August 9, 2026

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

1 min read


Protest in Pakistan-occupied Kashmir

8.8.2026
பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கியுள்ளது. அத்துடன் கடும் பணவீக்கம், தொடர் மின்வெட்டு, கோதுமை மாவு பற்றாக்குறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு போன்றவற்றாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரச்னைகளை தீர்ப்பதற்காக பாகிஸ்தான் அரசுக்கும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகத்திற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் நீண்டகால அரசியல் மற்றும் உரிமைகள் சார்ந்த குறைகளை தீர்க்கத் தவறியதாலும், தொடர்ந்து அடக்குமுறைகளைக் கையாள்வதாலும் பாகிஸ்தான் அரசு மீது அப்பகுதிமக்கள் இடையே கடும் கோபம் நிலவுகிறது.

இதனால் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான மனநிலையில் இருந்த மக்களை அவாமி அதிரடி கூட்டுக்குழுவினர் ஒன்று திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை சீர்திருத்தங்கள் மற்றும் சலுகைகளை கோரி வந்தவர்கள், தற்போது நிலைப்பாட்டை மாற்றி முழுமையான சுதந்திரம் மற்றும் தனி நாடு என்ற இலக்கை நோக்கி நகர்ந்துள்ளனர்.
பாகிஸ்தான் படைகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்றும், அவாமி அதிரடி குழுவின் தலைவர் சர்தார் அமன் காஷ்மீரி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சு மட்டுமே பாகிஸ்தான் அரசுக்கு உள்ள ஒரே வழி என்றும், கோரிக்கைகளை ஏற்று ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறுவதைத் தாண்டி அவர்களுக்கு வேறு வழியில்லை என்றும் தலைவர் அமன் காஷ்மீரி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஐ.நா., சபை கண்டனம் தெரிவித்துள்ளது. எந்த இடத்திலும் மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை அந்தந்த நாட்டு அரசுகள் அனுமதிக்க வேண்டும் என்றும் ஐ.நா., சபை வலியுறுத்தி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் தேர்தல் நெருங்கும் சூழலில் வெடித்த வன்முறைகள் மற்றும் மோதல்களில் பொதுமக்களும், பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடியாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஐ.நா., மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *