June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

மானசீக மகள்-13 (தொடர்கதை) எழுதியவர்-கண்ணம்பி ஆ.இரத்தினம்

1 min read

Maanaseega Magal-13 (Novel by Kannambi AA.Rathinam

காலம் சுழன்று ஓடியது.

எல்லாரும் சேர்ந்து ரோசி கணவர் கிரகாஷ் குடும்பத்துடன் குற்றாலத்திற்கு உல்லாசப்பயணம் போகத் திட்டமிட்டனர்.
தனி பஸ் பிடித்து, சென்னையிலிருந்து கிளம்பினார்கள். குற்றாலம் அருவியில் எல்லாரும் குதூகலமாகக் குளித்தார்கள். சங்கீதா, நித்யா, ரோசி மூவரும் கட்டிய புடைவையோடு அருவியில் குளித்தார்கள். நனைந்து ஈரமானது. உடை உடம்பில் ஒட்டியிருந்தது. ரோசியின் உடலில் செல்வனின் கண்கள் ஒரு வக்கிரப் பார்வையைப் பதித்துவிட்டுதான் ஓய்வெடுத்தான்.
மீனா பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிப் படிப்புக்கு கால் வைத்தாள்.
அவளை வெறும் மதிப்பெண் வாங்கும் படிப்பில் மட்டும் செல்வன் ஈடுபடுத்தவில்லை. நாட்டு நடப்பு, உலக அறிவு, பல்துறை அறிவு பெற வெளிவரும் தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள், வரலாற்று நூல்கள் எல்லாம் படிப்பதற்குத் தூண்டுதலாக இருந்தான். படிப்பதற்கு நேரமில்ல என்று சொல்லும் வறட்டுப் பேச்சுக்கு இடமில்லாமல் நேரத்தை நன்றாகப் பயன்படுத்தும் முறையைக் கற்றுக்கொடுத்தான். காலம் பொன்போன்றதல்ல, உயிர் போன்றது என்ற தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் பொன்மொழியை மீனாவின் உள்ளத்தில் புகட்டினான். பொன் கைவிட்டுப் போனால் திரும்ப வாங்கலாம். உயிர் போனால் திரும்ப வாங்கமுடியாது என்ற உண்மையை உணர்ந்து மீனா காலத்துக்கு உயிர் கொடுத்து வாழ்ந்தாள்.
மீனா பள்ளியில் முதல்தரம், கல்லூரியில் முதல்தரம் என்ற அளவில் முன்னணியில் நின்றாள். பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் கலந்து முதலிடம் பெற்றாள். காந்தி, நேரு, வல்லபாய்படேல், கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், பிடல் காஸ்ட்ரோ, அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, காமராஜ், கக்கன், அண்ணா போன்றவர்களின் சாதனை வாழ்க்கை வரலாறுகளைப் படித்து அவர்களைப் போல் சாதனையாளர்களாக வரவேண்டும் என்ற படிகளை உள்ளத்தில் கட்டிக்கொண்டிருந்தாள்.
டி.வி. பட்டிமன்றங்களில் கலந்து தனது கருத்துக்களை ஆணித்தரமாகப் பதிவு செய்தாள். ஆடல், பாடல் கலைகளையும் கற்றறிந்தாள்.
ஒருமுறை டி. வியில் ஒரு பேட்டியின்போது நீங்க என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, நான் என்ஜினியராக வேண்டும், கலெக்டர் ஆகவேண்டும், விஞ்ஞானியாக வேண்டும், டாக்டராக வேண்டும் என்று எதுவும் சொல்லவில்லை. அரசியல்வாதியாக வேண்டும் என்று தன் ஆசையைத் தெரிவித்தாள்.
அரசியல்வாதிகள்தான் மக்கள் வாக்குகளைப் பெற்று நாட்டை ஆட்சிசெய்யும் பொறுப்புக்கு வருகிறார்கள். ஆனால் பலர் அரசியல் வியாதிகளாகவும், அரசியல் வியாபாரிகளாகவும் இருப்பதால் லஞ்சம், ஊழல், கையாடல் போன்றவற்றில் ஈடுபட்டு மக்களின் பணத்தை சுயநலத்துக்கும் சொகுசுக்கும் பயன்படுத்துகிறார்கள். அரசியல்வாதிகள் தியாகிகளாகவும் “ஞானமுள்ளவர்களாகவும் இருந்தால்தான் நாடு வளர்ச்சியும் மக்கள் வாழ்வில் மலர்ச்சியும் உருவாகும்.
