May 27, 2024

Seithi Saral

Tamil News Channel

‘திரைக்குள் ஒரு சிறை’ சிறுகதை -எழுதியவர் கடையம் பாலன்

1 min read

Thiraikkul oru sirai- Short story By Kadayam Balan

14-5-2020

பாரதி செல்வியின் திருமணத்தில் ஒரே களேபரம்…
மங்கள வாத்தியங்கள் அமைதியாயின. பெண்களின் குலவைச் சத்தம் நின்றுபோயின.
மதிய சாப்பாடு தயாராகிக்கொண்டிருந்த இடமும் நிசப்தமானது.
“பாயாசம் மட்டும்தான் வைக்கணும், அப்பளம் பொறிக்கணும். அதை செய்யவா வேண்டாமா” என்ற குழப்பத்தில் தலைமை சமையல்காரர்.
“பாரதி செல்வி நல்லப்பொண்ணுதானே. அவ ஏன் தாலிக்கட்டுற நேரத்தில இப்படி ரகளை பண்றா?”
“மாப்பிள்ளை பிடிக்கிறாதான்னு கேட்டுத்தானே கல்யாணத்தை முடிவு பண்ணினாங்க. பிறகு ஏன் அடம் பிடிக்கிறா?”
“நாலு எழுத்து படிச்சா இப்படித்தான் ஏடாகூடமா நடக்குதுங்க”
“அதுக்குத்தான் பொட்டப்பிள்ளைங்கள அதிகம் படிக்க வைக்ககூடாதுன்னு சொல்லுவாங்க”
-இப்படி ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் ஒருவர் மூச்சிரைக்க விரைவாக நடந்து வந்து, “வெளியூருக்கு போயிருந்தேன், லேட்டாயிடுச்சு. இப்பத்தான் வரமுடிஞ்சுது. சாப்பாடு ஆரம்பிச்சாச்சா” என்றார்.
“அடா போங்கண்ணே கல்யாணமே நின்று போச்சுன்னு பேசிக்கிறாங்க”
“அய்யய்யோ… எங்க வீட்ல சமையல்கூட ஆக்கலியே…”
-பாரதிசெல்வி திறமையான பொண்ணுதான். படித்தவள். மூடநம்பிக்கைக்கு எதிரானவள். ஆனால் கடவுள் நம்பிக்கையை யாரேனும் மூடநம்பிக்கை என்றால் அவர்களை ஒருபிடி பிடித்துவிடுவாள்.
பகுத்தறிவை பேராசிரியர் அறிவரசனிடம் படித்தாள் என்றால், ஆன்மிக தத்துவங்களை பேராசிரியர் சிவகாமிநாதனிடம் கற்றிருந்தாள்.
அவளது அறிவுக்கு எளிதான அரசு வேலை கிடைத்தது. அவளுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையும் நல்லவேலை.
திருமணம் முழுக்க முழுக்க வைதீக படி நடக்கவில்லை. அதேநேரம் நாத்திக முறையிலும் நடக்கவில்லை. மாறாக குத்துவிளக்கு ஏற்றி, பிள்ளையார் பிடித்து வைத்து, குடும்பத் தலைவர் நடத்தி வைக்க ஏற்பாடாகி இருந்தது.
இந்த முறைகள் எல்லாம் பாரதிசெல்வியின் அறிவுரைபடிதான் நடந்து கொண்டிருந்தது.
குடும்ப தலைவர் மணமேடையின் அருகே தனி இருக்கையில் அமர்ந்து சிற்சில சடங்குகளை செய்தார். அதுவரை பொறுமையாக இருந்த பாரதிசெல்வி தாலிக்கட்டும் நேரத்தில் சுற்றும்முற்றும் பார்த்தாள்.
திடீரென்று, “கொஞ்சம் பொறுங்கள்…” என்றாள்.
மாப்பிள்ளையும் கையில் எ-டுத்த தாலியை மீண்டும் மஞ்சள் தடவிய தேங்காயில் வைத்தான்.
“என்னம்மா பிரச்சினை… தாலிகட்டும் நேரத்தில இப்படி சொல்றீயே… இது நல்லா இருக்குதா-…” என்றார் குடும்ப பெரியவர்.
“தாத்தா என்னை மன்னிடுங்க… கொஞ்சம் பொறுமையா இருங்க.”
“என்ன பாரதி சொல்ற… மாப்பிள்ளை நல்ல பையன் தானே… தாலிய வாங்கிக்கோம்மா…”
“கொஞ்சம் இருங்க தாத்தா… பிளீஸ்..”
“ஏண்டி பெரிய மனுஷங்க முன்னாடி எங்கள இப்படியா அவமானப்படுத்தறது…?” பாரதி செல்வியின் தாய் கொதித்தாள்.
அம்மா… நான் நினைச்சது நடக்கல… கொஞ்சம் வெயிட் பண்ணும்மா”
“ஆமாடி உன்னை உங்க அப்பன் செல்லம் கொடுத்து வளத்துட்டான். அதான் இப்படிஆடுற..” என்று சொன்னபடி அந்த கூட்டத்திலும் தனது கணவரை ஒரு இடி இடித்தாள்.
