May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

மானசீக மகள்-11 (எழுதியவர் கண்ணம்பி ஆ.ரத்தினம்)

1 min read

Maanaseega Magal( Novel by Kannambi AA.Rathinam

(முன்கதை- செல்வன்-ரோசி காதல் முறிந்த பின் அவன் நித்யா என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டான். செல்வனின் தாய் கர்ப்பம் அடைந்தாள்)
காலை டிபன் சாப்பிட்டார்கள்.
மதிய உணவை நித்யா சமைத்தாள். அழகான விரல்களில் உட்கார்ந்து வாய் உள்வாங்கிய உணவு அதிக சுவையாக இருந்தது செல்வனுக்கு. செல்வன் நித்யாவுக்கு ஊட்டிவிட்டான். இருவரும் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டார்கள். பலமுறை கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டார்கள்.
மாலையில் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு முரளியும் சங்கீதாவும் வந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும் செல்வனுக்கும் நித்யாவுக்கும் ஒரு கூச்ச உணர்வு தோன்றியது. இரவில் பக்திபஜனையும், பகலில் செக்ஸ் லீலையும் நடந்ததை எண்ணி கண்கள் மிரண்டன.
முரளியும் சங்கீதாவும் நினைத்தது பலித்துவிட்டதை யூகித்துக்கொண்டார்கள்.
“இரவு சாப்பாடு இன்று ஹோட்டலில்தான்” என்று சொன்னான் முரளி.
சாப்பிட்டுவிட்டு வந்தார்கள்.
சிரஞ்சீவியும் அம்சவேணியும் “அம்மா தூக்கம் வருது” என்றார்கள்.
“சரி… அம்மாகிட்டே படுக்கிறீங்களா… சித்திகிட்ட படுக்கிறீங்களா” என்று கேட்டாள் சங்கீதா.
“சித்திகிட்டேயே படுக்கிறோம்… அம்மா” என்பது குழந்தைகளின் கோரஸ்.
அந்தக் கோரஸை செல்வனும் நித்யாவும் ஆமோதிக்கத் தயங்கியது வெளிப்பட்டது.
முரளியும் சங்கீதாவும் புரிந்துகொண்டார்கள்.
“வேண்டாம் கண்ணுகளா… நேற்று சித்திக்கிட்ட, இன்னைக்கு அம்மாகிட்ட, நாளைக்கு சித்திகிட்ட… சரியா” என்று கேட்டு தங்கள் அறைக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றாள் சங்கீதா.
செல்வனும் சங்கீதாவும் நேற்று இரவு கொண்டாடாத முதலிரவை இன்று கொண்டாடி இன்ப உலகில் வாழத் தொடங்கினார்கள்.


