June 18, 2024

Seithi Saral

Tamil News Channel

காசருமை – சிறுகதை- எழுதியவர் முத்துமணி

1 min read

Kasarumai – Short story By Muthumani

15-5-2020

“காயலான் கடைக்குப் போக வேண்டியதெல்லாம் ஒர்க் ஷாப்புக்கு வந்து உயிர வாங்குது மூணு நாளா. பேங்க்ல வேலை பார்க்கிறாராம் லோன் கீன் போட்டு வண்டிய மாற்ற வேண்டியதுதானே”

ஸ்கூட்டரை சரி செய்ய முயன்று கொண்டு நெற்றியில் வடிந்த வியர்வையை துடைத்து உதறியபடி தன் அசிஸ்டன்ட்டிடம் புலம்பிக் கொண்டிருந்த புல்லட் கிங் என்ற மெக்கானிக் அந்தோணியை “அப்பா” என்ற பயம் கலந்த குரல் சட்டென்று திரும்பிப் பார்க்கச் செய்தது.

 ” என்னடா?”

தலையைச் சொறிந்தபடி நின்றுகொண்டிருந்த அவன் அந்தோணியின் ஐந்து வயது மகன்,  “சித்தி, சித்தப்பா, தங்கச்சி சீலா எல்லாரும் வந்து இருக்காங்கப்பா. மட்டன் வாங்கிக் குழம்பு வைக்கணுமாம். அம்மா 150 ரூபா வாங்கிட்டு வரச் சொல்லிச்சு”

கையிலிருந்த ஸ்பேனரை ஓங்கிய படி பேசினான் அந்தோணி . “காசு என்ன இங்க கொட்டியா கிடக்கு? அள்ளிட்டுப் போறதுக்கு? உங்க அம்மாவை வந்து ஒரு நாளைக்கு சுத்தியலைப் பிடித்துப் பார்க்கச் சொல்லு. காசு அருமை தெரியும். மட்டனும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம். இருக்கிறத வச்சு சமாளித்து போட்டு அனுப்ப சொல்லு”

ஏமாற்றம்…  மீண்டும் கேட்க பயம்…  ஏதும் பேசாமல் பையன் திரும்பி நடக்கத் தொடங்கினான்.

“டேய் குட்டி பதினாலாம் நம்பர் ரிங் ஸ்பானர் எடு” தென் அசிஸ்டன்ட் குட்டியை அதட்டலாக ஆணையிட்டுக் கொண்டே வண்டியை அங்குமிங்கும் திருப்பி ஏதோ செய்தான் அந்தோணி.

“கர்த்தரே” என்று வாய்விட்டு சொன்ன இப்படியே கடைசி முயற்சியாக ஓங்கி ஒரு மிதி மிதித்தான். மூன்று நாட்களாக முக்காமல் முனகாமல் கம்மென்று இருந்த அந்த ஸ்கூட்டர் மௌன விரதத்தை கலைத்து “டப் டப் டப்” என்று ஓடத்தொடங்கியது.

 அப்பா என்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட அந்தோணியை “என்ன அந்தோணி வண்டி ரெடி ஆயிடுச்சா !மூணு நாளா அலைகிறேன்” என்ற குரல் நிமிர்ந்து பார்க்க செய்தது- வந்தவர் வண்டியின் ஓனர் தான்.

  “சார் காலாகாலத்துல வண்டியை மாத்துங்க ,இல்லாட்டி இங்க கொண்டு வராதீங்க… வேற வேலையே பார்க்க முடியல. நானும் பலதடவ சொல்கிறேன் கேட்கவே மாட்டேங்கறீங்க.” என்று அலுப்புடன் சொன்னான்.

“உங்க கை பட்டா என்ஜின் இல்லாத வண்டியும் ஓடும் அந்தோணி”.

-அவர் வைத்த ஐஸில் கொஞ்சம் கரைந்து தான் போனான் அந்தோணி.

இருநூறு ரூபாய் கைமாறியது.

   வண்டியில் ஏறி ஜம்மென்று அவர் செல்வதை ப்பார்த்துத் தன் தொழில் திறமையை நினைத்து பெருமிதத்தோடு சட்டைக் காலரை இழுத்து மேலே விட்டபடி

“டேய் குட்டி இந்தா சிக்கன் பிரியாணி ஒன்னு ஒரு குவாட்டர் அப்படியே ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிட்டு ஓடியா… உடம்பெல்லாம் ஒரே வலி..” என்றான். இருநூறு ரூபாயோடு கடைக்கு ஓடினான் அந்தச் சின்னப் பையன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.