May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

தீ(ஆ)ண்டாமை (சிறுகதை) எழுதியவர் கடையம் பாலன்

1 min read

teendamai- short story By Kadayam Balan

“ரேஷனில் ஓசிக்கு அரிசி கொடுத்து மக்களை சோம்பேறியாக்கிட்டாங்க” – இது கிராமங்களில் வேலை எதுக்கும் செல்லாமல் குடித்து பொழுதை போக்குவோரை பார்த்து சொல்லும் பொதுவான வார்த்தை ஆனால் சதாசிவத்தின் வாயில் இருந்து வந்த இந்த வார்த்தை அவரது அகங்காரத்தைத்தான் காட்டியது.
ஒரு காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் ஊரே திரண்டு வந்து சாப்பிடும். ஆனால் இன்று வந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிக பட்சமாக 25 பேர்கூட இருக்க மாட்டார்கள். நாகரிகம் வளர்ந்துவிட்டதா? அல்லது ஊர் மக்களில் பெரும்பாலானவர்கள் தன்னிறைவு அடைந்துவிட்டார்களா?
இருபுறமும் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க நடுவே செருப்பு காலுடன் நடந்து வரும் சதாசிவத்தைக் கண்டு வணங்கினார்கள். சிலர் வாய்வரை வந்த சோற்றை இலையில் போட்டுவிட்டு எழுந்து கைகூப்பி வணக்கம் ஐயா என்றார்கள். ஆனாலும் பதிலுக்கு கையெடுத்து கும்பிட்டால் தன் நிலை குலைந்துவிடுமே என்பதால் தலையை மட்டும் ஆட்டி சென்று கொண்டிருந்தார். சதாசிவம்.
“என்ன மாடசாமி சாப்பாடு எப்படி இருக்கு?”
“ஐயா ரொம்ப நாளைக்கு பிறகு இன்னிக்குத்தான் என் நாக்கு ருசிய பார்த்திருக்கு. ஒருவெட்டு வெட்டுவேய்யா”
“ம்… சாப்பிடு… சாப்பிடு நல்லா சாப்பிடு.”
“ஏலே சின்னச்சாமி என்ன பூஜைக்கு வராம நேரே சாப்பிட வந்துட்டியா?”
“ஐயா… என் தம்பி சண்முகம் வெளியூருக்கு போயிருக்கான், அவன் மவனுக்கு பள்ளிக்கூடத்துல பணம் கட்டணும். அங்க போயிட்டு வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிட்டு. மன்னிக்கணும்.”
“இதவிட உனக்கு பள்ளிக்கூடம் முக்கியமா போச்சி. சரி சரி சாப்பாட்ல வஞ்சம் வக்காதே. ஆமா உன் தம்பி சண்முகத்துக்கு வாழ்வு வந்துட்டு, இப்போல்லாம் இங்க வர்றதே கிடையாது.”
“இல்லய்யா… எங்க குடும்பமே உங்க சோத்த தின்னு வளந்ததுதானே. எந் தம்பி வராட்டாலும் அவன் பொஞ்சாதி இசக்கியம்மா குழந்தையோட வந்திருக்கா.”
எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் கோவில் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள சமாதி முன்பு அனைவரும் சங்கமித்தனர். அவர்கள் அனைவருக்கும் தலா 50 ரூபாய் சதாசிவம் கொடுத்தார். அதை பிரசாதமாக நினைத்து குனிந்து இரு கைகளையும் குவித்து வாங்கிச் சென்றனர்.
ஒரு சிலர் அவரது காலில் விழுந்து வணங்கினார்கள். காலில் என்றால்.. அவர்களது கை விரல்கள் சதாசிவத்தில் செருப்பைக்கூட தொட்டுவிடக்கூடாது. அந்த அளவுக்கு அவரிடம் தீண்டாமை தாண்டவமாடியது. இந்த தீண்டாமை சாதி ரீதியாக வந்தது இல்லை. பணத்திமிரில் வந்தது. உறவுகள் நிலை தாழ்ந்துவிட்டால் அவரது காலடியில் கிடக்க வேண்டும்.