புதிதாகக் கட்சி தொடங்குகிறவர்களில் பலர் நாட்டின் நிலை குறித்த புள்ளிவிவரங்கள், பரந்த அறிவு, பகுத்தறிவு, விரிந்த ஞானம் இல்லாதவர்களாக இருப்பதால்தான் விளம்பர அரசியல் உருவாகிறது. ரசிகர்களையும், பணத்துக்காகப் பணி செய்கின்றவர்களையும் வைத்துக்கொண்டு பரந்து விரிந்த அரசியல் வட்டத்தை உருவாக்க முடியாது.
அரசு நிறுவனங்கள் நேர்மையான, திறமையான நிர்வாகம் நடக்க அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ள அதிகாரிகள், நிர்வாகிகள் அமையவேண்டும். பணத்துக்காக வாக்களிக்கும் மக்களின் மனப்பாங்கு மாற்றப்பட நாட்டின் ஆட்சிமுறை, அரசியல் எல்லாம் பொதுமக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றம் என்றால் என்ன? என்பதெல்லாம் தெரியாமல்தான் பெரும்பாலான மக்கள் வாக்களிக்கிறார்கள். அது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
இன்னும் இரண்டு மாதங்களில் இறந்துபோவான் என்று ஒரு புற்றுநோயாளியைப் பற்றி உறுதியாகத் தெரிந்தால் பெரிய அளவில் சிகிச்சை செய்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதுபோல் மாநகராட்சிகள், நகராட்சிகளின் உயிர் ஊசலாடிக்கொண்டிருப்பதுபோல் தற்காலிகப் பயன்பாட்டுக்குப் போடப்படும் பந்தல்போல சாலைகள் உறுதியில்லாமல் போடப்படுகின்றன. பள்ளிக் கட்டடங்கள் பாழடைந்து கிடக்கின்றன, மருத்துவமனைகள் நாறுகின்றன. அரசு அலுவலகங்கள் தூங்கி வழிகின்றன. தகுதியானவர்கள் பதவிகளில் அமர்த்தப்படுவதில்லை.
எதிலும் ஏனோ தானோ போக்குகள், குண்டு குழி சாலைகள், வீதிகள், பராமரிக்கப்படாத ரயில்கள், பஸ்கள், அரசு வாகனங்கள், வள்ளுவர் கோட்டம், கோயில், பள்ளி, கல்லூரி, பரபரப்பான சாலையோரங்களில் மதுக்கடைகள் அதனால் இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே சென்னை நகரில் அதிக விபத்துகள், சிறுநீர், மலம் கழிப்பதற்கு சில்லறை போன்ற சீர்குலைவுகள் சீர்செய்யப்பட வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்த செல்வன் மீனாவுக்கு அவை பற்றிய சிந்தனைகளை ஊட்டி வளர்த்தான்.
எங்குப் பார்த்தாலும் கியூ வரிசை மக்களை முடக்கிப் போடுகிறது. அரசுப் பணியாளர்களின் அலட்சியப்போக்கு மக்களின் வாழ்வு நிலையை அலங்கோலப்படுத்துகிறது. கழிப்பறை வசதிகள் இல்லாததால் தண்ணீர் குடிக்காமல் பெண்கள் வெளியில் போகும் நிலை, ஆண்கள் கண்டகண்ட இடங்களை நாறடிக்கும் நிலை, சில்லறையில்லாவிட்டால் சிறுநீர் கழிக்கமுடியாத அவஸ்தை. இவைபோன்ற சீரழிவுகளை யெல்லாம் மீனாவின் மனதில் பதியச்செய்து அவற்றுக்கு நிவர்த்தி தேடும் வழிகளை எடுத்துரைத்துக்கொண்டிருந்தான்.
காலம் பத்திரிகையில் நாட்டு நலம், வளம் கருதி பல அறிவார்ந்த தலையங்கங்களை எழுதி மக்களுக்குப் பகுத்தறிவையும் பரந்த அறிவையும் ஊட்டிக்கொண்டிருந்தான் செல்வன்.
