தொகுதி மறுவரையறை விவகாரம்; எம்பிக்களுடன் 2 மணிநேரம் முதல்வர் விஜய் ஆலோசனை
1 min read
Constituency delimitation issue: Chief Minister Vijay holds two-hour consultation with MPs.
8.8.2026
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டம், 2 மணிநேர ஆலோசனைக்குப்பிறகு நிறைவு பெற்றது.
மத்திய அரசு செயல்படுத்தவிருக்கும் தொகுதி மறுவரையறை திட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமானால், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு ஒப்புக்கொண்டால் பங்கேற்போம் என்று திமுக அறிவித்து விட்டது. அதேபோல, அதிமுகவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று முடிவு செய்தனர்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தவெகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுகவைச் சேர்ந்த ராஜ்சபா மற்றும் லோக்சபா எம்பிக்கள் 19 பேர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்பி சுதா, கர்நாடகாவில் கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் வெங்கடேசன், சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் எம்பிக்கள் செல்வராஜ், சுப்புராயன், மதிமுக எம்பி துரை வைகோ, முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் லோக்சபாவில் 39 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 18 எம்பிக்களும் என மொத்தம் 57 எம்பிக்கள் உள்ளனர். அதில், திமுகவைச் சேர்ந்த 30 எம்பிக்கள், அதிமுகவின் 4 எம்பிக்கள், பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் தலா ஒரு எம்பிக்கள் என 37 எம்பிக்கள் புறக்கணித்தனர்.
சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது உள்ள எண்ணிக்கையான 543 என்பதே தொடர வேண்டும் என்றும், குறிப்பாக, தமிழகத்தில் 39 தொகுதிகளாக தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் முடிந்த பிறகு புறப்பட்டுச் சென்ற முதல்வர் விஜய், காரில் இருந்து இறங்கிச் சென்று சென்னை வாலாஜா சாலையில் திரண்ட மக்களை சந்தித்தபடி நடந்து சென்றார்.
இதனிடையே, இந்தக் கூட்டம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது; பெரும்பாலான கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் உள்ள மக்களின் உரிமை பறிபோகும் வகையில் இந்த தொகுதி மறுவரையறையை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது நிச்சயம் தமிழக மக்களுக்கு அநீதியை இழைக்கும். இன்றைய கூட்டத்தில் நிறைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, முதல்வர் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியிடப்படும்.
தொகுதி மறுவரையறை என்பதே தமிழகத்திற்கு தேவையில்லை. எந்தத் தரப்பில் இருந்து எந்தக்கோரிக்கையும் வரவில்லை. எதுக்கு மறுவரையறை செய்ய வேண்டும். மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இன்னும் 25 ஆண்டுகளுக்கு இதே எண்ணிக்கையை நீடித்தால் தவறுல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது; முதல்வர் விஜய்யின் முன்னெடுப்பில் முதல்முறையாக நடைபெற்ற அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டம் சிறப்பாக முடிந்தது. ஏப்ரல் 16ம் தேதி தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்ததைப் போல, இந்த முறையும் தமிழகம் ஒன்றாக இணைந்து ஓட்டுப்போட வேண்டும் என முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் பாதுகாக்க வேண்டும்.
50 சதவீதம் கூட்டுவோம் என்று சலுகைகளை அறிவித்து பாஜ கதைகட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சலுகையில் ஏமாறாமல் இருக்க வேண்டும். முதல்வர் விஜய்யின் இந்த முன்னெடுப்பு வெற்றி பெறும். தொகுதி மறுவரையறை என்பது தமிழகத்தை ஏமாற்றும் வேலை. முறையான தொகுதி மறுவரையறை என்பதே கிடையாது. போலி தொகுதி மறுவரையறையை ஆதரிப்பது நியாயமற்றது, இவ்வாறு கூறினார்.