  • காலம் ஓடிக்கொண்டிருந்தது. செல்வனின் தாயார் நிறைமாதக் கர்ப்பிணியானார். நித்யா மகள் போலவும், ஒரு நர்ஸ் போலவும் தேவியம்மாளைக் கவனித்துக்கொண்டாள்.
    அழகான பெண்குழந்தை பிறந்தது. செல்வனுக்கும் நித்யாவுக்கும் மகள் பிறந்ததுபோல் ஒரு பூரிப்பு ஏற்பட்டது.
    பெண் குழந்தை பிறந்தால் செலவு என்றும் ஆண் குழந்தை பிறந்தால் வரவு என்றும் கணக்குப் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் செல்வன் எந்தக் கணக்கும் போடாமல் தங்கையை மகள்போல் கருதினான்.
    செல்வனும், நித்யாவும் வேலை பார்க்கும் அலுவலகங்களில் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்கள்.
    அப்பாவின் குடிபோதைகளில் பிறந்ததாகத் தன்னை நினைத்துக்கொண்டிருந்த செல்வன், அப்பாவின் மனித உணர்வில் பிறந்த பெண் குழந்தையை உயிரைவிட மேலாகக் கருதினான். நித்யாவும் தனக்குப் பிறந்த பிள்ளைபோல் கருதினாள். பெற்றால்தான் பிள்ளையா? பெறாமலும் இதயக் கருவறையிலிருந்து பெற்ற குழந்தையாக ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு நித்யா எடுத்துக்காட்டாக விளங்கினாள்.
    குழந்தைக்குப் பெயர்சூட்டுவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. சங்கீதா குழந்தையைத் தொட்டிலில் மலர்போல் கிடத்தினாள். குழந்தைக்கு மீனா என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். கண்ணுறங்காமல் நீந்திநீந்தித் திரியும் மீன்போல் கண்ணுறங்காமல் காக்கும் மீனாட்சியின் பெயர் குழந்தைக்குச் சூட்டப்பட்டது.
    சிரஞ்சீவி, அம்சவேணி இருவருக்கும் தங்கை கிடைத்ததுபோல் தொட்டிலில் கிடந்த குழந்தையைத் தொட்டுத்தொட்டு முத்தமிட்டனர்.
    குழந்தையை வளர்க்கும் பொறுப்பை நித்யா எடுத்துக்கொண்டாள். மகனும் மருமகளும் தங்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிப்பது கண்டு பூமியிலேயே ஒரு சொர்க்கத்தைக் கண்டார்கள். ஆனாலும் இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொண்டது ஒரு கூச்சத்தை ஏற்படுத்தாமல் இல்லை.
    குழந்தை மீனா பள்ளியில் சேர்க்கப்பட்டாள். படிப்பில் முதல் தரமாக விளங்கினாள். ஐந்தாம் வகுப்புவரை பல பரிசுகள் வாங்கிக் குவித்தாள். பள்ளியில் நடக்கும் விழாக்களில் செல்வனும் நித்யாவும் பெற்றோர் இடத்தைப் பிடித்துக் கொண்டனர்.
    நாளடைவில் மீனாவை செல்வனின் தந்தையும் தாயும் பேரப்பிள்ளை போல் நினைக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். செல்வனுக்கு நித்யா வயிற்றில் ஒரு குழந்தை பிறந்தால் இன்னொரு சொர்க்கத்தை கண்டுகொள்ளலாமே என்ற ஏக்கமும் அவர்களிடம் குடிகொண்டிருந்தது.

