சீமந்தம் செய்வதன் நோக்கம் என்ன?
1 min read
பெண்கள் கர்ப்பம் தரித்த 6வது அல்லது 8வது மாதத்தில் சீமந்தம் செய்வதன் நோக்கம் என்ன? இதனால் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஏற்படும் நன்மை என்ன?
முதலில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் செய்யப்படும் வளைகாப்பு, சீமந்தம், பும்ஸவனம் என்ற இந்த மூன்றும் வெவ்வேறானவை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நம்மில் பலபேர் இந்த மூன்றையும் ஒன்று என எண்ணி இந்தச் சடங்குகளை செய்கின்றனர்.
பும்ஸவனம் என்பது புருஷப்ரஜை அதாவது, ஆண்மகவு வேண்டிச் செய்வது. இதை கர்ப்பம் தரித்த நான்காவது மாதத்திற்குள்ளாக செய்துவிட வேண்டும். மூன்றாவது மாதம் முடிந்து நான்காவது மாதத்தில் குழந்தையின் பிறப்புறுப்பு வளர்ச்சியடைகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தச் சடங்கின்போது புருஷப்ரஜை வேண்டி அதற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்து விதையுடன் கூடிய ஆலம்மொக்கினை இடித்து அதன் சாற்றை கர்ப்பிணிப் பெண்ணின் மூக்கு துவாரத்தில் பிழிவார்கள். நாசியின் வழியே கர்ப்பிணிப் பெண்ணால் உறிஞ்சப்படும் இந்தச் சாறு அப்பெண்ணின் ரத்தத்தில் கலந்து கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை ஆணாக நிர்ணயம் செய்யும் என்பது நம்பிக்கை.
சரி, சீமந்தம் என்றால் என்ன? கர்ப்பம் தரித்த 4, 6 அல்லது 8வது மாதத்தில் கர்ப்பிணிப் பெண்ணை அமர வைத்து அவளது நாபி முதல் உச்சந்தலை வரை முள்ளம்பன்றியின் முள்ளால் நேர்கோடு இடுவர். அதாவது, அந்தப்பெண்ணின் தொப்புளில் துவங்கி ஒரே நேர்க்கோட்டில் நெஞ்சு, கழுத்து, நுனிமூக்கு, நெற்றியின் வழியே முள்ளம்பன்றியின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு முள்ளின் முனையினால் லேசான அழுத்தத்தோடு கோடிட்டு தலைமுடியில் வகிடு எடுத்து உச்சந்தலையில் வைத்து லேசாக அழுத்துவர். இந்தச் சடங்கிற்கும் மந்திரங்கள் உண்டு.
இந்தச் சீமந்தம் செய்யப்படுவதன் நோக்கம் யாதெனில் வயிற்றினில் வளரும் கருவானது எந்தவித இடையூறுமின்றி நல்லபடியாக வளர்ந்து சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதே. நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகளினால் எந்தவித தீங்கும் நேராமல் காப்பதே இதன் பிரதான நோக்கம்.
கர்ப்பமானது முழுமையாக வளர்ச்சி பெறாமல், குழந்தை ஊனத்துடன் பிறப்பதைத் தடுப்பது, கர்ப்பத்திற்குள் குழந்தை தண்ணீர் அதிகமாக குடித்து மூச்சுத் திணறல் உண்டாகாமல் காப்பது, தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இறுக்கி அதனால் பிரசவத்தின்போது இடைஞ்சல் உண்டாகாமல் தடுப்பது, குறிப்பாக தாயின் உடல்நலத்திற்கு எந்தவித தீங்கும் நேரா வண்ணம் காப்பது ஆகிய அனைத்தும் சீமந்தம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்.
பும்ஸவனம், சீமந்தம் ஆகிய இந்தச் சடங்குகள் இரண்டும் அவசியம் செய்யப்பட வேண்டிய சம்ஸ்காரங்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால், வளைகாப்பு என்பது சாஸ்திர ரீதியான சடங்கு அல்ல. இது நம் மனத்திருப்திக்காகச் செய்யப்படுகின்ற சடங்கு. இந்தச் சடங்கினை கர்ப்பிணி பெண்ணிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.

இரண்டு கைகள் நிறைய கண்ணாடி வளையல்களை அணிவித்து, ஜடை நிறைய பூச்சூட்டி, அப்பெண்ணின் வாய்க்கு ருசியாக பலகாரங்களையும், கலவை சாதங்களையும் அவள் வயிறு நிறைய சாப்பிட்டு மகிழும்படி செய்யப்படுகின்ற இந்தச் சடங்கானது கர்ப்பிணிப் பெண்ணானவள் எந்தவித மனக்கவலையும் இன்றி முழுமகிழ்ச்சியோடு இருந்தால் அவளது உடல்நிலையானது சுகப்பிரசவத்திற்கு ஒத்துழைக்கும் என்பதற்காகச் செய்யப்படுகிறது.
நமது இந்து மதத்தில் செய்யப்படுகின்ற அனைத்துச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் காரணத்தோடுதான் செய்யப்படுகின்றன என்பதற்கு இந்த பும்ஸவனம், சீமந்தம், வளைகாப்பு ஆகிய இம்மூன்றும் சிறந்த உதாரணங்கள்.