ஊருக்கு ஓதுக்குப்புறத்தில்தான் சதாசிவத்தின் பங்களா உள்ளது. ஒரு காலத்தில் அந்த பங்களா வழியாக செல்வோர் அனைவரும் இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டுதான் போக வேண்டும். சைக்கிளில் செல்வோர்கூட அந்த இடத்தில் இறங்கித்தான் செல்வார்கள். இளைஞர்கள் அந்த வழியாக சைக்கிளில் இறங்காமல் சென்றதற்காக அந்த பங்களா முன்பு கற்களை போட்டு வேகத்தடையை ஏற்படுத்தி வைத்திருந்தார் அந்த பண்ணையார்.
ஒரு காலத்தில் பணத்தை அள்ளிப்போட்டு ஊரில் உள்ளோரை அடிமைகளாக வைத்திருந்தார் சதாசிவம். ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. ஆனாலும் போலீசார் மற்றும் அதிகாரிகளிடத்தில் சதாசிவத்திற்கு செல்வாக்கு இருப்பதால் அவரிடம் யாரும் நேரடியாக மோத மாட்டார்கள். அவரிடம் இருந்து ஒதுங்கிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அதே நேரம் அவரது பண்ணை வீட்டில் வேலை பார்ப்பவர்கள் கட்டாயத்தின் பேரில் அடிமைகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த பங்காளவிற்கு பின்புறம் பெரிய தோட்டம். அந்த குடும்பத்தார் இறந்த பின்னரும் சொத்தைவிட்டு பிரிய மனம் இல்லாமல் அந்த தோட்டத்தின் ஒரு பகுதியில் அடக்கமாகி இருக்கிறார்கள்.
அன்றைய தினம் அந்த கல்லறைத் தோட்டத்தில்தான் சதாசிவத்தின் தந்தைக்கு நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது.
முன்பெல்லாம் இதுபோன்ற நாளில் ஊரே பெருமையாக வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும். ஆனால் சமூகத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வுதான் இந்த அளவுக்கு கூட்டம் குறைந்துள்ளது.
நிகழ்ச்சி முடிந்ததும் சதாசிவத்தின் குடும்பத்தினர் அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் சமாதிக்கு அடுத்து இயற்கையாக அமைந்திருந்த புல் தரையில் அமர்ந்து உண்ட சோறு செரிக்க புகைத்துக் கொண்டிருந்தான்.
இதை சதாசிவம் பார்த்துவிட்டார். முகம் கோபக்கனலாய் மாறியது.
“ஏலேய்… அங்க எவன்ல்ல?”
அடுத்த நொடியில் அங்கே நின்று கொண்டிருந்த மாடசாமி ஓடிச்சென்று புகைத்துக்கொண்டிருந்தவனை அடி வெளுத்துவிட்டான்.
ஏன் அடித்தார்கள் என்று கேட்க முடியாத தற்காலிக மவுனியானான், அந்த வாலிபன்.
அந்த இடம் சதாசிவம் மரணத்தற்கு பிறகு குடியிருக்கப்போகும் இடமாம். அந்த இடத்தை இப்போதே யார் காலும் மிதிபடாத அளவுக்கு புண்ணிய பூமியாக பாதுகாத்து வருகிறார்கள், தோட்டத்திற்கு வரும்போதெல்லாம் அந்த புல்தரையில் ஈசி சேர் போட்டு அமர்ந்து இருப்பது வழக்கம். அந்த இடத்தில் தெரியாமல் மிதித்துவிட்டவருக்குத்தான் இப்படி ஒரு விருந்து(?).
சதாசிவத்தின் குடும்பத்தினர் கப்பல்போல் விரிந்திருந்த காருக்குள் ஏறி வீட்டுக்குச் சென்றனர்.
“மச்சான் இனிமே என்ன இவுக வீட்டுல எதுக்கும் என்னை கூப்பிடாதீக”
“ஏன் இசக்கியம்மா இப்படி சொல்ற?”
“ஆமா மச்சான் உங்க தம்பிக்கூட இங்க வர விரும்பாமத்தான் வெளியூருக்கு போனாரு. உங்கள அந்த முதலாளி கோவிச்சுக்குவாரேன்னுதான் நானே உங்ககூட வந்தேன்.”
“எதுக்குத்தாயி முதலாளி மேல இப்படி கோபப்படுற?”
“இல்லை மச்சான் நம்மள மாதிரி ஏழைங்கள இளக்காரமாக நினைக்கிறாரு? இன்னிக்கு கூட ஒண்ணு நடந்தது, அத நினைச்சா அழுவயா வருது?”
“என்ன இசக்கியம்மா… கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்”
“இந்த குழந்த மேல நம்ம எல்லாத்துக்கு எவ்ளோ உசிரு. இவா பிறந்தவுடனே மகாலட்சுமி பிறந்துட்டதா சொன்னீகளா இல்லியா? இவ உங்க வேட்டியில ஆயி போனப்போ அது சந்தனம் மாதின்னு வேட்டிய தோய்க்காம இருந்தீங்களா இல்லியா?”
“ஆமா தாயி நம்ம குடும்பத்துக்கு எத்தனையோ பையன்களுக்கு மத்தியில இதுதான மொத பொட்டப்புள்ள, அது மேல பாசம் வைக்காம இருப்பேனா?”
“இன்னிக்கு இங்க குழந்தை விளையாடிக்கிட்டு இருந்துச்சு. அப்போ உங்க முதலாளி அந்த வழியா போச்சு. இது அந்த மனுஷன் வேட்டிய பிடிச்சுது. அவ்வளதான்… இந்த புள்ளைய… கால்ட்ட தள்ளிட்டான் அந்த…” வார்த்தய முடிக்க முடியாம ஏங்கி ஏங்கி அழுதாள் இசக்கியம்மாள்.
“அடப்பாவி… அந்த மாரியாத்தாதான் அவர கேக்கணும்.”
“மச்சான் இந்த விசயத்த உங்க தம்பிட்ட சொல்லிடாதீங்க. ஏன்னா அவரு அருவாள தூக்கிருவாரு. அதோட நீங்க அந்த முதலாளி வீடல வேலை பாக்கிறீங்க. அதனால நான் வடிக்கிற கண்ணீரோட இந்த விசயத்தையும் கரைச்சிடுங்க.”
இசக்கியம்மாள் இடுப்பில் இருந்த குழந்தையை வாங்கிய சின்னசாமி உச்சி முகர்ந்து அணைத்துக்கொண்டான். அப்போது அந்த பெரியப்பாவின் கண்ணீர் குழந்தையை நனைத்தது.
“சாதியே கூடாதுங்கிறாங்க… இவங்க என்னடான்னா ஒரே சாதிக்காரங்களக்கூட தொடவிடமாட்டேங்கிறாங்க… நம்ம குழந்த அவர தொட்டதுக்காக உடனே போயி பம்பு செட்டுல குளிச்சிட்டு வந்தாரு மச்சான்.”
“குழந்தய தெய்வத்துக்கு சமமா சொல்லுவாங்க. இந்த குழந்த தொட்டது அருவருப்புன்னா அந்த தெய்வந்தான் பதில் சொல்லணும்.”
“அவரு எவ்வளவுதான் பெரிய பணக்காரரா இருந்தாலும், செத்தபிறகு எங்கள மாதிரி ஏழைங்கத்தானே தொட்டு குழிகுள்ள இறக்கணும்” என்று வேதனையில் முனுமுனுத்தான் சின்னசாமி.
இந்த சம்பத்திற்கு பிறகு சின்னசாமி ஏதாவது காரணம் சொல்லி சதாசிவம் வீட்டுக்கு வேலைக்கு செல்வதை குறைத்துக் கொண்டான். ஒரு கட்டத்தில் முழுவதுமாக அங்கு செல்வது நின்றுபோனது. பச்சிளம் குழந்தைக்கு -ஏற்பட்ட அவமானம்தான் இந்த முடிவுக்கு காரணம்.
நாட்கள் நகர்ந்து மாதங்களாய் கடந்தன. ஒருநாள் காலையில் கண்விழித்த சின்னசாமிக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
சதாசிவம் இறந்துபோனார். வீட்டுக்கு வெளியே வந்தார். ஊரே வெறிச்சோடி காணப்பட்டது. பண்ணையாரின் மரணம் ஊரையே முடக்கியதோ.
சதாசிவம் கொடூரமான ஆள்தான். ஆனாலும் ஒரு காலத்தில அவரு வீட்ல வேலை செய்துதான் பிழைப்பு நடத்தினோம் என்று அவனது உள்மனம் சொன்னது. மேலும் எதுக்கு போகாவிட்டாலும் சாவுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்றும் அவனது அறிவு அறிவுறுத்தியது.
விரைந்து சென்றான் பங்களாவை நோக்கி.
அங்கே வீட்டைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. போலீசார் யாரையும் உள்ளே விடவில்லை. அது இழவுவீடு போல் தெரியவில்லை.
அந்த வீட்டில் தொடர்ந்து வேலை செய்துவரும் மாடசாமியிடம் போய் கேட்டால் தெரியும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றான். அங்கே அவனது வீட்டையும் போலீசார் நெருங்க விடாமல் தடை விதித்து இருந்தனர்.
அக்கம்பக்கத்தாரிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்…
கடந்த மாதம் சீனாவில் இருந்து சதாசிவத்தின் மகன் வந்திருந்தான். அவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டது. படித்தவன் என்பதால் அவன் தானே நகரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தான், அவனிடம் இருந்து கொரோனா அவனது தந்தைக்கும் பரவி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் குடும்பத்தில் மற்றவர்களுக்கு இதுவரை வைரஸ் பரவவில்லை.
தந்தையும் மகனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் மகன் பூரண குணம் அடைந்துவிட்டான். ஆனால் சதாசிவம் மட்டும் இறந்துவிட்டார்.
சரி உடல் இன்னும் சில மணி நேரத்தில் வந்துவிடும். அவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குத்தானே கொண்டு வருவாங்க என்று நினைத்த சின்னசாமி அங்கு சென்றார். அங்கு நின்ற ஒருவனிடம் விசாரித்தபோது…
ஆஸ்பத்திரியில் இறந்த சதாசிவத்தின் உடலை பார்க்க யாரையும் விடவில்லை. சொந்தபந்தங்கள் யாரும் பார்க்க விரும்பவும் இல்லை. ஊரடங்கு உத்தரவு ஆனாலும் இறப்புக்கு செல்ல அனுமதி உண்டு. ஆனாலும் சதாசிவத்தின் உறவினர்கள் யாரும் ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை. உடலை அவரது தோட்டத்தில் அடக்கம் செய்ய குடும்பத்தாரே வேண்டாம் என்று கூறிவிட்டனர். அதனால் இன்னிக்கு காலையிலேயே ஆஸ்பத்திரி பக்கத்தில் உள்ள மின்சார தகன மேடைக்கு அவர் இறையாகிவிட்டார் என்ற தகவல் கிடைத்து.
வாழ்நாளில் தீண்டாமையை கடைப்பிடித்த அந்த பண்ணையார் கடைசி காலத்தில் தீண்டத்தகாதவராகி விட்டார்.
அவரின் அடகத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருந்த அந்த புல்வெளி நல்லவேளை பாவத்துக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்று காற்றில் அசைந்து பனித்துளியை காட்டி மகிழச்சியை வெளிப்படுத்தியது.

====

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.