  • ஒருநாள் அதிகாலையில் நித்யா மயக்கமுற்றாள். மருத்துவமனையில் சேர்த்தனர். நித்யா கருவுற்றிருப்பதாக டாக்டர் தெரிவித்தார். நித்யா அதிர்ச்சி அடைந்தாள். செல்வனின் உள்ளத்தில் ஆச்சரியக் கேள்விகள் எழுந்துகொண்டிருந்தன. இது என்ன அதிசயம் என்று சங்கீதாவும் முரளியும் வியந்து போனார்கள். செல்வனின் பெற்றோர் ஏக்கத்துக்கு விடையும் விடிவும் கிடைத்தது.
    நித்யா தன் பழைய காலத்தைத் திரையாக ஓடவிட்டாள். குழந்தை பிறக்கும் பலன் தனக்கு இல்லை என்று டாக்டர்கள் சொன்னதை நினைத்துப் பார்த்தாள். டாக்டர்கள் யாரும் தன்னிடம் நேரில் சொல்லவில்லையே… கணவன்தானே சொன்னார். அப்படியென்றால் கணவன் பொய் சொல்லியிருக்கிறார். அவள் மனத்தில் கலக்கமும் கலவரமும் படையெடுத்து வந்தன.
    “என்ன நித்யா அதிர்ச்சியாக இருக்கா… எனக்கு எல்லாம் தெரியும். உன் முதல் கணவன் சொன்னது பொய். அவனுக்குக் குழந்தை பெறுகின்ற ஆண்மை இல்லை என்பதுதான் டாக்டர் ரிப்போட். எங்கிட்டதான் அவன் முதலில் சொன்னான். நான்தான் உண்மையைச் சொல்லிவிடாம தடுத்தேன். ஏன்… தெரியுமா ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை பலவீனமானது அது இதுன்னு ஏதாவது ஒரு காரணத்தைச் சொன்னால் பெண்ணுக்கு இழிவு கிடையாது. ஒருத்தனுக்கு ஆண்மை இல்லன்னு சொன்னா அவனை எல்லாரும் பொட்டப்பய அப்படின்னு கேவலமா பேசுவாங்க. அதுதான் அந்த விஷயத்தை வெளியில் தெரியாம நாங்க ரெண்டுபேருமே மறைச்சோம்.
    அவனை நீ இழந்த பிறகு அக்கா குழந்தைகளை உன் குழந்தையாக நினைச்சிப் பாசம் காட்டினாய். உன் மீது எனக்கு ஒரு இரக்கம் ஏற்பட்டது. உன்னை மறு கல்யாணம் செய்துக்கிட்டா உனக்கும் ஒரு குழந்தை பிறக்குமேன்னு நினைச்சேன். என் ஆசை ஆரோக்கியமானது இல்லதான். இருந்தாலும் பலவீனம் என் கண்ணை மறைச்சது.
    இப்போதும் பத்து வருசமா உனக்குக் குழந்தை பிறக்கிற பலன் இல்லேன்னுதான் எல்லாரும் நினைச்சிருப்பாங்க. ஆனா எனக்குத் தெரியும் – உனக்கு அப்படி இல்லேன்னு. ஆனா செல்வனை யாரும் இழிவாகப் பேசிடக்கூடாதுன்னுதான் ரகசியத்தைப் அப்படியே மூடி மறைச்சேன்.
    செல்வன் ஆண்மை உள்ளவன் என்கிறத நிரூபிச்சிட்டான். ஆனால் நீ பழைய நினைப்பில அடிக்கடி முதல் கணவனை நினைச்சி கண்கலங்குறதா எங்கிட்ட சொன்னான். அதனால அவன் செக்ஸ் தொந்தரவு செய்யாம தியாகியாகவே நடந்துக்கிட்டான். ஏதோ ஒரு வாய்ப்பில பத்து வருசத்துக்குப் பிறகு குழந்தை வரம் கிடைச்சிருக்கு. எல்லாரும் சந்தோசப்படுவோம்… என்ன சரியா” என்று சொல்லி முடித்தான் முரளி.
    முரளியின் பெருந்தன்மை குடும்பத்திலுள்ள அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.
    “இன்னொரு ரகசியமும் இருக்கு. நீ எப்படி உன் முதல் கணவனை மறக்க முடியாம இருக்கிறியோ… அதைப்போல செல்வனும் அவனுடைய காதலி ரோசியை மறக்க முடியாம கண்கலங்குகிறான். நானும் செல்வனும் சகலப்பாடிகளாக இல்ல. நல்ல நண்பர்களாக இருக்கிறோம். மனம் விட்டுப் பேசுறோம். நீ என்ன பண்றே. . . ஒருநாள் செல்வனை அழைச்சிக்கிட்டு ரோசி வீட்டுக்குப்போ. அவன் மனசில இருக்கிற பாரம் இறங்கிடும். எதையும் மனசுக்குள்ளே போட்டு புதைச்சி வச்சாதான் எந்த விஷயமும் விஸ்வரூபம் எடுக்கும். மனம்விட்டுப் பேசினா எல்லா விஷயமும் தெளிவாகிப்போயிடும். சரியா” என்று பேச்சை முடித்தான்.
    மருமகள் நித்யா கர்ப்பிணி ஆனதை அறிந்து செல்வனின் பெற்றோர் ஆனந்தத்தின் எல்லையை எட்டிப் பிடித்தனர். இனிப்பு செய்து பரிமாறினார் தேவியம்மாள்.
  • (தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.