நம்பிக்கை இல்லா பக்தி – முத்துமணி
1 min read
Devotion without faith wote By Muthumani
29-5-2020
இந்த கலியுகத்தில் கடவுள் நேரில் வரமாட்டார் என்று குற்றம் சொல்லும் மானிடர்களிடம் கடவுள் மீது நாம் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோமா என்று கேட்டால் பதில் கேள்விக்குறிதான். இதை சில கதைகள் மூலம் எளிதாக விளக்கினால் புரியும்.
தீவிர பக்தியும் கடவுள் நம்பிக்கையும் உடைய ஒருவன் மரத்தின் மீது ஏறினான். ஒரு கொம்பில் ஏறி மாங்காயைப் பறிக்கும் நேரத்தில் அந்தக் கிளை ‘மடமட’ என முறியத் தொடங்கியது.
கிளையிலிருந்து உருண்டு கீழ்நோக்கித் தொங்கும் போது கிளையின் நுனியைப் பிடித்துக் கொண்டான். அந்தக் கிளையே விரைவில் மரத்திலிருந்து அறுந்து கீழே விழுந்துவிடும் நிலையில் இருந்தது.
பயத்தில் கீழே பார்த்தான். எப்படியும் 15 அடி இருக்கும். அந்த இடத்தில் பெரிய பள்ளம் வேறு. குதித்தாலும் ஆபத்து மரம் உடைந்து விழுந்தாலும் ஆபத்து. இப்போது ஒரு கையை மரக் கிளையில் இருந்து எடுத்து வானை நோக்கி நீட்டி “கடவுளே என்னை காப்பாற்று” என்று சத்தமிட்டான்.
இப்போது வானத்திலிருந்து ஒரு பதில் குரல் வந்தது. “மகனே நான் தான் கடவுள் பேசுகிறேன் .மரத்தைப் பிடித்து இருக்கிற உன் இடது கையையும் விட்டுவிடு. உன்னை நான் காப்பாற்றுகிறேன்.”
உடனே அவன் சொன்னான் “ஐயோ! தயவு செய்து வேறு யாராவது என்னை காப்பாற்றுங்கள்.”
இவனைப்போல் கடவுளை முழுமையாக நம்பாத மனிதர்கள் உண்டு. சிலர் இப்படியும் இருப்பார்கள்…
கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் மிகுந்த கடவுள் நம்பிக்கை உடைய அவனது நண்பனை அடிக்கடி கேலி செய்வான்.
ஒரு நாள் இருவருக்கும் வாக்குவாதம் நீண்டுகொண்டே போக பேசிக்கொண்டே ஒரு சிறு குன்றின் உச்சிக்கு வந்து விட்டார்கள்.
“இப்போது நான் இங்கிருந்து உன்னைக் கீழே தள்ளி விடுகிறேன். உன் கடவுள் வந்து உன்னை காப்பாற்றுகிறாரா? என்பதைப் பார்த்துவிடலாம்” என்றான்.
இதைக் கேட்டவுடன் ஒரு சிறு பயத்தை உணர்ந்தவன், சமாளித்துக்கொண்டு, “கண்களை மூடிக் கொள்கிறேன். நீ என்னை தள்ளி விடு” என்று கூறினான். தோள்களைப் பிடித்து அவன் தள்ளி விட்டபோது, “கடவுளே நீ இருந்தால் என்னைக் காப்பாற்று” என்று சொல்லிக்கொண்டே கீழே விழுந்தான்.
விழுந்த இடம் ஒரு நீர்நிலை. அதனால் உயிருக்கு ஆபத்து இல்லாமல் நீந்தி கரைக்கு வந்து விட்டான். வந்த பிறகுதான் இடது கை சிறுவர்களில் சுருக்கென்று ஒரு வலி உணர்ந்தான். என்னவென்று தொட்டுப் பார்த்தான் . சுண்டுவிரல் அங்கில்லை.
“உன்னை நம்பித்தானே விழுந்தேன். என் நம்பிக்கை வீணாய்ப் போனது. சுண்டு விரலை எடுத்துக் கொண்டாயே” என்று இறைவன் மீது வருத்தப் பட்டான்.
இப்போது இறைவன் மீண்டும் பேசினான்.
