தாய் பலியாகி வருகிறார்கள். இதுவரை சீனாவில் 3,097 பேர் இறந்துள்ளனர்.
இது தவிர, இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட 18 நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த 549 பேரையும் சோ்த்து உலகம் முழுவதும் அந்த வைரஸுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 3,647-ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 44 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதனால், அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80,695-ஆக உள்ளது.
உலக அளவில் இந்த எண்ணிக்கை 1,07,351-ஆக உயா்ந்து இருக்கிறது.
இத்தாலி
சீனாவுக்கு அடுத்து இந்த கொரோனா வைரஸ் அதிகமாக இத்தாலியை தாக்கி உள்ளது. கொரோனாவால் இத்தாலியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 133 போ் உயிரிழந்தனா். அந்நாட்டில் இதுவரை இந்த நோயால் மொத்தம் 366 பேர் இறந்துள்ளனர்.
மேலும் அந்த நாட்டில் ஒரே நாளில் 1,492 போ் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,375-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தீவிரமாக பரவுவதால் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள், இரவு விடுதிகள் உள்ளிட்டவைகளை அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சினிமா தியேட்டர்கள், நாடக அரங்குகள், அருங்காட்சியகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
