பிளாஸ்மா தெரபி சிகிச்சை சட்டவிரோதம் -மத்திய அரசு
1 min read
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பிளாஸ்மா தெரபியை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிப்பது சட்டவிரோதம் என்றும் மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 543 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஒரேநாளில் 684 பேர் குணமடைந்து திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 23.3 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும், குணமடைவோர் விகிதம் தொடர்ந்து சீராக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கான வழிகாட்டும் நெறிமுறைகளையும் அவர் வெளியிட்டார். பிளாஸ்மா தெரபியை பயன்படுத்தலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், தற்போது வரை பரிசோதனை என்ற கட்டத்திலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு செய்து வருவதாகவும், ஆய்வு முடிந்து சரியான முடிவுகள் கிடைக்கும் வரை பிளாஸ்மா சிகிச்சை அளிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
பிளாஸ்மா தெரபியை ஆய்வு மற்றும் பரிசோதனைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, சரியான முறையில் பிளாஸ்மா தெரபியை பயன்படுத்தாவிட்டால், அது உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் எனறும் லாவ் அகர்வால் எச்சரித்தார். பிளாஸ்மா சிகிச்சை முறை நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல என்றும், நிரூபிக்கப்படும் வரை அதனை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு பயன்படுத்துவது நோயாளிக்கு தீங்கு விளைவிக்கும் என்பது மட்டுமின்றி, சட்டவிரோத நடவடிக்கையும் ஆகும் என்றும் லாவ் அகர்வால் எச்சரித்தார்.