தண்டனை பெற்ற அப்பாவியின் மரண வாக்குமூலம் (சிறுகதை) கடையம் பாலன்
1 min readThe confession of the convicted innocent (short story)By Kadayam Balan
26/4/2020
(கடையம் பாலன் எழுதிய தண்டனை பெற்ற அப்பாவியின் மரண வாக்குமூலம்-சிறுகதை)
மரண தண்டனை- கொடூரமான குற்றம் புரிந்தவர்களுக்குகூட தூக்கு தண்டனையை நிறைவேற்றும்போது அவர்கள் மீது கொஞ்சம் பச்சாபம் வரும். ஆனால் எந்த தவறும் செய்யாத எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் மரணத்தை கொடுக்க போகிறார்கள். இந்த இனிய உலகம் என்னைவிட்டு பிரியும் முன்பு என்னைப் பற்றி உங்களுக்கு சொல்லிவிடுகிறேன். நான் இப்படி சொல்வதால் என்னை உங்களால் காப்பாற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும் எனக்காக ஒரு சொட்டு கண்ணீர் வடித்தால் அதுவே நான் அடையப்போகும் சொர்க்கமாக இருக்கும்.
“ஒருத்தி மகனாய் பிறந்தவனாம், ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம்…” என்று கண்ணனைப் பற்றிய பாடல் உண்டு. அது எனக்கு மிகவும் பொருந்தும். என்னைப்பெற்ற தாய் எனக்கு பாலூட்டிய பின்னர் என்னை மறந்து போய்விட்டாள். அதன்பின் என் மீது பாசம் காட்டியது என் வளர்ப்பு பெற்றோர்தான். வேளாவேளைக்கு நான் விரும்பியதை உண்ணக் கொடுப்பார்கள். என் ஒவ்வொருநாள் வளர்ச்சியைக் கண்டு மனம் பூரிப்பார்கள். நான் துள்ளிக் குதித்து விளையாடுவதைக் கண்டு அவர்களின் பிள்ளைகளையும் என்னுடன் விளையாடச் சொல்வார்கள். ஒரு நாள் நான் உண்ட உணவு செரிக்காமல்போக உடனே டாக்டரை வரவழைத்து எனக்கு சிகிச்சை அளித்தார்கள். நான் குணமான பின்னர்தான் அவர்கள் மனம் மகிழ்ந்தது.
அப்படி வளர்த்த என்னை இன்று மரண மேடைக்கு அவர்களே அனுப்ப அனுமதி கொடுத்துவிட்டார்கள். இப்போது அவர்கள் கண்கள் கலங்கவில்லை. என்னை பெற்ற தாயும் கல்நெஞ்சக் காரியாய் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அந்த வீட்டு பாப்பா மட்டும் எனக்காக குரல் கொடுப்பாள் என்று நினைத்து அவளை தேடினேன். ஆனால் அவளை வெளியே வரமுடியாதபடி தனி அறையில் அடைத்து வைத்துவிட்டார்கள் போலும். அவளுக்கு என் அன்பு முத்தத்தை தென்றல் காற்றே நீ கொண்டு கொடுத்துவிடு.
சாமி சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் தப்பி ஓடிவிடக்கூடாது என்பதற்காக என்னை கயிறு கட்டி இழுத்துச் செல்கிறார்கள்.
இப்போது வயல்வெளியைத் தாண்டி காட்டுப்பகுதிக்குள் நான் கொண்டு செல்லப்படுகிறேன். அங்குதான் எனக்கு மரண தண்டனையை நிறைவேற்ற போகிறார்கள். இப்போது ஓரளவு புரிந்து இருக்கும். சட்டத்தின்படி விசாரணை நடத்தி எனக்கு மரண தண்டனை கொடுக்கப்படவில்லை என்று… ஆனாலும் எந்த சட்டத்தாலும் எனக்கு விடுதலை வாங்கித்தர முடியாது.
தூக்கு கயிறு மூலம் நான் என் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்ள முடியாது. சில நாட்டைப்போல் விஷ ஊசிப்போட்டும் என்னை கொல்ல மாட்டார்கள். மிகவும் வித்தியாசமான முறையில் என்னை கொல்லப்போகிறார்கள்.
இப்போது நான் யார் என்று உங்களால் புரிந்து கொண்டிருக்க முடியும்தானே.
ஆம் நான் ஓர் ஆட்டுக்குட்டி.
