பதபதைக்க வைக்கும் சிறுமியின் கொலை
1 min read
Murder of a regressive little girl at Tiruvennainallur
20-5-2020
சமூகத்தில் அவ்வப்போது ஜீரணிக்க முடியாத கொடுமைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. காலங்கள் மாறினாலும் அந்த காயங்கள் இந்த பூமியைவிட்டு மறையப்போதுவது இல்லை.
அப்படியொரு கொடுமை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தில் நடந்துள்ளது.
தந்தையுடனான பிரச்சினையில் மகளை இப்படி பழிவாங்கியது கொடூரத்திலும் கொடூரம்.
அந்த கிராமத்தில் நடந்த ஒரு மோதலில் ஜெயபாலன் என்பவரின் தம்பி குமார் என்பவரை கையை அதே ஊரைச் சேர்ந்த முருகையன், கலியபெருமாள் ஆகியோர் வெட்டியதாக கூறப்படுகிறது. 2013-ம் ஆண்டு நடந்த இந்த சம்பத்தில் இருந்து அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது.
ஜெயபால் அந்த ஊரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அந்த கடையில் அவரது மகள் ஜெயஸ்ரீ இருந்துள்ளார். (இவள் பத்தாம் வகுப்பு படித்து வந்தாள்) அப்போது முருகையனும், கலியபெருமாளும் அந்த கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் ஜெயஸ்ரீயின் கை-கால்களை கட்டி வாயை துணியால் பொத்தி அவள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். மேலும் கடையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு ஓடிவிட்டனர்.
அக்கம்பக்கத்தினர் வந்து கடையை உடைத்து சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிக்சை அளித்தும் பலனில்லாமல் ஜெயஸ்ரீ பரிதாபமாக இறந்து போனார்.
சிறுமி சாகும் முன்பு துடிதுடிக்க போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலம் அனைவரையும் கண்ணீர் சிந்த வைக்கும். இந்த வாக்குமூலம் வலைதளங்களிலும் பரவி வருகிறது.
இந்தக் கொலையை செய்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. முருகயைன் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். கலியபெருமாள் அ.தி.மு.க. கிளை செயலாளர்.
தனிப்பட்ட தகராறில் நடந்த இந்தக் கொலைக்கும் அரசியல் கட்சிக்கும் தொடர்பு படுத்தக்கூடாது. அப்படி தொடர்பு படுத்தவும் விரும்பவில்லை. ஆனால் இந்தக் கொலையை செய்தவர்கள் நாலும் தெரிந்தவர்கள் என்பதற்காக இங்கே குறிப்பிடுகிறோம்.
அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணயும் நடந்து வருகிறது.
தந்தையை பழிவாங்க நினைத்து மகளை கொடூரமான முறையில் கொன்றதை மன்னிக்க முடியாது.
டெல்லியில் நடந்த நிர்பயா கொலை மற்றும் ஐதராபாத்தில் நடந்த கால்நடை பெண் டாக்டர் கொலை சம்பவங்கள் போல் ஜெயஸ்ரீயின் கொலை மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டம். சில அரசியல் கட்சியினர் இதற்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. வடமாநிலங்களில் நடக்கு வன்முறைக்கு கொதித்தெழுந்து அறிக்கை விடும் நம் ஊர் அரசியல்வாதிககள் ஏன் மவுனமாக இருக்கிறார்கள்?
டெல்லி சம்பவமும் ஐதராபாத் சம்பவமும் பாலியல் வன்கொடுமைசெய்து கொன்றுள்ளனர். ஆனால் அந்த கொடூரத்திற்கு ஜெயஸ்ரீக்கு நடந்த கொடூரம் கொஞ்சம் குறைந்தது அல்ல. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடைக்குள் வைத்து துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவமும், அவள் மரண வலியுடனே கொடுத்த வாக்குமூலமும் செஞ்சை பதபதைக்க வைக்கிறது.
ஐதராபாத் கொடூரத்திற்கு காரணமான 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர். நிர்பயா குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றியாகிவிட்டது.
ஜெயஸ்ரீ கொலைக்கும் தகுந்த தண்டனையை வழங்க துரிதமான வழக்கு நடைபெற வேண்டும்.
அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைதான் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் தடுக்க உதவியாக இருக்கும்.