போதையில் மிதந்த சீனாவை மாவோ விழிப்படையச் செய்ததுபோல விழிப்படையச் செய்ய வேண்டும், அதற்காக முதலில் மதுபோதையில் மதியிழந்து பொருளிழந்து குடும்பங்களை வறுமையில் தள்ளி நரகமாக்கிக்கொண்டிருக்கும் குடிப்பழக்கம் உடையவர்களைத் திருத்த வேண்டும். போதைக் குடிமக்களை மாற்றி புத்திக்கூர்மையான குடிமக்களை உருவாக்க வேண்டும். அதற்காக ஞானமுள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் அமைய வேண்டும். மார்க் வாங்கும் படிப்பு மட்டும் அல்லாமல் சமுதாய நன்மைக்காகச் சிந்திக்கும், செயல்படும் மாணவர்களை உருவாக்கவேண்டும்.
விவேகானந்தர் நூறு நல்ல இளைஞர்களை என்னிடம் கொடுங்கள், நான் சமுதாயத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று சொன்ன அடிப்படையை உணர்ந்து மீனாவின் சிந்தனையை வடிவமைப்பதற்கு முதலில் நூறு இளம்பெண்களை உருவாக்கப் பத்திரிகையில் அழைப்பு விடுத்தான் செல்வன்.
நூறுபேர் கொண்ட விழிப்புணர்வு ஊட்டும் இயக்கமாக மீனாவின் தலைமையில் ஒரு கட்சி தோற்றுவிக்கப்பட்டது. பெண்கள் மாவட்டம்தோறும் தேனீ போல் சுறுசுறுப்பாக உழைத்தார்கள். அரசாங்கத்தின் அநியாயப் போக்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். நாட்டு முன்னேற்றத் திட்டங்களை வடிவமைத்து பொதுமக்கள் உணரச்செய்தார்கள். மனிதநேய உணர்வுடன் உதவுகின்ற மனப்பாங்குகளைத் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் சொற்பொழிவுகள் மூலமும் உணர்த்திக் காட்டினார்கள்.
மீனாவின் தலைமையிலான இளம்பெண்கள் இயக்கத்துக்கு நாடு தழுவிய ஆதரவு வலுத்தது. மாவட்டம்தோறும் கிராமம்தோறும் நற்பணிமன்றங்கள் தொடங்க பெண்களும் ஆண்களும் ஆதரவுக்கரம் நிட்டினார்கள். நிதிகள் குவிந்தன. அவற்றின் மூலம் சமுதாயத்திற்குப் பயன்படும் பல நற்பணிகள் செயல்படுத்தப்பட்டன.
தெருத்தெருவாக, வீடுவீடாக மக்களுக்குச் சீர்திருத்தப் பணிகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. சுயநலச் சொகுசு முதலைகளால்தான் நாடு கெட்டுக் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது என்றும் அதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றும் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
டி. வி, பத்திரிகைகள் எல்லாம் மீனாவின் துணிச்சலையும் அறிவையும் பாராட்டின. பொதுமக்களின் ஆதரவு மேலும் மேலும் பெருகியது. இது தில்லுமுல்லு அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கவில்லை. சதித்திட்டங்கள் தீட்டி மீனாவின் இயக்கத்தை உடைக்க முயன்றனர். கருங்காலி வேலைகள் செய்தனர். மிரட்டல், எச்சரிக்கைகள் விடுத்தனர். எதையும் பொருட்படுத்தாமல் புரட்சிப் பெண்களாக உருவாகிவிட்டார்கள்.
தேர்தலுக்குத் தேர்தல் கைமாறி, கால்மாறி கூட்டணியை மாற்றிக்கொள்ளும் கொள்கையற்ற கட்சிகளை எதிர்த்து மீனாவின் ‘வளர்ச்சி இயக்கம்’ எல்லாத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.
வளர்ச்சி இயக்கத்தின் தேர்தல் அறிக்கை வெறும் வார்த்தைகளால் இல்லாமல் நாட்டு நிலையை வார்த்தெடுத்து வைத்தது. நடைமுறைக்குச் சாத்தியமானவையே அறிவிக்கப்பட்டன. புஷ்வாண, பொய்புரைகள் பயன்படுத்தப்படவில்லை.
