மகளை அடித்துக்கொன்ற தந்தை
1 min read
7.4.2020
தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் 60 வீடு தெருவை சேர்ந்தவர் அந்தோணி(38). இவருக்கு எபிஷா(38) என்ற மனைவியும், அந்தோணிஸ்டா (17), சினேகா (15) என்ற மகள்களும் உள்ளனர். அந்தோணிஸ்டா பிளஸ் 2 தேர்வு எழுதி உள்ளார். சினேகா 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளார்.
அந்தோணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை கடல் தொழில் செய்துவந்தார். பின்னர் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டும், திடீரென கோபத்துடன் அருகில் இருக்கும் நபர்களை கடித்தும், கையில் கிடைக்கும் பொருட்களை எறிந்தும் வந்துள்ளார். இதனால் அவரை வீட்டில் உள்ளவர்கள் புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத்தில் தங்க வைத்திருந்தனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி அங்கு சென்று பார்க்க முடியாமல் இருந்தது. இதனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்தோணியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்ததில் இருந்து அவர் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். வீட்டில் டிவியை ஆன் செய்தால் அந்தோணி பயங்கரமாக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 6ம் தேதி மதியம் 12 மணிக்கு மூத்த மகள் அந்தோணிஸ்டா டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை அந்தோணி அவதூறாக பேசி சத்தம் போட்டுள்ளார். பின்னர் கோபமடைந்த அவர், தனது மகள் அந்தோணிஸ்டாவை மரப்பலகையால் அடிக்க ஓடி வந்துள்ளார்.
இதனையடுத்து அந்தோணிஸ்டா வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்துள்ளார். இருப்பினும் அந்தோணி விரட்டி சென்று மரபலகையால் அந்தோணிஸ்டாவின் தலையில் அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்கைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்தோணிஸ்டா சிகிச்சை பலனின்றி மாலையில் உயிரிழந்தார். இது குறித்து ஆத்தூர் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் விசாரணை நடத்தி வருகிறார்.