யாருக்காக பாண்டவர்கள் பக்கம் நின்றான் கண்ணன்?
1 min readWhy did Krishna defend on the Pandavas?
-முத்துமணி
பதினெட்டு நாட்கள் குருச்சேத்திரம் நடைபெற்று முடிந்து பாண்டவர்கள் உரிமையுள்ள பங்கைப் பெற்று முடித்த நேரம். தருமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலியும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். போரில் தங்களுடைய மாபெரும்வெற்றிக்குக் காரணம் ஸ்ரீ கிருஷ்ணன் தான் என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தங்கள் அறுவருள் யாருக்காக கிருஷ்ண பரமாத்மா இவற்றையெல்லாம் செய்தார்? என்ற வாக்குவாதம் உண்டானது.
தருமன் சொன்னான் “நான் தானே மூத்தவன்? தர்மத்தின் வழி நடப்பவன் நான் தானே? என்னைக் காக்கத்தான் ஸ்ரீ கிருஷ்ணன் துணை நின்றார்.
“நான்தான் அவருக்கு மைத்துனன். தங்கையின் கணவனான என்னைக் காக்கத்தான் என் மைத்துனன் வந்தார்” என்று அர்ஜுனன் சொன்னான்.
நகுலன் அதிகம் பேசாமல் “இளையவன் என்ற காரணத்தால் என்னுடைய நல்ல குணம் காரணமாக என்னைக் காக்க வந்தான்” என்றான்.
“நான் சகல சாஸ்திரங்களையும் கற்றவன். ஸ்ரீ கிருஷ்ணனும் அதைப்போன்று கற்றுத் தெளிந்தவர். ஆகையால் இனம் இனத்தோடு சேரும் என்பதால் எனக்காக தான் வந்தான்” என்று சொன்னான் சகாதேவன்.
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பாஞ்சாலி “எல்லோரும் என்னை மறந்து விட்டீர்கள். என் சபதத்தை முடிக்கவும் நான் மீண்டும் குழல் முடிக்கவும் ,பெண்ணின் துயரத்தைத் துடைக்கவும் கண்ணன் வந்தான்” என்று கூறினாள்.
சரி அப்படியானால் இப்போது ஒவ்வொருவராக கிருஷ்ணனை அழைப்போம் யார் அழைக்கும்போது அவன் வருகிறான் என்று பார்த்து விடுவோம் என்று முடிவு செய்தார்கள்.
ஒவ்வொருவராக ஸ்ரீ கிருஷ்ண நாமத்தை உச்சரித்து வா என்று கூவி அழைத்தார்கள். எந்தப் பயனும் இல்லை. அவர் வரவே இல்லை. அப்போது வெளியே போயிருந்த பீமன் தற்செயலாக வந்தான். என்ன நடக்கிறது? என்பதைக் கேட்டு தெரிந்து கொண்டவன், ஒன்றும் பேசாமல் தன் கையிலிருந்த கதாயுதத்தை வானத்தை நோக்கி தூக்கி வீசினான். மேலே சென்ற கதை விசையோடு கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது. அது எங்கே விழுந்தாலும் அந்த இடம் சுக்குநூறாய் ஆகிவிடும். கதை வரும் இடம் நோக்கி தன் தலையை வேகமாக நீட்டியபடியே “கிருஷ்ணா அபயம்”என்று கூறினான் பீமன்.
திடீரென்று தோன்றிய கிருஷ்ணன் தன் கையால் கதையை தாங்கிப் பிடித்துக் கொண்டு “என்ன பீமா சாகத் துணிந்து விட்டாயா?” என்று கேட்டான். “இப்போது எல்லோருக்கும் புரிகிறதா? கிருஷ்ணன் எப்போது, யார் அழைத்தால் வருவான் என்று. இந்த உலகில் யார் துன்பத்தில் இருக்கும்போது அழைத்தாலும் அவர்களை காக்க வருவான். நாம் அப்போது துன்பத்தில் இருந்தோம் அழைத்தோம் வந்து காத்தான்”. என்று கூறினான் பீமன்.
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் பாரதத்தில் கண்ணன். கேட்டவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்.