ஸெல்போனில் கிளுகிளுப் பேச்சுக்களில் பொழுதுபோக்கிய இளம்பெண்களும், சினிமா நடிகர்களின் துதிபாடி கட்அவுட் அபிஷேகம் செய்த இளைஞர்களும், நடிகர் நடிகைகளுக்கு கோயில் கட்டவேண்டும் என்றிருந்த அபிமானிகளும் மனமாற்றம் அடைந்து வளர்ச்சி இயக்கத்தில் சேர்ந்து வாக்குச் சேகரித்தனர்.
நாட்டுமக்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி மதுபாட்டில்கள் வாங்கிக் கொடுத்து வாக்குக் கேட்ட கட்சிகள் டெபாசிட் இழந்தன. பணம் கொடுத்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்குவதில் ஈடுபட்ட கட்சிகளும் காணாமல் போய்விட்டன. வளர்ச்சி இயக்கம் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. செல்வன் பின்னணியிலிருந்து மும்முரமாகச் செயல்பட்டான்.
மீனா நாட்டை ஆளும் தகுதிபடைத்த புதுமைப் பெண்ணாக மாறிவிட்டாள். ஆட்சி அமைக்க கவர்னர் மீனாவை அழைத்தார். பொதுமக்களின் பேராதரவோடு வளர்ச்சி இயக்கம் ஆட்சி அமைத்தது. மக்களுக்குப் பாதகமான விளம்பரத் திட்டங்கள் தூக்கி எறியப்பட்டன. மக்களுக்குச் சாதகமான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
மீனா முதல் அமைச்சர் ஆனாள். பழுத்த தியாக
மனப்பான்மை கொண்ட முதிய அறிஞர்கள் அமைச்சரவையில் மந்திரிகள் ஆனார்கள். மீனா சிறுவயதாக இருந்தாலும் அவளுடைய நியாயமான புரட்சிப்போக்கு அறிஞர்களுக்குப் பிடித்திருந்ததால் வயது வேறுபாடு பாராட்டாமல் ஐக்கியமாகத் தங்கள் பணிகளில் ஈடுபட்டார்கள். நாட்டு நலம் கருதி உழைப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டனர். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் யாரும் தேர்தலில் நிறுத்தப்படாதததால் உடல் நிலை குன்றியவர்கள் யாரும் மந்திரி சபையில் இடம் பெறவில்லை. சிந்தனைத் திறன், செயல் திறன் இரண்டும் இருந்தால்தான் சோர்வில்லாமல் உழைக்க முடியும். அதனால் வயது முதிர்ந்தவர்களிடம் ஆலோசனைகள் மட்டும் பெறப்பட்டது. களப்பணிகளில் ஈடுபடாமல் கவனித்துக்கொண்டார்கள். பதவியேற்பு விழாவில் பெற்றோரும், செல்வன் குடும்பமும் முரளி குடும்பமும் கலந்து குதூகலமடைந்தார்கள்.
முதலில் மதுக்கடை ஒழிப்புத் திட்டத்தில் மீனா
கையெழுத்திட்டு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டாள். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நரகத்திலிருந்து விடுபட்டு நல்லுணர்வு பெற்றார்கள். குடும்பத் தலைவரின் உழைப்பு மட்டுமல்லாமல் மனைவி மக்களின் உழைப்பில் வந்த பணமும் மதுக்கடை வசூலாக இருந்தது மாறி குடும்பத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக் குடும்பத்தின் வறுமை நீங்கியது. குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குச் சில நாட்கள் அது இல்லாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் நாளாவட்டத்தில் அவர்கள் மதுவுக்கு அடிமையாகாமல் விடுபட்டனர். கள்ளச்சாராயம் விற்றாலோ, குடித்தாலோ இரண்டு வருட சிறைத்தண்டனை என்ற அறிவிப்பு அச்சப்படுத்தியதால் கள்ளச்சாராய உற்பத்தி எதுவும் நடைபெறவில்லை. மது குடித்து உறுப்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் செலவுகள் தவிர்க்கப்பட்டன. இலவசத் திட்டங்கள் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு மக்களுக்கு லாபகரமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. வீண், விரயச் செலவுகள் தவிர்க்கப்பட்டன. விளம்பரத் திட்டங்கள் தகர்க்கப்பட்டன. விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன். நாடு நல்ல தடத்தில் நடைபோடத் தொடங்கியது. ஏனோதானே போக்குகள் மாறி எல்லாரும் உழைக்கும் மக்களாக, நாட்டுக்கு உதவும் மக்களாக வாழத் தொடங்கினார்கள்.