இதற்குதான் இவ்வளவு “பில்டப்பா” என்று இத்துடன் கேட்பதை நிறுத்தி விடாதீர்கள். இனி சொல்லப்போவதில்தான் என்னுடைய உண்மையான வேதனை இருக்கிறது.
ஒரு காலத்தில் எங்கள் இனமும் கற்கால மனிதர்களைப்போல் காட்டில்தான் வாழ்ந்தன. அப்போது சிங்கம், புலி போன்ற வன விலங்குகள் எங்கள் இனத்தைத்தான் விரும்பி சாப்பிடும். நாங்கள் இலை&தழைகள், புற்களைத்தான் உண்போம். எனவே எங்கள் இறைச்சி அவைகளுக்கு ருசிமிகுந்த ஊட்டச் சத்தாக இருக்கும். பன்றிகள்போல் எங்களால் பல குட்டிகளை போட முடியாது. ஒன்றிரண்டு குட்டிகள்தான் போடுவோம். அதனால் எங்கள் இனம் விரைவாக பெருக வாய்ப்பு இல்லை. எனவே இந்த நிலை நீடித்தால் எங்கள் இனமே விரைவில் அழிந்து போவது உறுதி. அதனால் உயிருக்கு பயந்து எங்கள் இனம் பயந்து ஓடும்.
அப்படியரு காலத்தில்தான் எங்களுக்கு மனித இனம் கருணை காட்டியது. நாங்கள் எங்களை அறியாமல் அவர்களிடம் ஒன்றினோம். அவர்களும் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இதற்குள் மனிதர்கள் நாகரீகம் கண்டு வீடுகட்டி, விவசாயம் செய்து பிழைக்கலானார்கள். அப்போதும் எங்களை வளர்ப்பு விலங்காக வைத்து கொண்டார்கள்.
இப்போது நீங்கள் சொல்லலாம். அந்த மனிதர்களும் எங்களை இறைச்சிக்காத்தானே வளர்க்கிறார்கள் என்று. உண்மைதான். நாங்கள் குறிப்பிட்ட வயதை தாண்டியவுடன் எங்களை இறைச்சிக்காக கொல்வது உண்மைதான். சிலர் கொல்ல மனம் இல்லாமல் கோவிலுக்–கு பலி கொடுத்து எங்கள் இறைச்சியை உண்பார்கள். இதில் நாங்கள் குற்றம் காண முடியாது. காரணம் எங்களை வீட்டு விலங்காக மனிதர்கள் அங்கீகரிக்கவில்லை என்றால் எங்கள் இனம் என்றோ முழுமையாக காட்டுக்குள்ளேயே அழிந்திருக்கும். அந்த வகையில் மனிதர்களுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டவர்கள்தான்.
ஆனாலும் நான் இப்போது என்னை வளர்த்தவர்கள் மீது வருத்தம் கொள்ள காரணம் இருக்கிறது. எனக்கு பலி கொடுக்கும் வயது இன்னும் வரவில்லை. வழக்கமாக எங்கள் மூதாதையரை விலைக்கு வாங்க முறுக்கிய மீசையுடன் இடுப்பில் பளபளக்கும் கத்தியுடன் கிராமத்து மனிதர்தான் வருவார். ஆனால் நேற்று பேண்ட்&சட்டை போட்ட அதிகாரிகள் வந்தார்கள்.
ஆடு ஒன்று வேண்டும் என்று கேட்டார்கள். என் வளர்ப்பு தந்தை நன்றாக கொழுத்து வளர்ந்திருந்த சில ஆடுகளை காட்டினார். ஆனால் அவற்றின் விலை அதிகமாக இருப்பதாக கூறவே நான் அவர்கள் கண்ணில் பட்டுவிட்டேன். இந்தக் குட்டிபோதும் என்று கூறி எனக்கு விலைபேசிவிட்டார்கள்.
நான் என்னை வளர்த்தவர்களுக்கு உணவாகிப்போனால்கூட மகிழ்ந்திருப்பேன். ஆனால் யாருக்கோ உணவாகப்போவதை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.
இதோ மரண களம் வந்துவிட்டது. அங்கே கூரிய அரிவாள் இல்லை. என்னை சமைத்து சாப்பிட அடுப்பு ஏதும் இல்லை. நான் மரணத்தை தழுவ எனக்காக இரும்பு கூண்டு ஒன்று தயாராக இருக்கிறது. கூண்டுக்கு மேலே பச்சை மரக்கிளைகளை கொண்டு போர்த்தி இருக்கிறார்கள். உள்ளே எனக்கு விருப்பமான உணவு. மரண தண்டனையை நிறைவேற்றும் முன்பு கொடுக்கப்படும் கடைசி உணவு.
இப்போது புரிந்திருக்குமே… நான் மனிதர்களுக்கு உணவாகப்போவதில்லை என்று. அப்படி உணவாகப்போனால்கூட மகிழ்ச்சியாக என் உயிரைக் கொடுப்பேன். ஆனால் வனத்தில் திரியும் ஒரு சிறுத்தைக்கு உணவாகப் போகிறேன்.
அந்த சிறுத்தை பல நாட்கள் பலரது தொழுவத்துக்குள் அடைந்து கிடந்த எங்கள் சகாக்களை அடித்து தின்றுள்ளது. மனிதர்கள் பலரை இரையாக்க முயன்று தோன்று போயியுள்ளது. அதற்கு மனிதர்கள் இரையாகிவிடக்கூடாது என்பதற்காத்தான் அதனை பிடிக்க இந்தக் கூண்டு வைத்துள்ளார்கள்.
சிறுத்தையை பிடிக்க என்னை பொறியாக இந்த கூண்டுக்குள் அடைத்து வைத்துள்ளார்கள்.
மனித இனம் வாழ என் உயிரை கொடுக்க நான் தயங்கவில்லை. என்னை அழித்து சிறுத்தையை பிடிப்பதால் மனித இனத்தின் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்படுமா என்றால் அதுதான் இல்லை.
இன்னும் சற்று நேரத்தில் என்னை தின்ன சிறுத்தை கூண்டுக்குள் பாய்ந்தவுடன் கூண்டு தானாக மூடிக்கொள்ளும். என்னை கொன்று ரத்தத்தை குடித்து சதையை மென்று தின்றபின் அந்த சிறுத்தை வெளியேற நினைக்கும். ஆனால் முடியாது.
ஆக சிறுத்தை அகப்பட்டது… இனி இதனால் நமக்கு எந்த தொந்தரவும் இல்லை என்று மனிதர்கள் ஆடிப்பாடுவார்கள். இதற்கு காரணமான அதிகாரிகளை போற்றி புகழ்வார்கள்.
ஆனால் நடப்பது என்ன தெரியுமா?
பிடிப்பட்ட சிறுத்தையை கொல்ல மாட்டார்கள். காரணம் அந்த இனத்தை கொல்லக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. எனவே அந்த சிறுத்தையை அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விடுவார்கள்.
கூண்டில் சிக்கியவுடன் செத்தேன் என்று நினைத்த அந்த சிறுத்தை இப்போது மகிழ்ச்சியாக காட்டுக்கு ஓடும். ஆகா… நமக்கு விருந்து தந்து மீண்டும் நம்மை நம் இடத்திற்கே கொண்டு வந்து விட்டுவிட்டார்களே என்று மகிழ்ச்சி அடையும். காட்டில் இரை கிடைக்காதபோது மீண்டும் அதே சிறுத்தை ஊருக்குள் எட்டிப்பார்க்கும். அப்போது மனிதர்கள் சாமிக்கு படைப்பதுபோல் என்னைப்போன்ற ஓர் ஆட்டுக்குட்டியை அதற்கு விருந்து படைப்பார்கள்.
என்னை கூண்டுக்குள் கட்டிப்போட்ட வனத்துறையினர் காண்காணிப்பு கேமராவை அருகில் உள்ள ஒரு மரத்தில் பொருத்திவிட்டனர். எல்லோரும் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
இருள் சூழ தொடங்கிவிட்டது. காட்டுப்பறவைகள் எல்லாம் கூண்டுக்குள் வந்து தங்கள் குஞ்சுகளுடன் கொஞ்சுகின்றன. மரக்கிளையில் தலை சாய்த்து தூங்கும் குரங்குகள் சிறுத்தை வருவதைக் கண்டு என்னைப் போன்ற அப்பாவி விலங்குகளுக்கு அபாய குரல் எழுப்புகிறது. ஆனால் என்னால் தப்பி ஓட முடியாது. அதோ அந்த கொலைகாரன் என்னை நோக்கி வருகிறான். என் மீது பாய அவன் பதுங்குகிறான். நான் பயந்து நடுங்குகிறேன். குரல் கொடுக்க முடியவில்லை. இதோ பாய்ந்துவிட்டான். மனிதர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாத ஒரு கொலைகாரனுக்காக என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.