“உன் நம்பிக்கையில் சிறு விரல் அளவு குறைபாடு கண்டேன். அவன் உன்னை தள்ளி விடும் போது இறைவா காப்பாற்று என்று சொல்லாமல், நீ இருந்தால் காப்பாற்று என்று சொன்னாயே அதற்கு என்ன பொருள்? உனக்குள்ளே ஒரு சந்தேகம் இருக்கிறது நான் இருக்கிறேனா இல்லையா என்று, அதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உன் சந்தேகத்தின் அளவிற்கு உனக்கு தண்டனையை கொடுத்துள்ளேன்”
-இப்படி அரைகுரை நம்பிக்கையுடன் உள்ள பக்தர்களும் உண்டு.
இன்னொன்றை இங்கே பாருங்கள்…
குருநாதரும் அவருடைய பிரதம சீடனும் காட்டு வழியாக நடந்து கொண்டிருந்தார்கள். குருவைக் கடவுளுக்கு நிகராக மதிக்கும் பண்பு உள்ளவன் அந்தச்சீடன். அவர் அடியொற்றியே பயபக்தியோடு கைகட்டி வாய் பொத்தி பின் சென்றுகொண்டிருந்தான்.
காட்டாறு குறுக்கிட்டது.சீடன் முந்திச் சென்று ஆற்றங்கரையில் நின்றவாறு கைகளை உயர்த்தி வணங்கி “குரு வாழ்க குரு சீர்பாதம் வாழ்க குருவே போற்றி “என்று சொல்லி ஆற்றில் இறங்கினான். ஆழமான ஆறு அவனை ஒன்றும் செய்யவில்லை ஆற்றுநீரில் தரையில் நடப்பதைப் போலவே நடந்து அக்கரையை அடைந்து விட்டான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த குரு நாதர், “ஆகா எனக்கு இவ்வளவு மகிமையா? இத்தனை ஆற்றலா எனக்குள் இருக்கிறது. என்னுடைய பெயரை போற்றிச் சொல்லி என் சீடன் ஆற்றில் இறங்கி ஆபத்தில்லாமல் அக்கரையை அடைந்து விட்டான்” என்று நினைத்தார். அவருடைய பெயரை அவரே சொல்லி “நானே வாழ்க என் சீர் பாதமே போற்றி” என்று சொல்லி ஆற்றில் இறங்கினார்.
அலறிக்கொண்டு ஆற்றோடு போய் விட்டார்.
இந்தக் கதையில் குருவை தெய்வமாக மதித்து அதை முழுமைாயாக நம்பிய சீடன் பிழைத்தான். ஆனால் தன்னை தெய்வத்திற்கு ஈடாக கருதிய குரு போய் சேர்ந்துவிட்டார்.
நம்பிக்கையை சோதித்து பார்க்க கூடாது என்பதற்கு இதோ ஒரு புராணக்கதை….
இலங்கையிலிருந்து ஒருவன் கடலை கடந்து செல்ல வேண்டிய நிலை. அனுப்பி வைத்தவன் வீடணன். மன்னன் ஆணை மறுக்க முடியாமல் கடலில் எப்படி நடப்பது என்று தவித்தான் அவன்.
அப்போது வீடணன் நீ அணிந்திருக்கும் ஆடையின் ஒரு நுனியை கொடு என்று அதனைப்பற்றி அதற்குள் எதையோ எழுதி வைத்து பின் அது தெரியாமல் ஒரு முடிச்சு போட்டு அவன் கையில் கொடுத்து இதை பிடித்துக்கொண்டே போ. இடையில் முடிச்சை பிரித்துப் பார்க்காதே என்று தைரியப்படுத்தி அனுப்பிவிட்டான்.
அவ்வாறு கடலில் இறங்கி நடந்து கொண்டே இருந்தான். என்ன ஆச்சரியம் கடல் அவன் நடந்து செல்ல இடம் கொடுத்து கொண்டே இருந்தது. இவ்வாறு நடுக்கடல் வரை வந்துவிட்ட அவனுக்குத் தண்ணீர் தன்னைத் தாங்கிச் செல்லும் அளவிற்கு அதில் என்ன எழுதி இருப்பார் மன்னர்? அதைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
உடனடியாக ஆடையின் முடிச்சை அவிழ்த்து உள்ளே பார்த்தான் அங்கே “ராமா” என்று எழுதி இருந்தது. ஆகா ராமனின் திருப்பெயர் தான் நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தான். நினைத்த அளவில் கடலுக்குள் மூழ்கிப் போனான்.
நம்பிக்கையை சோதித்து பார்க்க நினைத்தான். அது பயனற்ற போனது.