நாட்டு நலனிலேயே முழு நேரத்தையும் செலவழித்த மீனாவின் கல்யாணம் பற்றிச் செல்வன் சிந்தித்தான். பொதுநலத் தொண்டில் இருக்கிற ஈடுபாடு, சுகம் வேறெதிலும் பெற முடியாது என்பதில் மீனா உறுதியாக இருந்தாள். கல்யாணம் செய்துகொண்டு கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழும் வாழ்க்கை அவளுக்குப் பிடிக்கவில்லை. அன்னை தெரசா கல்யாணம் செய்து கொள்ளாமல், குழந்தை பெற்றுக்கொள்ளாமல் அனைத்து நாட்டு மக்களும் அன்னை என்று போற்றும் அளவில் வாழ்ந்த வாழ்க்கையே பெரிதென்று கருதினாள். மீனாவின் லட்சிய வாழ்க்கையில் செல்வன் குறுக்கிட விரும்பவில்லை.
நாடு நல்லதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் அதன் குறுக்கே அணை போட்டு தடுத்து நிறுத்த செல்வன் நினைக்கவில்லை. அரசு ஒதுக்கீடு செய்கின்ற பணத்தில் இடைத் தரகர்கள் புகுந்து தங்கள் சுயநலத்துக்காக பணத்தை சுரண்டிக் கொள்ளாத நிலையும், அமைச்சர்கள் அதிகாரிகளின் நேர்மையான நிர்வாகமும் இருந்தால் நாட்டில் எல்லாத் திட்டங்களுமே வீண் விரயம் இல்லாமல் முழுமையாக நடந்தேறும் என்பது மீனாவின் எண்ணம். லஞ்ச ஊழல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள், சாலைகள் பராமரிப்புப் பணிகள் நல்லவண்ணமாக நடந்தேறிக்கொண்டிருந்தன. கண்ட இடத்தில் குப்பைகளைப் போடுகின்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. அதனால் ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் தெருக்கள், சாலைகளில் குப்பைகளைக் காணமுடியவில்லை. எல்லா இடங்களும் பரிசுத்தமாகவே காட்சியளித்தன. குடிநீர் வசதிகள், மின்விளக்கு வசதிகள் எல்லாம் ஆரோக்கியமாக இருந்தன.
இருட்டு என்பதே இல்லாமல் எல்லா இடங்களும் ஒளிவீசி வெள்ளமாகத் தோன்றின. நம் நாட்டில் எதையும் கண்டு கொள்ளாமல், பொருட்படுத்தாமல் விடிந்து 8 மணி ஆகியும் தெருவிளக்குகள் அணைக்கப்படாமல் வீணாக்கப்படும் போக்குகள் மாற்றப்பட்டன. சிக்கனம், சேமிப்பு என்பதே தாரகமந்திரமாக ஒலித்தது. விலைவாசி ஏற்றம் கட்டுப்படுத்தப் பட்டது. பற்றாக்குறை யில்லாமல், வறுமையில் தவிக்கும் மக்களுக்கும் தரமான கல்வி, நல்ல சம்பளம் வழக்கப்பட்டதால் எதிலும் தாராளமயம் என்ற நிலை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருந்தது.
செல்வன் இந்த நாட்டை எப்படிக் காணவேண்டும் என்று நினைத்தானோ அந்தக் கனவு நிறைவேறிக் கொண்டிருந்தது. காலம் பத்திரிகை முதல்தர நடுநிலை நாளேடாக மக்கள் மத்தியில் வலம் வந்தது.
நாட்டின் பொறுப்பை மீனாவிடம் ஒப்படைத்த செல்வன் குடும்பத்தில் செய்யவேண்டிய கடமைகளில் தலையிட்டான். முரளியின் பிள்ளைகள் சிரஞ்சீவி, அம்சவேணி இருவரும் அரசியல் செல்வாக்கு இல்லாமலே நன்றாகப் படித்துத் தேறி அரசாங்க உத்தியோகங்களில் அமர்ந்தார்கள்.
செல்வனின் மகள் மகிழ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். அதே கல்லூரியில் ரோசியின் மகன் பாரதியும் படித்துக் கொண்டிருந்தான். பாரதி ஓவியம் வரைவதிலும் பாடுவதிலும் கைதேர்ந்தவனாக இருந்தான். மகிழ் நடனம், பாட்டு, வயலின் வாசிப்பது போன்ற கலைகளில் கைதேர்ந்தவளாக இருந்தாள். கல்லூரியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் இருவரின் பங்களிப்பும் முதலிடத்தில் இருந்தது.
ஒரு விழாவில் பாரதி இசைக்கருவி குழுவுடன் பாட
அந்தப் பாட்டுக்கு மகிழ் நடனமாட விழா மிகவும் களைகட்டியது. விழாவுக்கு அழைக்கப்பட்ட சினிமாத்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் இருவரின் பங்களிப்பையும் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார்கள். தயாரிப்பாளர் ஒருவர் தான் தயாரிக்க இருக்கும் படத்தில் இருவரும் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டார்.
உடனே மகிழ் மனத்தில் பட்டதை அப்படியே வெளிப்படையாகக் கொட்டிவிட்டாள். “எங்கள் அப்பா
டி. வியில் பத்மினி அம்மாவின் நடன நளினங்களைப் பார்த்து மெய் மறந்து ரசிப்பார். பத்மினி அம்மாவின் நடனம் ஆடும் கால்களை டி.வியில் தொட்டு வணங்குவார். டி. எம். எஸ்., சுசிலா அம்மாவின் பாடல்களைக் கேட்டு கண்ணீர் விடுவார். சிவாஜி, எம் ஜி ஆர் போன்றவர்களைப் போற்றிப் புகழ்வார். இசையமைப்பாளர்கள் கே.வி. மகாதேவன், எம். எஸ். வி, இளையராஜா இவங்களையெல்லாம் பாராட்டுவார். ஆனால் இப்போது சினிமாவில் ஆடும் சில ஆட்டங்களைப் பார்த்து முகம் சுளிப்பார். அதனால் அப்பா அனுமதிக்கமாட்டார் என்று பட்டென்று பதில் சொல்லிவிட்டாள்.
பாரதியைப் பின்னணிப் பாடகராக அறிமுகம் செய்தார். பாடல் சிறப்பாக அமைந்ததால் மேலும் மேலும் வாய்ப்புகள் வந்து குவிந்தன. வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கப் பட்டான். இரண்டு வருடங்களில் மிகவும் பிரபலமாகி விட்டான்.
மகிழின் மனத்தில் பாரதி மானசீக நாயகனாக வளர்ந்துவந்தான். பாரதி தன் உள்ளத்தில் மகிழை உயிரோவியமாக வரைந்துகொண்டிருந்தான். அந்த ஓவியத்தை காகிதத்தில் வண்ணம் தீட்டிப் படங்களாக்கி ரகசியமாக ஒரு ஆல்பம் போட்டு வைத்திருந்தான்.
அந்த ஆல்பம் ரோசியின் கண்களில் பட்டுவிட்டது. எடுத்துப் பார்த்தாள். மகிழ் பல பரிமாணங்களில் நடன நளினங்களில் படங்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாள்.
ஏற்கெனவே இரு குடும்பத்துக்கும் இடையே போக்குவரத்து, ஸெல்போன் தொடர்பு நெருக்கமாக இருந்ததால், மகிழ் தனது மகனின் உள்ளத்தில் பதிந்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டாள்.
தனது முன்னாள் காதலனின் மகள் தனக்கு மருமகள் ஆவதா? அது ஏற்றுக்கொள்ளத் தக்கதா? என்று பலவாறு போராடினாள். அந்தப் போராட்டம் பலநாள் தனது தூக்கத்தைக் கெடுத்தது.
(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *