கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு; 3 கட்ட தளர்வுகளும் அறிவிப்பு
1 min readCorona Curfew extended by one month; 3 phase relaxation announcement
29-5-2020
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 கட்ட தளர்வுகளும் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன.
கொரோன ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பல மாநிலங்ளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துதான் வருகிறது. இதனால் 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது அமலில் உள்ள 4-வது கட்ட ஊரடங்கு மே 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 4-வது கட்ட ஊரடங்கில் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு சிற்சில தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
கொரோனாவை முழுமையாக இன்னும் கட்டுப்படுத்தாததால் மத்திய அரசு மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை நீட்டித்து உள்ளது.
இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு “அன்லாக் 1. 0” என்ற பெயரில் சில புதிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது.
அதில் மூன்று கட்டங்களாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை
நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை நீட்டித்தும், மற்ற பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் போது அவசர அத்தியவாசிய தேவைகளை தவிர இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது.
முதல்கட்ட தளர்வாக ஜூன் மாதம் 8 -ந் தேதி முதல் ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்படும்.
இரண்டாம் கட்ட தளர்வாக பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.
மூன்றாம் கட்ட தளர்வில் சினிமா, பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், மெட்ரோ ரெயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியன திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே நேரம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை எந்த தளர்வுகளும் கிடையாது. பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது.