May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

குழந்தையும் தெய்வமும் (சிறுகதை எழுதியவர் : கடையம் பாலன்

1 min read

Kuzhathaium deivamum – Story by Kadaym Balan

குழந்தையும் தெய்வமும் (சிறுகதை)…

கவிதா முகம் இன்றுதான்  கவித்துவமாக காணப்படுகிறது. வறண்ட நிலம், வாடிக்கிடந்த பயிருக்கு இரவில் பெய்த திடீர் மழையால் கிடைத்த தண்ணீரில் மறுநாள் சூரிய ஒளியில் பூத்த மலர்ச்சியின் முகமாக காட்சி அளித்தாள் அவள். பட்டுப்பாவாடை சரசரக்க.. அதற்கு மேச்சான சட்டை, எண்ணை தேய்த்து சாம்பு போட்டு குளித்ததால் காற்றில் அழகாக பறக்கும் பாப்முடி.

அந்த ஆறு வயது பாப்பா கையிலே அழகான பிளாஸ்டிக் டாப்பாவுடன் தத்திதத்தி மிடுக்காக நடந்து வருகிறாள். அந்த டப்பாவில் சிலேபி, லட்டு, விதவிதமான பிஸ்கெட்டுகள், கார வகைகள் என அவளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் பண்டங்கள், வழியில் அவளது பள்ளிக்கூட யூனிபார்ம் டிரஸ் அவளின் நேற்றைய நிலையை அழகாக பிரதிபலித்தது.

‘’அம்மா, எல்லா பிள்ளைகளும் பள்ளிக்கூடத்துக்கு பிறந்த நாள் அன்னிக்கும் புதுசா போகும்போதும் புதுசட்டையா போட்டுகிட்டு போகுதுங்க. எனக்கு மட்டும் ஏம்மா விசித்ரா அக்கா போட்ட பழைய சட்டைய வாங்கி தர்றீங்க…’’

‘’என்னம்மா செய்ய… நாம ஏழைங்க உங்கப்பாவுக்கு நல்ல வேலை கிடைச்சப்புறம் நல்ல புதுப்புது டிரசா எடுத்து தர்றேம்மா அதுவரைக்கு இப்படித்தாம்மா சமாளிக்கணும்.’’

-அன்று அம்மா சொன்ன வார்த்தை கவிதாவின் நினைவில் வந்து போனது.

இனிப்பு பலகாரங்களுடன் வாசலைத் தாண்டி தெருப்பக்கம் வந்தாள். அங்கே வேப்ப மரத்தடியில் ஒரு படிக்கல்- அது தான் கவிதா தன் தோழிகளுடன் சங்கமிக்கும் கூடம். கிச்சி கிச்சி தாம்பளம், பாண்டி போன்ற விளையாட்டு களமும் அவர்களுக்கு அதுதான்.

வீட்டைவிட்டு வெளியே வந்த கவிதாவை எதிர் கொண்டு அழைத்தாள் விசித்ரா அக்கா. அவளுக்கு வயசு ஒண்ணும் அதிகம் இல்லை, கவிதாவை விட ஆறுமாதம்தான் மூத்தவள். அவளும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள்தான் என்றாலும் இவளை போன்ற வறுமை அவள் வீட்டில் தலைகாட்டவில்லை.

“பிரேமா, சினேகா இங்கே வாங்களேன்.”

கவிதாவின் அழைப்புக்கு அடுத்த நொடியில் அவர்கள் சிட்டாய் பறந்து வந்தார்கள். அவர்கள் தான் கவிதாவின் சினேகிதிகள்,

இந்த டிரஸ் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு.. நீ குட்டி நடிகை மாதிரி அழகா இருக்க,,,” அவர்களுக்கு பொடிசுகள் புகழாரம் கொடுக்க உண்மையிலேயே பெருமை பட்டுபோனாள் கவிதா,

பின்னர் ருசித்துக்கூட பார்க்காத அந்த பண்டங்களை தோழிகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்தாள். அவர்களும் ஆனந்தமாய் எடுத்து எடுத்து தின்றார்கள். கவிதாவும்தான்.

நிஷா வந்தா அவளுக்கெல்லாம் இதை கொடுக்காத. அவ நமக்கு எந்த பண்டமும் தரமாட்டா-” இது சினேகாவின் ஆர்டர்.

நிஷா அந்த பகுதியில் உள்ள பணக்கார விட்டுப்பிள்ளை.

அப்படியெல்லாம் சொல்லாதே. பள்ளிக்கூடத்துல டீச்சர் சொன்ன மாதிரி எல்லோருக்கும் பகிர்ந்து சாப்பிடனும்.”

கவிதாவின் பெருந்தன்மையை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இன்னைக்கு மத்தியானம் எங்க வீட்ல விதவிதமா சமைக்கிறாங்க. நீங்க எல்லாரும் எங்கூட சாப்பிட வரணும்.”

என்ன குழம்பு?”

ஆட்டுக்கறி எடுத்திருக்காங்க.”

சரி வாறோம்.”

போன தீபாவளிக்கு கூட எங்க வீட்ல கறி எடுக்கல. விசித்திரா அக்கா உங்க வீட்டுலதான எனக்கு ஆட்டுக்கறி சோறு தந்திங்க.”

-இந்த பச்சிளம் குழந்தை பழைய சம்பவம் எதையும் மறக்கவில்லை. மறக்கும் வறுமையா அது. அவள் பெற்றோருக்கு முதல் மகள். அவள் பிறப்பதற்கு முன்பே வறுமை அவள் வீட்டை ஆட்டி படைத்துக் கொண்டு தான் இருந்தது. அதெல்லாம் அவளுக்கு எப்படி தெரியும். பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிய பின்னர்தான் மற்ற மாணவிகளோடு தன்னை ஒப்பிட்டு பார்த்தாள். அப்போதுதான் வறுமை அவளுக்கு தெரிய ஆரம்பித்தது. மதியம் பள்ளிக்கூடத்தில் வழங்கும் சத்துணவு எத்தனை பிள்ளைகளுக்கு ருசிக்கிறதோ இல்லையோ. கவிதாவுக்கு அந்த ருசியே அலாதியாக இருந்தது,

“அவ்வப்போது ஏம்மா நம்ம விட்டுல மட்டும் இப்படி கஷ்டப்படுறோம்” என்று கவிதா கேட்கும் கேள்விக்கு விளக்கம் சொல்ல முடியாமல் அவளின் தாய் கண்ணீர் வடிப்பாள்.

“கடவுள் நமக்கும் நல்ல காலம் கொடுப்பார்.” என்று மகளை சமாதானம் செய்வாள்.

எப்போம்மா?”

நம்ம அப்பாவுக்கு சீக்கிரம் வேலை கிடைக்கும். அதுக்கப்புறம் நிறைய பணம் வரும். நாம் நினைச்சதெல்லாம் வாங்கலாம்,”

தாய் கூறும் இந்த வார்த்தையை என்று நிறைவேறுமோ என்று கவிதா எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள். இன்று அவளின் எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறி விட்டதாகவே உணர்ந்தாள்.

தோழிகளோடு பண்டகளை தின்னபிறகு,,,

“கவிதா இந்த பட்டு பாவாடை யாரு எடுத்து தந்தது?”

“எங்க மாமா வீட்டுல இருந்து எடுத்து தந்தாங்க”

“எங்க பெரியம்மா, சித்தி எடுத்த துணியெல்லாம் விட்டுல நிறைய இருக்கு, ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொண்ணா போடனும்னு அம்மா சொன்னாங்க.”

காதுல போட்டிருக்கியே இது ரொம்ப அழகா இருக்கு.”

அது கவரிங் மாட்டல் என்று அந்த பிஞ்சு  குழந்தைகளுக்கு தெரியாது. ஆனாலும் கவிதா அணிந்ததால் அதற்கு தனி மவுசு கிடைத்தது என்னவோ உண்மைதான்.

இனிமே நான் பள்ளிக்கூடத்துக்கு தினமும் புதுசு புதுசா சட்டை போட்டுக்கிட்டு வருவேன்.” என்றாள் கவிதா.

நானும் எங்க அம்மாகிட்ட புது புது சட்டயா கேப்பபேன்.”-இது விசித்ரா.

அக்கா நாங்க கூட எனக்கு பெரிசா இருக்க பாவாடைய உனக்கு தாறேன். எனக்கு நிறைய சட்டை இருக்கு, ஒவ்வொருவரும் மாத்தி மாத்தி போடுவோம்.”

கவிதாவின் முகமலர்ச்சியை அனைத்து தோழிகளும் பகிர்ந்து கொண்டனர்.

அடுத்த மாசம் நாங்க எங்க சொந்தக்காரங்க எல்லாம் காருபிடிச்சி கோவிலுக்கு போவோம். நீங்களும் கண்டிப்பா எங்ககூட வரணும் என்ன?”

சரி நாங்க எல்லோரும் கண்டிப்பா வருவோம்.”

ஆமா உங்க அப்பா எங்க? அவங்களும் வருவாங்கல்ல.”

எங்கப்பா போன திங்கட்கிழமைதான் காஷ்மீருக்கு வேலைக்கு போனாங்க. அவங்களால எப்படி வரமுடியும்?”

“ஆமா வரமுடியாது, அவங்க வரும்போது இன்னும் நிறைய துணி எடுத்துட்டு வருவாங்கல்ல.”

“ஆமாம் வரும்போது தங்க செயின், கம்மல் எல்லாம் வாங்கிட்டு வர்றதா சொல்லி இருக்காக.”

திருமணமான நாள் முதல் அவளது தந்தை வேலைக்காக எத்தனையோ இடங்களில் முட்டிப்பார்த்தும் கிடைத்தபாடில்லை. எந்த வேலைக்கும் தயாராக இருந்த அவனுக்காக எந்த வேலையும் வந்தபாடில்லை,

இந்த நிலையில்தான் கடந்த மாதம் எல்லை பாதுகாப்பு படையில் வேலை கிடைத்தது. தாமதாக கிடைத்தாலும் அங்கு செல்லக்கூட பணம் இல்லை. அக்கம்பக்கத்தாரிடமும் உறவினர்களிடமும் ஓரளவு பணத்தை புரட்டி வேலைக்குச் சென்றான்.

ஐயோ ஒண்ணு மறந்துட்டேன்,”

“என்னது,”

என் போட்டோ எங்க அம்மா, அப்பா போட்டோ எல்லாம் பேப்பர்ல வந்திருக்கு,”

அப்படியா காட்டேன்.”

கவிதா தன் வீட்டுக்கு ஓடிச் சென்று ஜன்னல் கம்பியில் செருகி வைத்திருந்த பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து அவர்களுக்கு காட்டினாள்.

எதுக்கு உன் படம் பேப்பர்ல போட்டிருக்கு?”

எங்கப்பா வேலைக்கு  போயிருக்காங்கல்ல அதுக்காகத்தான்.”

அப்போ எங்கப்பாவையும் நான் ஒங்க அப்பாக்கூட வேலைக்கு போகச் சொல்வேன்.”-இது சினேகாவின் ஆசை.

இந்த நேரத்தில் கவிதாவின் ஒன்றுவிட்ட பாட்டி வெளியூரில் இருந்து வந்து கொண்டிருந்தாள். கவிதாவை கண்டதும் கண்ணீர் பொங்கி வந்தது.

“பாட்டியம்மா இப்போதான் வர்றிங்களா?”

அடப்பாவி மளவே உனக்கா இந்த கதி வரணும்” – இப்படி சொல்லிவிட்டு ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

அடுத்த நொடியில் தலைவிரி கோலமாய் விட்டுக்குள் முடங்கி கிடந்த கவிதாவின் தாய் ஓடி வந்தாள்.

“பிள்ள முன்னாடி அழாதே, எதுவும் பேசாதே” என்று சொல்லி அந்த கிழவியை விட்டுக்குள் அழைத்து சென்றாள்.

அங்கே அந்த முதாட்டி கவிதாவின் தாய் ரஞ்சிதத்தை கட்டிப்பிடித்து அழுதாள்.

“உன் புருஷன் உங்களை  அனாதையா ஆக்கிட்டு போயிட்டானே. பாவிபய முகத்தைகூட பாக்க முடியாம ஆயிட்டுதே,,,”

ராமு என்ன செய்வான் பட்டப்படிப்பு படித்த அவனுக்கு காலாகாலத்தில் திருமணம் முடிந்தும் வேலை எதுவும் கிடைக்வில்லை. அவனது வறுமையை பங்கிட கவிதா பிறந்தாள். இந்த நிலையில்தான் கடந்த மாதம் அவனுக்கு எல்லை பாதுகாப்பு படையில் வேலை கிடைத்தது.

முழுசா ஒரு மாத சம்பளம் வாங்கவில்லை. அதற்கு எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணத்தை தழுவினான். அந்த பயங்கரவாதிகள் ராமுவின் உடலைக்கூட கிடைக்காத அளவுக்கு செய்துவிட்டனர்.

கணவர் இறந்தது ரஞ்சிதத்தை நிலைகுலைய வைத்தது. ஆனால் அப்பா மீது அதிக பாசம் வைத்த கவிதாவிடம் இந்த துயரத்தை காட்ட ரஞ்சிதம் விரும்பவில்லை. அதனால்தான் ராமு இறந்த தகவல் கிடைத்ததும் அவனை உறவினர் ஒருவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். இன்றுதான் அவள் அழைத்து வரப்பட்டாள். அவளிடம் ராமு இறந்த தகவலை சொல்லவில்லை.

“அப்பா போட்டோவுக்கு ஏம்மா மாலை போட்டிருக்கு?”

கவிதாவின் இந்த கேள்விக்கு, உறவினர் ஒருவர் “அப்பா சாமிட்ட போயிருக்காங்க” என்று மட்டும் சொன்னார்.

 அன்றைய தினம் உறவினர்கள் அனைவரும் ஒன்றுகுடி ஆட்டுக் கறி எடுத்து காரியம் செய்கிறார்கள், ஆனால்  இதுவெல்லாம் கவிதாவுக்கு  ஒரு விருந்து நிகழ்ச்சியாகவே தெரிகிறது,

 “பேப்பரில் வந்த போட்டோவை தோழிகளிடம் காட்டி வெளிநாட்டுக்கு போன எங்கப்பா இப்போ சாமிக்கிட்ட போயிருக்காங்க.. அங்கஇருந்து வரும்போது இன்னும் நிறைய செயின், பணம் எல்லாம் கொண்டாருவாங்க” என்றாள் சிரிந்த முகத்துடன்.

நேற்யை மரணத்தை நினைத்து அழுது கொண்டிருப்பவன் கோழை. நாளைய மரணத்தை நினைத்து அழூபவன் அறிவில்லாதவன். இன்றைய மரணத்தை எதிர்கொண்டு அழுபவன் மனிதன். ஒருவனின் மரணம் அவனது அடுத்த பிறவிக்கு போடும் விதை. எனவே எக்கால மரணத்தையும் நினைத்து சிரிப்பவன் ஞானி. அவன்தான் தெய்வம். அந்த வகையில் இந்த குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.