“தம்பி தப்பா நினைக்காதீங்க… எம் பொண்ணு எதை செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும். இதுலயும் ஏதோ இருக்குது. அவளை எனக்காக மன்னிச்சுடுங்க.” -மாப்பிள்ளையிடம் பாரதிசெல்வியின் தந்தை கெஞ்சினார்.
“சாரிங்க… இதோ அஞ்சி நிமிஷத்துல வந்துடறேன்.” என்ற பாரதிசெல்வி மாலையுடன் எழுந்தாள்.
அப்போது மாப்பிள்ளையின் பெற்றோர் கோபக்கனலை காட்ட ஆயத்தமானார்கள். அதனை மாப்பிள்ளை தன் பார்வையாலேயே அணைத்தான்.
“சுகன்யா,- சித்திய எங்கடி?” அங்கே நின்றுகொண்டிருந்த சுகன்யாவிடம் கேட்டாள், பாரதி.
“அம்மா… அம்மா…” என்று பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் சுகன்யா.
அடுத்த நொடியில் மணமேடையில் இருந்து இறங்கி மாலையும் கழுத்துமாக ஓடினாள். வீட்டுக்கு பக்கவாட்டில் உள்ள சந்து வழியாக சென்று சுகன்யாவின் வீட்டை அடைந்தாள். சாத்தி இருந்த கதவை திறந்து கொண்டு ஆவேசமாக உள்ளே நுழைந்தாள்.
“சித்தி…” கத்தியபடி சுகன்யாவின் தாய் பாக்கியத்தை முறைத்துப் பார்த்தாள்.
பாக்கியம் தூரத்துச் சொந்தம். சித்தி முறைதான். ஆனால் அவளுக்கு பாரதி மீது அவ்வளவு பிரியம். பாரதி பிறந்து ஐந்தாண்டு கழித்துதான் தனக்கு சுகன்யா பிறந்தாலும் பாரதி மீது அளவற்ற பாசம் வைத்திருந்தாள். பாரதிக்கு பார்த்த மாப்பிள்ளைக்கூட பாக்கியத்தின் வழியில் சொந்தம்தான்.
இந்த கல்யாணத்தை அவள்தான் முன்னின்று நடத்த வேண்டும் என்று ஏற்கனவே சொல்லி இருந்தாள். ஆனால் இன்று பாக்கியம் வராததால்தான் இந்த ஆத்திரம்.
“என்னை அப்படி பார்க்காதேம்மா… நீ நல்லா இருக்கணும்ன்னுதான் நான் வரலை. சரி மாப்பிள்ளை எங்கே? நீ மட்டும் தனியாவா வந்தே-?”
“பேச்சு மாறாதீங்க சித்தி… என் கழுத்திலே இன்னும் தாலி ஏறல…”
“என்ன பாரதி என்னாச்சி?”
“நீங்க வராம எப்படி கல்யாணம் நடக்கும்?”
“அதுக்குத்தான் எனக்கு கொடுப்பினை இல்லியேம்மா. நானும் அவரும் வந்து உன் கல்யாணத்தை சிறப்பா நடத்துணும்ன்னு ஆசை ஆசையா இருந்தோம். ஆனா விதி.. இப்படி ஆயிடுச்சேம்மா.”
“என் கல்யாணம் முடிவாகும்போதே உங்ககிட்ட என்ன சொன்னேன். உங்க முன்னாடிதான் என் கழுத்திலே தாலி ஏறணும்ன்னு சொன்னேனா இல்லியா… அப்பத்தான் இறந்துபோன சித்தப்பாவின் ஆன்மா என்னை வாழ்த்தும்ன்னு சொன்னேனா இல்லியா?”
“சொன்ன… நீ சொன்ன… ஆனா உலகம் இதை ஏத்துக்குமா-? நான் வந்தா அபசகுனமா நினைக்குமே?”
“உலகம்… சித்தி உங்க முன்னாடி எனக்கு இந்த உலகம் தூசி. அவங்க என்ன சொன்னா எனக்கென்ன?”
“பாரதி… நீ வாழ்க்கையில நல்லா இருக்கணும்… அதாம்மா… நான் வரல்ல”
“அது மூட நம்பிக்கை… உங்ககிட்டேயும் கடவுள் இருக்கிறார். குறிப்பாக உங்களை நான் கும்பிடும் அம்மனாதான் நினைக்கிறேன். உங்க வாழ்த்து எனக்கு வேணும்.”
:நான்தான் எப்பவும் வாழ்த்துவேனே. நீ நல்லா இருப்ப..”
“சரி கூட்டம் எனக்காக காத்திருக்கு.. உங்ககிட்ட விதண்டாவாதம் செய்ய விரும்பல…” என்று பாக்கியத்தின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மணமேடை அருகே வந்தாள்.
“இந்த தாலிய தொட்டு ஆசிர்வதியுங்க.” என்ற பாரதியின் சொல்லை மீற முடியாமல் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.
“தாத்தா இப்ப அந்த தாலிய எடுத்து கொடுங்க.”
தாத்தா தாலியை எடுத்து மாப்பிள்ளையின் கையில் கொடுக்க.. அது பாரதி செல்வியின் கழுத்தில் ஏறி அவளை திருமதி ஆக்கியது.
புதுமணத் தம்பதியினர் பாக்கியத்தின் காலில் விழுந்து வணங்கினார்கள். அப்போது பாரதிசெல்வி தான் வணங்கும் பத்திரகாளி அம்மனே நேரில் வாழ்த்துவதாக உணர்ந்தாள்.
பாரதியின் இந்த செயலை பலர் பாராட்டினார்கள். பலர் முனுமுனுத்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் கணவரை இழந்த மூதாட்டிகள் கூட அவர்களுக்குள் பாரதியின் நடவடிக்கையை வெறுத்துபேசியதுதான்.
பாரதி செல்வியை பொறுத்தவரை பாராட்டுகள் பலித்தன. தூற்றல்கள் தூர்ந்துபோயின.
ஆம் திருமணமாகி 5 ஆண்டுகளில் ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகளுக்கு தயானாள்.
வேலை நிமித்தமாக அடிக்கடி பிறந்த ஊருக்கு வருவது இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு கணவன், இரண்டு குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்திருந்தாள்.
அவளது சித்தி மகள் சுகன்யாவுக்கு திருமணம். அங்கு வந்தவர்கள் எல்லாம் பாரதிசெல்வி சிறப்பாக வாழ்வதை கண்டு பெருமையாக பேசினார்கள். அவள் செய்த புரட்சியை பாராட்டினார்கள்.
மூகூர்த்த நேரம் நெருங்கியது. புதுப்பெண் சுகன்யா மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள். தாலிக்கட்டும் நேரம் நெருங்கியது.
பாரதி அப்போதும் சுற்றும்முற்றும் பார்த்தாள். பாக்கியத்தை காணவில்லை. வீட்டிற்குள் ஒடிச் சென்று பார்த்தாள். அங்கும் இல்லை. ஒருவித ஏக்க கண்களுடன் மணமேடை நோக்கி வந்தாள். மாலையும் கழுத்துமாக அமர்ந்திருந்த சுகன்யாவும் அங்கும் இங்கும் நோக்கினாள்.
பாரதியைப் பார்த்ததும் “அக்கா உன்னைத்தான் தேடினேன்” என்று அவள் கையை பிடித்து தன் அருகே நிறுத்திக் கொண்டாள். திருமணம் இனிதே நடந்தது, பாக்கியம் இல்லாமல்.
பெரியோர்கள். ஊர்மக்கள் எல்லாம் வாழ்த்தினார்கள்.
வெகுநேரத்திற்குப்பின் பாக்கியம் எங்கிருந்தோ வந்து பந்தி நடக்கும் இடத்தில் நின்று விருந்தினர்களை உபசரித்துக் கொண்டிருந்தாள்.
புதுமணத் தம்பதி சாப்பிட வருவதைக் கண்டதும் சட்டென்று ஓரத்தில் வந்து ஒதுங்கி நின்றாள்.
அங்கே பாரதிசெல்வியும் நின்று கொண்டிருந்தாள்.
“பாரதி என்னை மன்னிச்சுடும்மா… என் மனசு கேட்கல… அதான் ஒதுங்கிட்டேன்..”
“இல்லை சித்தி… உங்கள நான் தப்பா நினைக்கல… பகுத்தறிவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நான் இன்னிக்கு நல்லா இருக்கிறதுக்கு நீங்க அன்னிக்கு வாழ்த்தியதுதான் காரணம்.”
பாக்கியத்தின் மீது பாரதிசெல்விக்கு கோபம் வரவில்லை. மாறாக பரிதாபம் வந்தது. இந்த பெண்கள் இந்த திரைச்சீலை சிறையில் இருந்து எப்போதுதான் வெளியே வரப்போகிறார்களோ என்ற ஏக்கம்தான் இருந்தது-.
ஆனாலும் உடன்கட்டை ஏறுதல், வெள்ளைச் சேலை உடுத்துதல், பொட்டு வைத்தல் போன்ற துர்செயலை தூக்கி எறிந்ததுபோல் இந்த திரை சிறையில் இருந்தும் விலகி வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் புன்முறுவல் பூத்தாள்.

About Author

1 thought on “‘திரைக்குள் ஒரு சிறை’ சிறுகதை -எழுதியவர் கடையம் பாலன்

  1. திரைக்குள் ஒரு சிறை–

    புதிய சிந்தனை தற்போது மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.காலத்திற்கேற்ற கருத்து. பாராட்டுக்கள்–
    ச.வேல்முருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.